
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், இன்று அமெரிக்காவின் 47வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கிறார். தேர்தலில் வென்ற பின் அவர் சொன்ன சில கருத்துகள் இப்போது விவாதப் பொருளாகியுள்ளன. அவர் சொன்னது என்ன?
'கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைய வேண்டும். 1999 வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த பனாமா கால்வாய், மறுபடியும் அமெரிக்காவின் கீழ் வர வேண்டும். க்ரீன்லாண்ட் நாட்டை அமெரிக்கா வாங்க வேண்டும். அதனைக் கையகப்படுத்த, பொருளாதரத் தடை அல்லது தேவைப்பட்டால் இராணுவத்தின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்.'
கனடா - உலகின் நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய நாடு கனடா. கனடாவிற்கும், அமெரிக்காவிற்கும் நடுவில் உள்ள எல்லையின் நீளம் 8891 கிலோமீட்டர். உலகின் பெரிய எல்லை என்பதும், ராணுவம் இல்லாத எல்லை என்பதும் இதன் தனிச் சிறப்பு. ஆனால், இந்த மிக நீளமான எல்லை அமெரிக்கா விசா இல்லாமல் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைவதற்கு ஏதுவாக உள்ளது. அமெரிக்காவின் எரி பொருள் தேவையை கனடா அளிக்கிறது. கனடாவிற்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருளை விட, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருளின் மதிப்பு அதிகம். இரு நாடுகளுக்கான வியாபார பற்றாக்குறை 40.6 பில்லியன் டாலர்கள்.
கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்துவோம் என்கிறார் ட்ரம்ப். சலுகை விலையில் கனடா, அமெரிக்காவிற்கு எரிபொருள் அளிக்கிறது. சுங்க வரி உயர்த்தப்பட்டால், கனடா எரிபொருள் விலையை உயர்த்தும் அபாயம் இருக்கிறது. பெரும்பாலான கனடா நாட்டவர்களுக்கு, தனித்துவத்தை இழந்து அமெரிக்காவுடன் இணைவதில் விருப்பமில்லை. நாட்டோ அமைப்பின் முக்கிய அங்கத்தினரான கனடா, அந்த அமைப்பிற்கு அதிக அளவில் நிதி உதவி செய்யும் நாடுகளில் ஒன்று. கனடாவின் பல அரசியல் தலைவர்கள் அமெரிக்காவுடன் இணைவதற்கு விருப்பமில்லை என்று தெளிவாகப் பதிலளித்துள்ளார்கள்.
க்ரீன்லாண்ட் – ஆர்க்டிக் பகுதியில் உள்ளது இந்த நாடு. டென்மார்க் நாட்டின் தனிப்பகுதியாக க்ரீன்லாண்ட் இருந்து வருகிறது. க்ரீன்லாண்டின் வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, குடியுரிமை, நாணயம், பணவியல் கொள்கை ஆகியவற்றை டென்மார்க் கவனித்துக் கொள்ள, பொருளாதாரம், கட்டமைப்பு, சமூக சேவைகள் ஆகியவற்றின் பொறுப்பை க்ரீன்லாண்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. தன்னாட்சி தங்களுடைய குறிக்கோள் என்று க்ரீன்லாண்ட் சொல்லி வருகிறது. ஆனால், க்ரீன்லாண்டு முழு சுதந்திரம் பெற்றால் அந்த நாடு ரஷ்யா மற்றும் சைனாவின் செல்வாக்கில் சிக்கிக் கொள்ளுமோ, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற தயக்கம் அமெரிக்காவிற்கு இருக்கிறது.
அமெரிக்க அரசு க்ரீன்லாண்டை கையகப்படுத்த 1867, 1910, 1946, 1955 என்று பல முறை முயற்சி செய்திருக்கிறது. ட்ரம்ப் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பணி புரிந்த போது, 2019ஆம் வருடம் க்ரீன்லாண்ட் வாங்குவதைப் பற்றிப் பேசியிருக்கிறார். க்ரீன்லாண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் பனிக்கட்டிகள் கரைந்து வருகின்றன. அந்த இடங்களில் கிடைப்பதற்கு அரிய தாதுப் பொருட்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இவை பேட்டரி தயாரிப்பதற்கு உதவும். பனிக்கட்டிகள் கரைவதால், கப்பல் போக்கு வரத்துக்கு மற்றுமோர் கடல் வழி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கனடா மற்றும் க்ரீன்லாண்ட் உள்ளடக்கிய ஆர்க்டிக் பகுதி 30 சதவிகிதம் வாயு மற்றும் 15 சதவிகிதம் எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது.
க்ரீன்லாண்ட், பாதுகாப்பு மற்றும் சுரங்க வளங்களுக்கு அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. டென்மார்க், க்ரீன்லாண்ட் பற்றி அமெரிக்காவுடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
பனாமா கால்வாய் - பனாமா கால்வாய், அமெரிக்காவால் 1914ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து துவங்கியது. பனாமா கால்வாய் கட்டுவதற்கு முன்னால், கிழக்கு மற்றும் மேற்கு அமெரிக்காவிலிருந்து கப்பல்கள் மேற்கு மட்டும் கிழக்குப் பகுதிக்குச் செல்வதற்கு தென் அமெரிக்காவின் முனையில் இருக்கும் கேப் ஹார்ன் வழியாகச் செல்ல வேண்டும். இதனால், அமெரிக்க கப்பல்கள் பல ஆயிரம் மைல்கள் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பணச் செலவு அதிகமானதுடன் கப்பல் பயணத்திற்குப் பல மாதங்கள் ஆகின. பயண நேரத்தைக் குறைக்க பனாமா வழியாக கால்வாய் அமைப்பது முக்கிய தேவையாகியது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தப் பகுதி கொலம்பியா நாட்டின் பகுதியாக இருந்தது. 1903ஆம் ஆண்டு அமெரிக்க உதவியுடன் நடந்த கலகத்தில் கொலம்பியா, இரண்டாகப் பிரிந்து பனாமா, கொலம்பியா என்று இரு நாடுகள் உருவாயின. அப்போது பனாமா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி பத்து மைல் நிலம் கால்வாய் நிர்மாணிப்பதற்கு அமெரிக்காவிடம் கொடுத்து, அதற்கு நிகரான பணத்தை பனாமா பெற்றுக் கொண்டது. 1914ஆம் வருடம் கால்வாய் பணி முடிவதற்குள், 5600 பணியாளர்கள் உயிரிழந்தார்கள்.
1964ஆம் வருடம் பனாமா நாட்டில் அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ச்சி நடந்தது. அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்டர் பனாமா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி 1977 வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும், பின்னர் கால்வாய் கட்டுப்பாடு அமெரிக்கா மற்றும் பனாமா நாடுகளின் கூட்டு மேற்பார்வையிலும் இருந்து வந்தது. 1999 வருடம் பனாமா கால்வாய், பனாமாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
அமெரிக்க கப்பல்கள் கால்வாயை கடப்பதற்கு பனாமா அரசு விதிக்கும் தொகை அதிகம் என்றும், சைனாவின் ஆதிக்கம் அங்கு அதிகரிப்பதாகவும் ட்ரம்ப் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதை மறுக்கும் பனாமா அரசு, கால்வாயை பயன்படுத்துவதற்கான தொகை எல்லா நாட்டிற்கும் ஒன்றே என்றும், கட்டணத்தில் சலுகை அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். பனாமா கால்வாய் எங்கள் நாட்டின் ஒரு அங்கம், அதை எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்கிறது பனாமா அரசு.