இயற்கை பசுமைக் காடுகளை, செயற்கை கான்க்ரீட் காடுகள் அதிவேகமாக ஆக்கிரமித்துக் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். நம் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்க்கையை முன்னிறுத்தி வனங்கள் அழிக்கப்படுவதை எதிர்ப்பதா அல்லது இப்போதைய மக்கள் சுக வாழ்க்கைக்காக கானகத்தைத் தியாகம் செய்வதா என்ற குழப்பத்தில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். அதையும் மீறி, நம்வரை வசதியாக வாழ்ந்துகொள்வோம்; அடுத்து வருபவர்களின் வாழ்க்கை அவர்கள் பாடு என்ற சுயநலம்தான் இப்போது மேலோங்கியிருக்கிறது.
இப்படி சுயநலமாக நம் முன்னோர்கள் சிந்தித்திருந்தார்களானால், நாம் இப்போது இந்தக் குறைந்த அளவு ஆக்ஸிஜனைக்கூட சுவாசிக்க முடியாது என்ற உண்மையை நாம் உணரத் தயாராக இல்லை.
அவ்வப்போது சில இயக்கங்கள், மற்றும் தனி நபர்களின் மரம் வளர்ப்பு பற்றிய திடீர் ஞானோதயத்தில் பரபரப்பாக ஒவ்வொருவர் வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும் மரம் வளர்க்கப்படவேண்டும் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் அதைத் தொடர முடியாமல் ஆரம்பித்த சுருக்கிலேயே அந்த உயரிய நோக்கம் நீரில்லா செடி போல வாடி கருகிவிடுகிறது.
பூமியில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக அமைந்திருப்பதாகவும், நூற்றி அறுபது கோடி மக்கள் அந்த வனங்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஓர் அறிக்கை சொல்கிறது. அதுமட்டுமல்ல எத்தனையோ விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகளுக்கும், காடுகளே வாழ்வாதாரம்.
கானகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் நுழைந்துவிடுவதாக இன்று செய்தித்தாள்களில் படிக்கிறோம். இதற்குக் காரணம் நாமேதான். நம் தேவைகளுக்காகக் காட்டிற்குள் சென்று நாம் உரிமை கொண்டாடும்போது, நம் கிராமத்திற்குள் சுதந்திரமாக நுழைவதில் என்ன தவறு என்று சில விலங்குகள் கருதுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
வீட்டைச் சுற்றிலும் மரங்கள் வளர்த்து இயற்கையைப் போற்ற எடுக்கப்படும் சில முயற்சிகளை, பல வீடுகள் அடுக்ககங்களாக மாறி, வீட்டைச் சுற்றி ஐந்தடி அளவுக்குக்கூட மண் நிலத்தை விட்டுவைக்காத சுயநலம் எள்ளி நகையாடுகிறது.
இப்போது மொட்டை மாடியில் தாவரங்களை வளர்க்கும் முயற்சி அதிகரித்து வருகிறது. இந்தத் தாவரங்கள் தங்களுக்குப் பிரதி உதவியாக காய், கனிகளைத் தரக்கூடியதாகவே அமைத்திருப்பது மக்களின் சுயநலத்தைப் பிரதிபலிக்கிறது என்றாலும், ஏதோ மொட்டை மாடியிலாவது கொஞ்சம் பசுமை பூப்பது ஆறுதல் தருகிறது. இப்படி ஒவ்வொரு மாடியிலும் தோட்டங்கள் அமையுமானால், ஒரு மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்து ‘தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமை’ என்ற பழமொழிக்கும் மரியாதை செய்து விடலாம்!
அரசு அமைப்புகள், மற்றும் சில தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படும் நகரின் சில பூங்காக்கள் இன்னமும் எந்த ஆக்கிரமிப்புக்கும் ஆட்படாததைப் பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது. நல்லவேளையாக காலை நடைப்பயிற்சி பல நகரவாசிகளுக்கு அவரவர் மருத்துவரால் கட்டாயப் பழக்கமாக்கப்பட்டிருப்பதால், அவர்களுடைய நடமாட்டத்தால் பல பூங்காக்கள் பிழைத்து கிடக்கின்றன. சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, தியாகராய நகர் நடேசன் பூங்கா, ராயபுரம் மாடி உயர்நிலைப் பூங்கா, பெரம்பூர் மேம்பாலத்தடி பூங்கா, இவை தவிர சில சாலைகளில் தடுப்புப் பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டங்கள் எல்லாம் நகரைக் கொஞ்சமாவது குளுமையாக்குகின்றன.
ஒவ்வொரு வருடமும் முப்பது மில்லியன் ஏக்கர் பரப்புள்ள காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்ற தகவல் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இது, கிட்டத்தட்ட இங்கிலாந்து நாட்டின் பரப்புக்குச் சமம் என்கிறார்கள். பருவ மாற்றங்களில் காடுகள் பெரும் பங்கு வகிப்பதோடு, மனித நாகரிகத்தால் உஷ்ணமாகும் உலக வெம்மையைக் கொஞ்சமாவது தணிக்கின்றன காடுகள். தற்போதைய நாகரிக உலகம் கக்கும் 18 சதவிகித கரியமிலத்தைக் காடுகள் உறிஞ்சிக்கொண்டு, பதிலுக்கு பிராணவாயுவை நமக்கு அளிக்கின்றன.
இதனூடே, இப்போது கலிஃபோர்னிய காடுகள் பற்றி எரிகின்றன, மனிதரின் சொத்துகளை சுவைத்து மகிழ்கின்றன என்பது துயரச் செய்தியே ஆனாலும், இயற்கை பழி வாங்குகிறதோ என்ற அச்சமும் நமக்குள் பரவுகிறது.
ஆகவே, வீட்டிலும், வெளியிலும் அதிக பரப்பில் பசுமையை வளர்த்துப் பாதுகாக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.