ஆண்டுதோறும் ஜனவரி 20ம் தேதி அன்று சர்வதேச ஏற்றுக்கொள்ளல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது மாற்றுத்திறனாளிகளின் சமூக அங்கீகாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை அரவணைத்துக் கொண்டாடும் எண்ணத்தை ஊக்குவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படும் ஒரு நாள். ஆனால், அவர்களின் உடல் குறைபாடுகளை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கான நாள் அல்ல இது. இந்த நாள் இரக்கம், கருணை மற்றும் சமத்துவமான உலகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச ஏற்றுக்கொள்ளும் நாள் என்பது உடல் குறைபாடுகளை மட்டும் ஏற்றுக்கொள்வதைக் குறிப்பது அல்ல. சக மனிதர்களின் மனநல நிலைமைகள், அறிவுசார் குறைபாடுகள் மற்றும் உணர்ச்சிக் குறைபாடுகள் உட்பட அனைத்து வகையான குறைபாடுகளையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாள் ஆகும்.
ஏற்றுக்கொள்ளுதல் என்கிற அரிய குணத்தின் சிறப்புகள்:
குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்ளுதல்: அர்த்தமுள்ள உறவுகளை, நட்புகளை வளர்ப்பதற்கு அவர்களின் குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்வது அவசியம். காதல் மற்றும் அன்பு என்பது 100 சதவீதம் பரிபூரணத்துவம் நிறைந்தது அல்ல. தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஒட்டுமொத்தமாக அவர்களின் குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்வதுதான் அமைதியான, ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இது நெருங்கின உறவுகள் மற்றும் நட்புகளுக்கும் பொருந்தும்.
மன்னிக்கப் பழகுதல்: மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். மன்னிக்கும் குணம் அமைதியை உருவாக்குகிறது. உறவுகள் வளர அனுமதிக்கிறது. எல்லோருமே தவறு செய்யும் இயல்புடையவர்தான் என்பதை நினைவில் கொண்டு விரைவாக அவர்களை மன்னிக்கும்போது உறவில் பிணைப்பு வலுப்படும்.
புரிந்துகொள்ளுதல்: ஏற்றுக்கொள்வது என முடிவெடுத்த பின்னர், முதலில் செய்யவேண்டியது மனிதர்களைப் புரிந்துகொள்வது முதன்மையாகிறது. நட்பு மற்றும் உறவுகளில் நேர்மையான மற்றும் அன்பான வெளிப்படையான தொடர்பு முக்கியமானது. பிறரது குறைகளில் கவனம் செலுத்தாமல் புரிந்துகொள்வதில் அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இந்த அணுகுமுறை சிக்கல்களை தீர்க்க வழி வகுக்கிறது.
குறைகளில் நகைச்சுவை: குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்போது நகைச்சுவையை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறருடைய குறைகளை நகைச்சுவையோடு ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். தன்னுடைய குறைகளையும் லேசான மனதோடு நகைச்சுவையை இணைத்து அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். குறைபாடுகள் மனிதனின் இயல்பு என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த குணம் சுற்றியுள்ளவர்களை அதிக அளவில் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும். ஆதரவான சூழலை வளர்க்கும்.
நிபந்தனையற்ற அன்பு: குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிபந்தனையற்ற அன்பு செலுத்த வழி கிடைக்கும். அன்பு ஒன்றுதான் குறைகளை பொருட்படுத்தாது. பிறரை அப்படியே ஏற்றுக்கொள்ள வைக்கும். சுற்றி உள்ளவர்கள் மீது எந்த விதமான நிபந்தனையும் இன்றி சுயநலமற்ற அன்பை செலுத்த வேண்டும். உண்மையான அன்பு எந்தவிதமான கட்டுப்பாடும், நிபந்தனையும் விதிக்காது. மனிதர்களை அவர்களின் இயல்பு மாறாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு, அன்பு செலுத்தும்போது இந்த உலகமே அமைதிப் பூங்காவாக, அன்பு மயமான அற்புதப் பிரதேசமாக மாறி விடும்.