

இன்றைய காலகட்டத்தில் விண்ணை முட்டும் பிரம்மாண்டமான கட்டிடங்கள், நீண்ட பாலங்கள் கட்டுவதற்கு கான்கிரீட் கலவை மிகவும் அவசியமான ஒரு பொருளாக உள்ளது. ஆனால் இந்த கான்கிரீட் தயாரிப்பால் உலகளவில் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு கசப்பான உண்மையாகும். உலகளாவிய கார்பன் உமிழ்வில் கான்கிரீட் உற்பத்தியின் பங்கு சுமார் எட்டு சதவீதமாக உள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்தான பருவநிலை மாற்றங்களைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் பல மாற்று வழிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பயன்படுத்தப்பட்ட காபி தூள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சில வகை பாக்டீரியாக்கள் என பல விஷயங்களை கான்கிரீட்டில் கலந்து புதிய சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடலில் வாழும் சிப்பிகளை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய உயிரியல் தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பெர்டியூ பல்கலைக்கழகம் (Purdue University) மற்றும் அங்குள்ள முன்னணி வேதியியலாளர் ஜொனாதன் வில்கர் (Jonathan Wilker) தலைமையிலான குழுவினர் இயற்கை நமக்குத் தரும் பாடங்களை வைத்து ஒரு புதிய ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளனர். கடலுக்கு அடியில் வாழும் சிப்பிகள் ஒன்றோடு ஒன்று மிக உறுதியாக ஒட்டிக்கொள்ள ஒரு வகையான இயற்கையான சிமெண்ட் போன்ற பசையை தங்களுக்குள்ளேயே உருவாக்குகின்றன.
இது தண்ணீருக்கு அடியிலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாறைகளைப்போல பலமாக இருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த சிப்பிகள் கால்சியம் கார்பனேட் எனப்படும் ஒரு வேதிப்பொருளை அதிக அளவில் வெளியிடுகின்றன. இதனுடன் சிப்பிகள் உருவாக்கும் சில சிறப்புப் புரதங்கள் சேரும்போது அது நம்ப முடியாத அளவுக்கு கடினமான ஒரு சிமெண்ட் ஆக மாறிவிடுகிறது.
பரிசோதனையின் முடிவுகள்!
ஜொனாதன் வில்கர் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் சிப்பிகளின் இந்த ரகசிய வேதிப்பொருள் கலவையை தங்களின் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி ஒரு அட்டகாசமான பரிசோதனையைச் செய்தனர். அவர்கள் சில சாதாரண சுண்ணாம்பு கற்களை எடுத்து, தாங்கள் உருவாக்கிய அந்த புதிய வகை செயற்கை சிப்பி பசையைத் தடவி ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பார்த்தனர்.
அந்த கற்களை அதிக அழுத்தம் கொடுத்து உடைத்து அதன் வலிமையைச் சோதித்தபோது அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஒட்டப்பட்ட அந்த பசையின் பிடிமானம் விரிசல் விடுவதற்கு முன்பாகவே அந்த உறுதியான பாறைகளே உடைந்து சிதறின. அந்த அளவுக்கு அந்த இயற்கையான செயற்கைப் பசை மாபெரும் வலிமையைக் கொண்டிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கான்கிரீட்!
இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு, ஆய்வாளர்கள் தங்களது புதிய இயற்கை பசையை வழக்கமான வர்த்தக ரீதியான கான்கிரீட் கலவையுடன் கலந்து பார்த்தனர். இதன் முடிவுகள் சாதாரண கான்கிரீட்டை விட பத்து மடங்கு கூடுதல் வலிமையைக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த புதிய கலவை மிக விரைவாகவே காய்ந்து கடினமாகிவிடுகிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான ஒட்டும் பசைகள் பெட்ரோலியம் போன்ற ஆபத்தான ரசாயனப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுபவை. ஆனால் இந்த புதிய வகை தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு சிறு பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான பொருளாகும்.
கடலுக்குள் வாழும் ஒரு சிறிய சிப்பியின் ரகசியம் இன்று உலகையே அச்சுறுத்தும் கார்பன் உமிழ்வைக் கணிசமாகக் குறைத்து, மிக வலிமையான கட்டிடங்களைக் கட்ட ஒரு மாபெரும் தீர்வாக அமைந்துள்ளது.