
‘தமிழ்நாட்டின் மாநில மரம்’ என பனை மரம் அழைக்கப்படுகிறது. நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பனைமரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. பனை மரங்களைப் பாதுகாப்பதன் மூலம் நீர் மற்றும் நில வளத்தை மேம்படுத்த முடியும். அதோடு சுற்றுச்சூழல் சமநிலைக்கு பனை மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வறட்சியைத் தாங்கி உயர வளரும் பனை மரங்கள், நிலத்தடி நீரைத் தேக்கி வைப்பதில் சுற்றுச்சூழலுக்கு சிறந்த நண்பனாக விளங்குகிறது. இதுதவிர நுங்கு மற்றும் பதனி உள்ளிட்ட இயற்கை பானங்களையும், பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளையும் பனை மரம் நமக்குத் தருகிறது. இயற்கையின் ஓர் அங்கமான பனை மரத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசு மட்டுமின்றி பொதுமக்களின் தலையாய கடமையாகும். இதனைக் கருத்தில் கொண்டு தான் இனி பனை மரங்களை வெட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், “பணத்திற்காக பனை மரத்தை வெட்டி விற்பதைத் தடுக்கவும், செங்கல் சூளைகளில் பனை மரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி பனை மரங்களை வெட்ட உரிய முறையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அதோடு அவசியமான சூழலில் பனை மரங்களை வெட்ட வேண்டுமென்றால் முதலில் ‘உழவன்’ செயலியில் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
வெட்டிய பனை மரங்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் அனுமதி கடிதத்தை அவசியம் அளிக்க வேண்டும். ‘நீர்நிலைகளின் பாதுகாவலன்’ என அழைக்கப்படும் பனை மரங்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதி 110-இன் கீழ் பனை மரத்தை வெட்டக் கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என மதுரை உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.