தண்ணீரே குடிக்காத மரம்... ஆனா ஊருக்கே தண்ணி கொடுக்குமாம்! இது என்னப்பா அதிசயம்?

Palm Tree
Palm Tree
Published on

கோடைக்காலம் வந்தாலே நம் நினைவுக்கு வருவது 'நுங்கு' தான். சாலையில் விற்கும் அந்த நுங்கை ருசித்துவிட்டு, அந்த மரத்தைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு சமீபகாலமாகப் பனை மரங்களை நடுவதிலும், பாதுகாப்பதிலும் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. பல லட்சம் பனை விதைகளை நடும் திட்டங்களைத் தீட்டி வருகிறது. நம் மாநில மரமான பனை மரத்தைப் பற்றியும், அரசு ஏன் இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கிறது என்பதையும் பற்றிய ஆச்சரியமான தகவல்களைப் பார்க்கலாம் வாங்க.

கற்பக விருட்சம்!

பனை மரத்தை நம் முன்னோர்கள் சும்மா "கற்பக விருட்சம்" என்று சொல்லவில்லை. தேவலோகத்தில் இருக்கும் கற்பக விருட்சம் எப்படி கேட்டதைக் கொடுக்குமோ, அதேபோலப் பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்குப் பயன்படுகிறது. இதன் வேர் முதல் உச்சி வரை எதுவும் வீணாவதில்லை. நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என உணவாகவும், பதநீர், கள் எனப் பானங்களாகவும், ஓலைகள் கூரை வேயவும், நார் கயிறு திரிக்கவும், தடி வீடு கட்டவும் பயன்படுகிறது. இப்படி 801 வகையான பயன்பாடுகளைக் கொண்ட ஒரே மரம் பனை மரம்தான்.

இயற்கையின் வாட்டர் டேங்க்!

தமிழ்நாடு அரசு பனை மரங்களை நடுவதற்கான மிக முக்கியமான காரணம் 'நிலத்தடி நீர்'. மற்ற மரங்களைப் போலப் பனை மரத்திற்குத் தினமும் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. வறண்ட நிலத்திலும், வானம் பார்த்த பூமியிலும் கூட இது செழித்து வளரும். மிக முக்கியமாக, மழை பெய்யும்போது அந்த நீரைத் தன் வேர்களில் சேமித்து வைத்துக்கொண்டு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் அபார சக்தி பனைக்கு உண்டு. இதனால்தான் நம் முன்னோர்கள் ஏரி, குளங்களின் கரைகளில் பனை மரங்களை நட்டு வைத்தார்கள்.

மண் அரிப்பைத் தடுக்கும்!

பனை மரத்தின் வேர்கள் மண்ணை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் ஏரிக்கரைகளிலும், குளக்கரைகளிலும் பனை மரங்களை நடும்போது, மண் அரிப்பு ஏற்படாமல் கரைகள் பலப்படும். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது கூட கரையைக் காக்கும் அரணாகப் பனை மரம் செயல்படுகிறது. இன்று பல ஏரிகள் தூர்ந்து போவதற்கும், கரைகள் உடைவதற்கும் முக்கியக் காரணம் அங்கு பனை மரங்கள் இல்லாததுதான் என்பதை அரசு உணர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி பனை மரங்களை வெட்ட அனுமதி வேண்டும்..! தமிழக அரசு அதிரடி..!
Palm Tree

ஒரு பனை மரத்தை நட்டால், அது வளர்ந்து பலன் தரச் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். "நம்ம தாத்தா நட்டாரு, நாம நுங்கு சாப்பிடுறோம்" என்று சொல்வார்களே, அது போல இது அடுத்தத் தலைமுறைக்கான ஒரு முதலீடு. இது தானாகவே வளர்ந்து, எந்தப் பராமரிப்பும் இல்லாமல் பல நூறு ஆண்டுகள் நின்று பலன் தரும். வறட்சியைத் தாங்கும் இந்த மரம், விவசாயிகளுக்குக் கை கொடுக்கும் ஒரு பொருளாதாரத் தோழனாகவும் இருக்கிறது. பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவை சர்க்கரைக்குச் சிறந்த மாற்றாக இருப்பதோடு, மருத்துவ குணங்களும் கொண்டவை.

இதையும் படியுங்கள்:
'இறவா பனை... பிறவா புளி' : பேரூர் பட்டீஸ்வரர் கோவில்... பிரமிப்பூட்டும் அதிசயங்கள்!
Palm Tree

பனை மரம்  தமிழர்களின் அடையாளம். நிலத்தடி நீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்தக்காலத்தில், பனை மரங்களை வளர்ப்பது என்பது காலத்தின் கட்டாயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com