4000 மீட்டர் ஆழத்தில் சிக்கிய ஏலியன் மீன்... விஞ்ஞானிகளை மிரள வைத்த பசிபிக் கடலின் ரகசியம்!

Whiplash Squid
Whiplash Squid
Published on

கடலின் ஆழம் எப்போதுமே மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத ஒரு மாபெரும் இருண்ட உலகமாகவே இருந்து வருகிறது. விண்வெளியில் நடக்கும் மாற்றங்களை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் நம்மால், கடலுக்கு அடியில் இருக்கும் பல லட்சம் மர்மங்களில் ஒரு சதவீதத்தைக் கூட இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

அந்த வகையில் பசிபிக் பெருங்கடலின் அதல பாதாளத்தில் சத்தமே இல்லாமல் வாழ்ந்து வரும் ஒரு விசித்திரமான புதிய வகை ஸ்குவிட் உயிரினத்தை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். மனிதர்களின் கண்களுக்கே புலப்படாமல் வாழ்ந்து வந்த இந்த  உயிரினம் எப்படிச் செயல்படுகிறது மற்றும் அதன் உயிருக்கு வந்திருக்கும் புதிய சோதனை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

4000 மீட்டர் ஆழத்தில்!

பசிபிக் கடலில் உள்ள ‘கிளாரியன் கிளிப்பர்டன்’ எனப்படும் ஒரு பிரத்யேகமான பகுதியில்தான் இந்த அட்டகாசமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில், கொஞ்சம்கூட சூரிய ஒளியே நுழைய முடியாத கும்மிருட்டில் இந்த புதிய வகை விப்லாஷ் ஸ்குவிட் (Whiplash Squid) இனம் ரொம்பவே கெத்தாக சுற்றித் திரிகிறது. 

எலும்புகளை நொறுக்கும் அளவிலான அதீத நீர் அழுத்தத்திலும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நீந்திச் செல்லும் இந்த உயிரினங்களை, தேசிய கடல்சார் ஆய்வு மைய நிபுணர்கள் தங்களின் அதிநவீன கேமராக்கள் மூலமாகப் பதிவு செய்து உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இது தவிர, மாஸ்டிகோடியுதிடே (Mastigoteuthidae) எனப்படும் வேறு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு புதிய வகை ஸ்குவிட் ஒன்றும் அதே இடத்தில் தென்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்த கூடுதல் போனஸ் ஆகும்.

மிரள வைக்கும் வேட்டைத் தந்திரம்!

இந்த ஸ்குவிட் மீன்களின் மிகப்பெரிய சிறப்பம்சமே அவற்றின் வேட்டையாடும் தந்திரம்தான். கடலின் தரைப்பகுதியில் உள்ள மணல், சேறு மற்றும் பாறைகளோடு தங்களை அப்படியே உருமாற்றிக்கொள்ளும் ‘அக்ரசிவ் மிமிக்ரி’ என்ற ஒரு அபாரமான டெக்னிக்கை இவை பயன்படுத்துகின்றன. தரைப்பகுதியில் இருக்கும் சாதாரண மண் மேடு போலவே தன்னை மாற்றிக்கொண்டு இது அமைதியாகப் பதுங்கியிருக்கும். 

இதையும் படியுங்கள்:
ஆறு மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
Whiplash Squid

அந்த வழியே வரும் சின்னஞ்சிறு மீன்கள் இது கடலின் வெறும் தரைப்பகுதி என நினைத்து அருகில் வரும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து அவற்றை அசால்ட்டாக வேட்டையாடி விடுகிறது. அதே சமயம் பெரிய ஆபத்தான எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் இந்த உருமறைப்பு தந்திரம் இதற்கு ரொம்பவே கைகொடுக்கிறது.

மிகப்பெரிய ஆபத்து!

இவ்வளவு கஷ்டப்பட்டு இயற்கையோடு போராடி வாழும் இந்த அரியவகை உயிரினங்களுக்கு இப்போது நமது மனித இனம் மூலமாக ஒரு மாபெரும் ஆபத்து நெருங்கி வந்துள்ளது. கடலுக்கு அடியில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் விலைமதிப்பற்ற கனிம வளங்களைத் தோண்டி எடுக்கும் ஆழ்கடல் சுரங்கப் பணிகளில் பல உலக நாடுகள் இப்போது அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. 

லாபத்திற்காக ராட்சத இயந்திரங்களை வைத்துக் கடலின் அடித்தளத்தைத் தோண்டும்போது, அந்த அமைதியான சூழல் முற்றிலுமாக நாசமாகிவிடும். நாம் சரியாகப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே இது போன்ற மென்மையான உயிரினங்களின் ஒட்டுமொத்த இருப்பிடமும் அடியோடு அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வணிக வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் ஏன் அவசியம்? எப்படி உதவுகிறது?
Whiplash Squid

வணிக நோக்கத்திற்காகக் கடல் வளங்களைச் கண்மூடித்தனமாகச் சுரண்டுவதற்கு முன்பு, அந்த அமைதியான இருண்ட உலகத்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது நமது மிக முக்கியமான கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com