ஒற்றுமையே உயர்வு என்பதை வலியுறுத்தும் சிலை!

அக்டோபர் 31, தேசிய ஒருமைப்பாட்டு தினம்
Statue of Sardar Vallabhbhai Patel
Statue of Sardar Vallabhbhai Patel
Published on

ந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ம் நாளை ‘தேசிய ஒருமைப்பாட்டு நாள்’ (National Unity Day) என்று கொண்டாட வேண்டுமென்று இந்திய அரசு 2014ம் ஆண்டு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31ம் நாளில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த சர்தார் வல்லப்பாய் படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக இருந்த இவர், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் முக்கியமானவராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்பு, இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர், இந்தியாவிலிருந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கக் காரணமாக இருந்த, சர்தார் வல்லபாய் பட்டேல், ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்டார். அவரது நினைவாக, இரும்பைப் பயன்படுத்தி ஒற்றுமைக்கான சர்தார் வல்லப்பாய் படேலின் உருவச்சிலை, ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) அமைக்கப்படும் என்று 2010ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாளில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, இந்தச் சிலையை அமைப்பதற்காக, குஜராத் அரசால் ‘சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரிய ஏக்தா டிரஸ்ட்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தச் சிலையினை அமைப்பதற்காகத் தேவைப்படும் இரும்புக்காக இந்தியாவின் அனைத்துக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்தும், அவர்களிடமுள்ள பயன்படுத்தாத இரும்புக் கருவிகள் நன்கொடையாகப் பெறப்பட்டது.

இத்தகு இரும்பு உபகரணங்களை இந்தியா முழுவதிலிருந்தும் திரட்டுவதற்காக இந்த டிரஸ்ட் 36 அலுவலர்களை நியமித்தது. இதற்காக 5,00,000க்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு ஒற்றுமைக்கான சிலை இயக்கம் என்றும் பெயரிடப்பட்டது. இந்தச் சிலையை அமைப்பதற்காக

இரும்புத் துண்டுகளை 6,00,000 கிராமங்களிலிருந்து திரட்ட மூன்று மாதங்களுக்கு இந்தியா முழுவதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இக்காலகட்டத்தில் 5,000 டன்னுக்கு மேற்பட்ட இரும்பு சேகரிக்கப்பட்டது. இவ்வாறாகச் சேகரிக்கப்படும் பொருள்கள் இச்சிலையை அமைக்கப் பயன்படுத்தப்படும் என்று தொடக்கத்தில் கூறப்பட்ட போதிலும், பின்னர் அது சிலையின் பீடத்தை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது தெரிய வந்தது.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம், கெவாடியா எனுமிடத்தில், சர்தார் சரோவர் அணையின் எதிரில் 3.2 கிமீ தொலைவில் சாது பெட் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் சர்தார் வல்லப்பாய் படேல் உருவத்திலான ஒற்றுமைக்கான சிலை, 58 மீட்டர் பீடமும், 182 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் மொத்த உயரம் 240 மீட்டர் ஆகும். இரும்பு பிரேம்கள், சிமெண்ட் கான்கிரீட், செம்புப்பூச்சு ஆகியவற்றைக் கொண்டு இது அமைந்துள்ளது. இதனைக் கட்டுவதற்கு 75,000 கன மீட்டர் கான்கிரீட்டும், 5,700 டன் இரும்பும், 18,500 டன் இரும்புப் பட்டைகளும், 22,500 டன் செப்புத்தகடுகளும் தேவைப்பட்டன. இச்சிலையில் வல்லபாய் படேல் வழக்கமாக அணியும் ஆடையுடன் நடந்து வரும் நிலையில் உள்ளது.

இந்தியச் சிற்பியான ராம். வி.சுடர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். இந்தச் சிலையினை வடிவமைத்து வழங்க லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் 2014ம் ஆண்டு அக்டோபர் 14 அன்று அதற்கான பணியைத் தொடங்கி, 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணியை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து, சர்தார் வல்லபாய் படேல் உருவத்துடன் அமைந்த, ஒற்றுமைக்கான சிலையினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் நாளில் திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள்:
காது குத்துவதில் உள்ள அறிவியல் காரணங்கள் தெரியுமா?
Statue of Sardar Vallabhbhai Patel

இந்தியாவை ஒன்றிணைத்தவர் என்கிற வகையில் சர்தார் வல்லபாய் படேலின் உருவத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலை குறித்து, சில சர்ச்சைகள் ஏற்பட்ட போதிலும், உலகில் ஒற்றுமையே உயர்வாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தச் சிலை உலகின் உயரமான சிலையாக அமைந்திருக்கிறது.

இன்றைய நாளில், அரசு அலுவலகங்களில், “தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைக் காக்க என்னை அர்ப்பணிப்பேன் என்றும், இந்தச் செய்தியை எனது சக நாட்டு மக்களிடையே பரப்பவும் கடுமையாகப் பாடுபடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், செயல்களாலும் சாத்தியமாக்கப்பட்ட எனது நாட்டை ஒருங்கிணைக்கும் உணர்வில் இந்த உறுதிமொழியை எடுக்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பை உறுதி செய்ய எனது சொந்த பங்களிப்பை வழங்கவும் நான் உளமார உறுதியளிக்கிறேன்” எனும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.

அரசு அலுவலக ஊழியர்கள் மட்டும்தான் ஒற்றுமைக்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமா? நாமும் மேற்காணும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டு, நாட்டு ஒற்றுமை பலத்தை வலுப்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com