
விவசாயத்தில் அதிக இலாபம் பெற பயிர் சுழற்சி முறை உதவுகிறது. தொடர்ந்து ஒரே பயிரைப் பயிரிடாமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை விளைவிப்பதே பயிர் சுழற்சி முறை. தற்காலத்தில் ஒருசில விவசாயிகளே இதனைப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த விவசாய நடைமுறையில் புதியதொரு முயற்சியாக நெற்பயிரோடு மீன் வளர்ப்பை மேற்கொள்வது இலாபகரமானதாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் பதிவில் நெற்பயிரோடு மீன் வளர்ப்பு குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
விவசாயத்தில் எப்போதுமே ஒருங்கிணைந்த பண்ணையம் இலாபம் நிறைந்த யுக்தி தான். விவசாயத்தோடு, கால்நடை வளர்ப்பை மேற்கொள்வது கூடுதல் வருமானத்திற்கு வழிவகுக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகளும் கூறுகின்றன. நெற்பயிர் விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் மீன் ஆகியவற்றை வளர்ப்பது குறைந்த செலவில் அதிக இலாபத்தைக் கொடுக்கும். விவசாயக் கழிவுகள் கால்நடைகளுக்குத் தீவனமாகவும், கால்நடைக் கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகவும் பயன்படுவதால் செலவும் குறையும்.
நெற்பயிர் நாற்று நடுதல் முதல் அறுவடை வரையிலான காலகட்டத்திலேயே மீன் வளர்ப்பு மற்றும் அறுவடை முடிந்த பிறகு மழைக்காலத்தில் வயலில் தேங்கும் நீரில் மீன் வளர்ப்பு என ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன. நிலத்தின் சூழலுக்கும், காலநிலைக்கும் ஏற்ப ஒருமுறை விவசாயமும், அடுத்த முறை மீன் வளர்ப்பும் செய்யலாம். இதன் மூலம் நிலத்தையும், நீர்வளத்தையும் முழுமையாக உபயோகம் செய்திட முடியும். பயிர் - மீன் சுழற்சியால் கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, பயிர்களில் பூச்சித் தாக்குதலும் குறையும்.
மீன்கள் நிலத்தை கிளறி, கழிவுகளை நிலத்தில் இடுவதன் மூலம் பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து எவ்வித செலவும் இன்றி கிடைத்து விடும். பயிர் - மீன் வளர்ப்பிற்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 மாதங்களுக்காவது வயலில் தண்ணீர் தேங்கியிருக்க வேண்டும். இத்தகைய வயல்களின் வரப்புகள் உயரமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டியது அவசியம். மேலும், வயலுடன் இணையும் வகையில் வாய்க்கால்களை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் வயலில் தண்ணீர் இல்லாமல் போகும் சமயங்களில், மீன்கள் வாய்க்கால்கள் வழியாக நீராதாரம் இருக்கின்ற இடத்தை அடைந்து உயிர்ப் பிழைக்கச் கூடும். தண்ணீர்ப் பாய்ச்சும் போது மீன்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வலைகளைப் பொருத்த வேண்டியது அவசியமாகும்.
மேற்கூரிய முறையில் தண்ணீர் தேங்கிய நிலையில், குறைந்த வெப்பத்தைத் தாங்கி வளரும் நீண்ட காலப் பயிர்களையும் விளைவிக்கலாம். நெற்பயிர் அறுவடைக்குப் பிறகு, மீன்களை வளர்க்கும் முறையில் விரல் அளவு அல்லது அதற்கும் மேல் வளர்ந்த மீன் குஞ்சுகளை ஒரு ஹெக்டேருக்கு 2,000 வீதம் விட்டு வளர்க்கலாம். அடுத்த 5 மாதங்களுக்குள் சுமார் 500 கிலோ மீன்கள் கிடைக்கும் என்பதால், வருமானமும் அதிகரிக்கும்.
இம்முறையில் நன்னீர் மீன்களான திலேப்பியா, சாதாக் கெண்டை மற்றும் விரால் ஆகியவற்றையும், நன்னீர் இறால்களையும் வளர்த்தெடுக்கலாம். கூடுதலாக வயலுக்கு அருகிலேயே ஆடு, மாடு, கோழி மற்றும் வாத்து போன்ற கால்நடைகளை வளர்ப்பதன் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.