தீபாவளிக்கு வெடிக்கும் வெடிகள்; நாமே நம் உடல் நலத்திற்கு வைக்கும் வேட்டுகள்!

Physical and Mental Health Harms from Diwali Crackers
Physical and Mental Health Harms from Diwali Crackers
Published on

தீபாவளி விழாக் காலத்தின்போது பட்டாசுகளைக் கொளுத்தியும், வெடித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனால், மனிதர்களின் உடல் நலத்திற்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைகின்றன. பட்டாசுகளை எரிப்பதால் காற்றில் கணிசமான அளவு மாசுக்கள் வெளியேறுகின்றன. இந்த மாசுபடுத்திகளில் துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் பல்வேறு கன உலோகங்கள் அடங்கும். இந்த மாசுபடுத்திகளை சுவாசிப்பதால், சுவாசப் பிரச்னைகள், இருதய நோய்கள், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல் நலக் குறைவுடையவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டாசுகள் வெடிப்பதற்கும், பல்வேறு வண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிபபாக, பொட்டாசியம் நைட்ரேட் ஒரு ஆக்சிஜனேற்றியாகச் செயல்படுகிறது மற்றும் பட்டாசின் எரிப்பைத் தக்க வைக்க ஆக்சிஜனை உருவாக்குகிறது.

கந்தகம் - பற்றவைப்பு மற்றும் எரியும் செயல்முறைக்கு உதவுகிறது.

கரி - எரிபொருள் ஆதாரமாகச் செயல்படுகிறது.

அலுமினியம் - பிரகாசமான வெளிச்சங்கள் மற்றும் தீப்பொறிகளை உருவாக்கப் பயன்படுகிறது.

பேரியம் நைட்ரேட் - பச்சை நிறங்களை உருவாக்குகிறது.

ஸ்ட்ரோண்டியம் நைட்ரேட் - சிவப்பு நிறங்களை உருவாக்குகிறது.

செப்புக் கலவைகள் - நீல நிறங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்காணும் வேதிப்பொருட்கள் எரிக்கப்படும்போது, வெளியேறும் நச்சுப்புகைகள் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதுடன், கடுமையான உடல் நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

மேலும், பட்டாசுகளால் ஏற்படும் மாசு பன்முகத்தன்மை கொண்டது. காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு மற்றும் மண் மற்றும் நீர் மாசுபாடு போன்றவைகளும் இதில் அடங்கும். பட்டாசுகளிலிருந்து ஏற்படும் காற்று மாசுபாடு, குறிப்பாக, நுண்ணிய துகள்கள் (PM2.5 மற்றும் PM10) வெளியிடப்படுவதால், நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவி, கடுமையான உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மாசுபாடு காது கேளாமை, மன அழுத்தம் அதிகரிப்பு, பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும். இதேபோன்று, பட்டாசுகளின் எச்சங்கள் மண் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தி, தாவரங்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன.

பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு மிகவும் கடுமையானது. கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறது. வெளியிடப்படும் கன உலோகங்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் தாவரங்களில் படிந்து, அவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான உணவு சங்கிலியிலும் பெரும் மாசு ஏற்படுகிறது.

பட்டாசுகளிலிருந்து வெளிவரும் கடுமையான சத்தம், வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்துகின்றன. இதனால் விலங்குகளுக்கு ஏற்படும் அச்சம், மன அழுத்தம் போன்றவற்றால் அவை பெரிதும் பாதிப்படைகின்றன.

இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மக்கள் தீபாவளி கொண்டாடுவதால், பட்டாசுகளின் பயன்பாடு ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், காற்று, ஒலி உள்ளிட்ட மாசுபாடுகளின் அளவும் அதிகரிக்கின்றன.

காற்றின் தரச் சரிவு - மாசுபாடுகளின் செறிவு அபாயகரமான அளவை எட்டுவதுடன், குடியிருப்பாளர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களில் இப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒற்றுமையே உயர்வு என்பதை வலியுறுத்தும் சிலை!
Physical and Mental Health Harms from Diwali Crackers

உடல்நலப் பிரச்னைகள் - தீபாவளியின்போதும், அதற்குப் பின்னரும் ஏற்பட்ட மாசுபாடுகளால், சுவாசம் மற்றும் இதயப் பிரச்னைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் சீரழிவு - மாசுபடுத்திகளின் ஒட்டுமொத்த விளைவு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது, பல்லுயிரியலைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

சத்தம் தரும் துன்பம் - பட்டாசுகளின் உரத்த சத்தம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெருமளவில் மன அழுத்தத்துடன், கவலையையும் ஏற்படுத்துகிறது.

ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளியால், இத்தனை துன்பங்களா? அதுவும் பட்டாசுகளினால் வரும் துன்பங்களா? என்று நாம் அனைவரும் சிந்திக்கத் தொடங்கினால், இந்த நிலை மாறலாம். சிந்தியுங்கள்... பட்டாசுகளால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைக் குறைக்க நாமும் துணை நிற்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com