நேபாளம் வெள்ளப் பெருக்கின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள்...!

நேபாளப் பேரழிவில் வியக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய மனிதர்களின் நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவங்கள்.
நேபாள பெருவெள்ளம் | Nepal flood survivor
நேபாள பெருவெள்ளம் | Nepal flood survivorImage credit: Chatgpt
Updated on

திபெத்தின் வெண்டே நதியில் உருவான வெள்ளம் நேபாளத்தை தாக்கியபோது, தேநீர் குடிக்க இடைவேளை எடுத்ததால் ஐந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிர் தப்பினர். அதே நேரத்தில், திரிசூலி பள்ளத்தாக்கில் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி அவசர எச்சரிக்கை மூலம் 1,643 மாணவர்களை பாதுகாப்பாக மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அடையாளம் தெரியாத நபரின் எச்சரிக்கையால் மற்றொரு பள்ளியில் 370 குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர்.

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன. இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நிகழ்ந்தது அவற்றின் சில இந்த பதிவில்...

நேபாளம் நுவாகோட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதிலும் ஒரு அதிசய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வெள்ளத்தில் மற்ற அனைத்துக்கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பச்சை நிறம் பூசப்பட்ட ஒரு வீடு மட்டும் சீறிப்பாய்ந்த சேற்று வெள்ளத்துக்கு நடுவே அசைக்க முடியாமல் நின்ற காட்சி இணையத்தில் தீயாகப் பரவியது.

வெள்ளத்தின் வேகம் சுற்றியிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கி அடித்துச் சென்ற போதிலும், அந்தப் பச்சை நிற வீடு மட்டும் வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கி உறுதியுடன் நின்றது. நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் உள்ள நுவாகோட்டில் ( Nuwakot) அந்த வீட்டுக்குள் ஒரு குடும்பமே சிக்கியிருந்தது தெரியவந்ததையடுத்து, பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேபாள பெருவெள்ளம்: 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர்:

திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்த நேரத்தில். தேநீர் குடிக்கச் சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பிய சம்பவம் பேசு பொருளாக மாறியது.

இதையும் படியுங்கள்:
பாம்புகள் கால்களை இழந்தது ஏன்? பரிணாம வளர்ச்சியின் மர்மங்கள்!
நேபாள பெருவெள்ளம் | Nepal flood survivor

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர், நேபாளத்துக்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர். நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 5-வது நாளில் தாடிங் என்ற மாவட்டத்தில் காலை 10 மணியளவில் ஒரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.

இந்த நிலையில்தான், நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்நாட்டையே உருக்குலைத்தது. விடுதிக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதையும் இவர்கள் பார்த்துள்ளனர்.

அதிருஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் தேநீர் இடைவெளி எடுத்துக் கொண்டதால் உயிர் தப்பியதாகக் கூறினர். 5 - 10 நிமிடங்கள் முன்சென்றிருந்தாலோ விரைவாகக் கிளம்பியிருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும். அவர்கள் 5 பேரும் இரு நாள்களாக அவர்கள் சென்ற வாகனத்திலேயே உறங்கியும், அந்த இரு நாள்களில் வெள்ளத்தின் கோர தாண்டவத்தையும் மேலிருந்து பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நேபாள பெருவெள்ளம்: - 1,643 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்:

நேபாள - திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ள நேரத்தில் பதட்டமடையால், நிதானமாக செயல்பட்டு 1,643 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நேபாள பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு ஆகஸ்ட் 26 காலை 9:20 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் வெள்ளம் தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கு தொடர்பாக அவருக்கு தகவல் கிடைத்தப்போது பள்ளியில் 900 குழந்தைகள் இருந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிப் பேருந்துகளிலும், நடந்தும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

நேபாள பெருவெள்ளம் | Nepal flood survivor
நேபாள பெருவெள்ளம் | Nepal flood survivorImage credit: Gemini AI

தனக்குக் கிடைத்த 10 நிமிட இடைவெளியில், உடனடியாகப் பள்ளியின் அவசர எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போன் செய்து, “இங்கு வராதீர்கள், பேருந்தை அப்படியே உயரமான பகுதிக்குத் திருப்புங்கள். வரும் வழியில் பாலங்கள் இருந்தால் அதைக் கடக்க வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளார். பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் தப்பி மலைப்பகுதிகளுக்கு சென்றனர். பயத்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் ஃபிக்ஸ் வந்துள்ளது.

அக்குழந்தை மட்டும் இருசக்கர வாகனம் மூலம் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இறுதியாக வெள்ளம் பள்ளிக் கட்டிடங்களை அடித்துச் சென்றபோது, குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மலை உச்சியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்தனர்.

நேபாள பெருவெள்ளம்: அடையாளம் தெரியாத நபர் கொடுத்த எச்சரிக்கையால் காப்பாற்றப்பட்ட 370 குழந்தைகள்..:

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது, அடையாளம் தெரியாத ஒரு நபர் பள்ளிக்கு வெளியே வேகமாக ஓடிவந்து எச்சரித்ததால் 370 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நம்பவே முடியாத அமேசான் காடுகளின் திகிலூட்டும் மர்மங்கள்!
நேபாள பெருவெள்ளம் | Nepal flood survivor

நேபாளத்தில் உள்ள நுவாகோட் (Nuwakot) பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்குள்ள பெட்ராவதி என்ற இடத்தில் 'உத்தரகாயா பப்ளிக் பள்ளி' (Uttargaya Public School) இயங்கி வந்தது. பள்ளி நடந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளியைக் கடந்து மிக வேகமாக ஓடினார். அவ்வாறு ஓடும்போதே, "பெரிய வெள்ளம் வருகிறது, ஓடுங்கள்... தண்ணீர் வருகிறது..." என்று சத்தமாக கத்திக் கொண்டே சென்றார்.

இந்த எச்சரிக்கையைக் கேட்டவுடன், உஷாரான ஆசிரியர்கள் உடனடியாகச் செயல்பட்டு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியேற்றினர். அடுத்த சில நிமிடங்களில் பள்ளியை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கிருந்த 370-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் பின்புறம் இருந்த மலைப் பகுதிக்கு ஓடி உயிர் தப்பினர்.

இயற்கைச் சீற்றங்களின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில் மனித மனங்களின் விழிப்புணர்வும், அதிர்ஷ்டமும் எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, எந்தச் சூழலிலும் நிதானத்தை இழக்காமல் செயல்படும் மன உறுதியைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com