
பப்பாளி மரத்தின் பூர்வீகம் மெக்சிக்கோ என்றாலும் தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இந்தியா பப்பாளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகில் 42% பப்பாளி இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. உலகில் அதிகளவில் பயிரிடப்படும் வெப்பமண்டலப் பயிர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பப்பாளி ஆகும். கரிகா பப்பாயா என்பது பப்பாளியின் தாவரவியல் பெயராகும்.
விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், நியாசின், தயாமின், ரைபோஃப்ளேவின், இரும்பு, கல்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களுள் பப்பாளி முன்னிலையில் உள்ளது. மேலும், பப்பாளியின் காய், பழம், தண்டு, இலை மற்றும் வேர் என்பன பரந்த அளவில் மருத்துவத்திலும் பாப்பைன் (papain) என்னும் நொதிய உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகின்றன.
வேகமாக வளரும் மரங்களில் ஒன்று பப்பாளி. 6 முதல் 12 மாதங்களுக்குள் பழங்களை தந்துவிடும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருக்கும். ஆனால் எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ அந்த அளவுக்கு அதன் ஆயுட்காலம் இருப்பதில்லை. சுமாா் பத்து மீட்டா் வரை வளரும் இந்த மரம் 10 ஆண்டுகளை எட்டுவதற்குள்ளாகவே இதன் ஆயுள் முடிந்துவிடும்.
மற்ற மரங்களை போல் பப்பாளி மரம் வளர்வதற்கு இதமான காலநிலை தேவையில்லை. எவ்வளவு வெப்பமான சூழலையும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. ஏனெனில் அது வளர்வதற்கு ஆண்டு முழுவதும் வெப்பமாக இருக்கும் வானிலைதான் தேவை. எளிதில் கிடைப்பது, விலை மலிவானது, எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.
பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்.
இந்த மரம் வறண்ட கால நிலையிலும் செழிப்புடன் வளரும். அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. அதேவேளையில் பப்பாளி மரத்தை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. இந்த மரம் ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் 100 பழங்களை தரும்.
வீட்டில் பப்பாளி மரத்தை வளர்க்கும் போது ஒரு மாதத்திலேயே கூரையைத் தொட்டுவிடும் என்பதால் அடிக்கடி இந்த மரத்தை வெட்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மரத்தை வீட்டில் வளர்க்கும் போது எந்த செலவும் வராது.
பப்பாளிகளில் ஆண், பெண், இருபால் என்று மூன்று வகையான மரங்கள் உள்ளன. இவற்றுள் பெண் பூக்கள் உள்ள மரங்களும் , இருபால் பூக்கள் உள்ளவையும் மட்டுமே பழங்களைத் தரக்கூடியன. ஆண் பப்பாளி மரங்களின் பூக்கள் சிறியதாக இருக்கும். அவை நீண்ட தண்டுகளில் (தண்டு) கொத்தாக வளரும் மற்றும் மெல்லிய, குழாய் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் பெண் பப்பாளி மரங்களின் பூக்கள் தனித்தனியாக அல்லது சிறிய கொத்தாக வளரும் மற்றும் பொதுவாக ஆண் பூக்களை விட பெரியதாக இருக்கும். அவை குறுகிய தண்டுகளில் உருவாகின்றன.
குறைந்த செலவில் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகளை தரும் மரம் என்பதால் அனைவரது வீடுகளிலும் இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.