அமைதிப் பெருங்கடல்: மெகல்லன் வைத்த பெயரும், மறைந்திருக்கும் ஆபத்துகளும்!

மெகல்லன் பசிபிக் பெருங்கடலுக்கு ஏன் அமைதிப் பெருங்கடல் எனப் பெயரிட்டார்? நெருப்பு வளையம் மற்றும் மரியானா அகழி பற்றிய மிரட்டலான தகவல்களை அறியுங்கள்.
அமைதிப் பெருங்கடல் | Pacific ocean
அமைதிப் பெருங்கடல் | Pacific oceanImage credit: Gemini AI
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on: 

பசிபிக் பெருங்கடலுக்கு (Pacific  Ocean) 'அமைதிப் பெருங்கடல்' என்று பெயர் வரக் காரணம் என்ன? அதன் பின்னணியில் உள்ள வரலாற்றுச் சுவாரஸ்யங்கள் மற்றும் முரண்பாடுகள் பற்றி இப்பதிவில் காண்போம்:

வரலாற்றுப் பின்னணி: 

​கி.பி. 1519-இல் போர்த்துகீசிய மாலுமியான பெர்டினண்ட் மகலன் (Ferdinand Magellan) ஸ்பெயின் நாட்டின் ஆதரவோடு கப்பல் மூலம் உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். தென் அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள ஆபத்தான தொடுகடலைக் (Magellan Strait) கடக்க அவர் கடும் புயல்களையும், பயங்கர அலைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தப் பயங்கரமான புயல்களைக் கடந்து, 1520-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி ஒரு புதிய பெருங்கடலுக்குள் நுழைந்தார். அங்கு நீர் மிகவும் அமைதியாகவும், சீரான காற்றோட்டத்துடனும், பெரிய அலைகள் ஏதுமின்றியும் காணப்பட்டது.

அட்லாண்டிக் கடலின் கொடூரப் புயலுக்குப் பின் அவர் கண்ட இந்த அமைதி அவருக்குப் பெரிய நிம்மதியைத் தந்தது. இதனால் மெகல்லன் இக்கடலுக்குப் போர்த்துகீசிய/ஸ்பானிஷ் மொழியில் 'மார் பசிபிகோ' (Mar Pacífico) என்று பெயரிட்டார்.

'பசிபிகோ' என்றால் 'அமைதியான கடல்' (Peaceful Sea) என்று பொருளாகும். அதுவே ஆங்கிலத்தில் "Pacific Ocean" என்றும் தமிழில் 'அமைதிப் பெருங்கடல்' என்றும் மாறியது.

​பெயருக்குப் பின் இருக்கும் முரண்பாடு:

இந்தக் கடலில் பெயர் என்னவோ "அமைதிப் பெருங்கடல்" தான், ஆனால் உண்மையில் பூமியின் மிகவும் ஆபத்தான மற்றும் கொந்தளிப்பான பெருங்கடல்களில் பசிபிக்கும் ஒன்று.

பசிபிக் பெருங்கடல் | Pacific Ocean
பசிபிக் பெருங்கடல் | Pacific Ocean

நெருப்பு வளையம்:

உலகின் 75%-க்கும் அதிகமான எரிமலைகளும், 90%-க்கும் அதிகமான நிலநடுக்கங்களும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 'நெருப்பு வளையப் பகுதியிலேயே' (Ring of Fire) நிகழ்கின்றன. சுருக்கமாகக் கூறின், பசிபிக் கடலின் எல்லைப்பகுதிகள் அனைத்தும் புவித் தட்டுகள் சந்திக்கும் மற்றும் மோதிக்கொள்ளும் போர்க்களங்களாக இருப்பதால், அங்கு எரிமலைகளும் நிலநடுக்கங்களும் இடைவிடாது தொடர்கின்றன. இதனால் மிகப்பெரிய சுனாமி அலைகள், சூறாவளிகள் (Typhoons & Hurricanes) உருவாகும் முதன்மைப் பகுதியாகவும் பசிபிக் கடலே திகழ்கிறது.​ 

மரியானா அகழி:

உலகின் மிக ஆழமான பகுதியான "மரியானா அகழி" (Mariana Trench ) இதனுள்ளேயே அமைந்துள்ளது. மரியானா அகழியின் மிக ஆழமான புள்ளி "சேலஞ்சர் டீப்" என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆழம் ஏறத்தாழ 10,935 முதல் 10,994 மீட்டர்கள் (சுமார் 11 கிலோமீட்டர்) ஆகும்.

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,848 மீட்டர்) இந்த அகழிக்குள் தூக்கி வைத்தால் கூட, அதன் உச்சிக்கு மேல் இன்னும் 2 கிலோமீட்டர் அளவுக்குத் தண்ணீர் நிற்கும். அந்த அளவுக்குப் பெரியது இது. இவ்வளவு முரண்பாடுகள் இந்த அமைதிக் கடலுக்குள் அமுங்கி இருந்தாலும்,

இதையும் படியுங்கள்:
பட்டாம்பூச்சி இறக்கையில் இருக்கும் பொடி என்ன தெரியுமா? ஷாக்கிங் உண்மை!
அமைதிப் பெருங்கடல் | Pacific ocean

மகலனுக்கு அது அமைதியாகத் தெரிந்ததன் காரணம்?

​மகலன் இக்கடலுக்குள் நுழைந்த தருணத்தில், நிலநடுக்கோட்டுக்கு (Equator) அருகே பருவநிலை மிகவும் சீராக இருந்திருக்கக் கூடும். ​'எல் நினோ' (El Niño) அல்லது 'லா நினோ' (La Niña) போன்ற பெரிய கடலோட்ட மாற்றங்கள் இல்லாத அமைதியான காலத்தில் அவர் இக்கடலைக் கடந்து சென்றதால், அது எப்போதும். அமைதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அப்பெயரைச் சூட்டிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

பிளாஸ்டிக் மாசுபாடு:

​மனிதர்கள் வாழ முடியாத இவ்வளவு ஆழமான பகுதியிலும் கூட, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது மனித குலத்தின் கழிவு மாசுபாட்டின் தீவிரத்தைக் காட்டும் சோகமான விசித்திரமாகும்.

இதையும் படியுங்கள்:
5000 லிட்டர் தண்ணீரை சேமிக்கும், 400 வயதான சென்னையின் அதிசய மரம் பற்றி தெரியுமா?
அமைதிப் பெருங்கடல் | Pacific ocean

பொதுவாக நம் வாழ்வில் அமைதியாக இருப்பவர்களைப் பார்த்து 'குறைகுடம் கூத்தாடும் நிறைகுடம் தளும்பாது' என்று கூறுவார்கள். அது இந்த பசிபிக் கடலுக்கும் பொருந்தும் என்று தான் கூற வேண்டும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதால் அமைதி கடலின் பின்னணியைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். சுற்றுச்சூழலுக்கு நெகிழிகளை போட்டு சூழலை மாசு படுத்தாமல் இருப்பதற்கு நாம் கட்டாயமாக நம் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ளவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com