

பசிபிக் பெருங்கடல் வெப்ப உறிஞ்சியாக இருந்து எல்நினோவை உருவாக்கி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. 40,000 மைல் நீள மலைத்தொடர், 10 கி.மீ.க்கும் மேல் ஆழமுள்ள அகழிகள், ஆண்டுதோறும் சுருங்கும் கடல், கடிகார துல்லியத்தில் நிகழும் கோஃபர் பிளவு நிலநடுக்கம், 2500 பவளப்பாறைகள், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் ஆகியவை இந்த பெருங்கடலின் ஆச்சரியமூட்டும் உண்மைகளாகும்.
காடுகளைப் போலவே, பெருங்கடல்களும் சிறந்த வெப்ப உறிஞ்சிகளாக உள்ளன. ஆனால் வெப்பமடைதல் அதிகமாக இருக்கும்போது, அது நன்மையை விட தீமையையே அதிகம் செய்கிறது. இந்த வெப்பமயமாதல் போக்கிற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் முழுவதும் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான ஆழ்கடல் சூழலுக்கு உந்தப்படுவதே இதனையே 'எல்நினோ' என்று உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவிக்கிறது.
பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரிய ஆழமான பெருங்கடல் ஆகும். இது பூமியின் மொத்த நிலப்பரப்பில் 3-ல் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 16.52 கோடி சதுர கி.மீ. பூமியின் மொத்த நிலப்பரப்புகளையும் (148 மில்லியன் சதுர கி.மீ.) இந்த கடலுக்குள் பொருத்த முடியும்.
வடக்கு-தெற்கு நீளம் - சுமார் 15,500 கி.மீ. (ஆர்க்டிக்-அன்டார்டிக் வரை), கிழக்கு-மேற்கு நீளம் - சுமார் 19,800 கி.மீ. (இந்தோனேசியா-கொலம்பியா), சராசரி ஆழம் - சுமார் 4,300 மீட்டர்கள்.
பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் ஆகும். 'அமைதியான கடல்' என்று பொருள்படும் பசிபிக் என்ற பெயரை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபெர்டினான்ட் மேகலன் என்பவர் 1521-ல் வழங்கினார். உலகின் அனைத்து நிலப்பகுதிகளையும் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து உட்பட) இந்த ஒரே பெருங்கடலுக்குள் அடக்க முடியும்.
பூமியின் மொத்த நிலப்பரப்பு சுமார் 148 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே. அனைத்துக் கண்டங்களையும் பொருத்திய பிறகும், மீதமுள்ள இடத்தில் இந்தியா போன்ற பெரிய நாடுகள் சுமார் 8 நாடுகள் வரை உள்ளடக்க முடியும்.
பசிபிக் பெருங்கடல் ஆழத்தில் மறைந்துள்ள மர்மமான இடங்கள்:
இப்பெருங்கடல் கிட்டத்தட்ட 25,000 தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தத் தீவுகளில் மெலனேசியா, மைக்ரோனேசியா மற்றும் பொலினேசியா ஆகியவை முக்கியமான பிரிவுகள்.
உலகின் மொத்த எரிமலைகளில் சுமார் 75% இந்த பசுபிக் பெருங்கடலைச் சுற்றிய பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதி அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகளை சந்திப்பதால் இது 'ரிங் ஆஃப் பயர்' என்றழைக்கப்படுகிறது.பசிபிக் பெருங்கடலின் அடியில் சுமார் 40,000 மைல்கள் நீளத்திற்கு மலைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து துளையிட்டு எதிர் திசையில் (ஆப்போசிட் சைடு) வெளியேறினால் (பெரு அல்லது சிலிக்கு அருகில் தொடங்கி), நீங்க வெளியேறும் இடம் வியட்நாம் மற்றும் தைவானுக்கு நடுவே உள்ள பசுபிக் கடலாகத்தான் இருக்கும். இதுபோன்ற பல எதிர்ப்புற புள்ளிகள் (Antipodes) பசுபிக் பெருங்கடலுக்குள் உள்ளன. இந்தோனேசியா மற்றும் கொலம்பியாவுக்கு நடுவில் உள்ள கடல் வழி தூரம் சுமார் 20,000 கி.மீ. ஆகும். இது பூமியின் மொத்த சுற்றளவில் (40,000 கி.மீ.) 50% ஆகும்.
பசிபிக் பெருங்கடலில் மட்டும் சுமார் 710 மில்லியன் கியூபிக் கிலோமீட்டர் தண்ணீர் உள்ளது. இது உலகின் மொத்த கடல் நீரில் தோராயமாக 50% ஆகும்.
பூமியை 420 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பார்த்தால் கூட பசுபிக் பெருங்கடலை முழுமையாக ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. கூகுள் எர்த் (Google Earth)-இன் அதிகபட்ச ஜூம்-அவுட் புள்ளியில் கூட 95% பசுபிக் கடலை மட்டுமே பார்க்க முடியும்.
பசிபிக் பெருங்கடலில் உள்ள மாரியானா அகழியில் (Mariana Trench) இருக்கும் சேலஞ்சர் டீப் (Challenger Deep) தான் உலகின் மிக ஆழமான பகுதியாகும். இது மேற்பரப்பில் இருந்து 36,070 அடி (சுமார் 11 கி.மீ.) ஆழத்தில் உள்ளது. சேலஞ்சர் டீப் தவிர டோங்கா அகழி, பிலிப்பீன் அகழி மற்றும் குரில் கம்சட்கா அகழி போன்ற அகழிகளும் பசுபிக் பெருங்கடலில் சுமார் 10 கி.மீ.க்கும் அதிகமான ஆழத்தில் உள்ளன.
பசிபிக் பெருங்கடல், உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பான பெரும் தடுப்புப் பவளப்பாறையின் தாயகமாகும். இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள, பிரமிக்க வைக்கும் அழகு நிறைந்த ஓர் இடமாகும். உலகின் மிகப்பெரிய பவளப்பாறை 1429 மைல்களுக்கும் மேல் பரந்துள்ளதுடன், 1981-ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
இதில் சுமார் 2500 பவளப்பாறைகள் உள்ளன; இவற்றில் உள்ள 400 விதமான பவளங்கள், 1500 வகையான மீன்களுக்கும் 4000 வகையான மெல்லுடலிகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிகழும் விசித்திரமான நிலநடுக்கங்கள்:
இதன் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் பிளேட்டுகள் நகர்வதால்தான் உலகில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகள் ஏற்படுகின்றன. இந்த நகர்வுகளால் பசிபிக் பெருங்கடல் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாகச் சுருங்கிக்கொண்டே வருவதாகவும், அதே வேகத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பொதுவாக நிலநடுக்கம் என்பது மிக ஆபத்தானது மட்டுமல்ல, அது எப்போது, எங்கே, எந்த அளவில் வரும் என்று யாராலும் கணிக்க முடியாது ஆனால், எக்குவடோர் கடற்கரையிலிருந்து சுமார் 1,000 மைல் தொலைவில், பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் 'கோஃபர் பிளவு' பகுதி மட்டும் இதற்கு விதிவிலக்கு.
இங்கே ஒவ்வொரு 5 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை, துல்லியமாக அதே இடத்தில், அதே 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இசைக்கலைஞர்கள் தாள கதிக்காக பயன்படுத்தும் 'மெட்ரோனோம்' கருவியைப் போலவோ அல்லது கடிகார முள்ளைப் போலவோ இது அத்தனை துல்லியமாக நடப்பதால், விஞ்ஞானிகள் இதற்கு கடிகார வடிவ நிலநடுக்கம் என்றே பெயரிட்டுள்ளனர்.
பூமியின் மிகப்பெரிய கடல் பற்றிய ஆழமான தகவல்களைப் பெறுவதன் மூலம் புவியியல் மற்றும் கடல்சார் அறிவை எளிதாக வளர்த்துக்கொள்ளலாம்.