
ஸ்ட்ராபெர்ரி பழம் அதன் மயக்கும் சிவப்பு நிறம் மற்றும் அதன் தோற்றத்திற்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் புளிப்பு கலந்த இனிப்பு சுவைக்கு உலகெங்கும் பிரியர்கள் உண்டு. ஸ்ட்ராபெர்ரி ஆக்சிஜனேற்றம் மிகுந்த ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு பழமாகும். ஸ்ட்ராபெர்ரி பழம் உண்மையில் பெர்ரி வகையை சார்ந்தது அல்ல.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகளை கூட்டுப்பழங்கள் என்று அழைப்பார்கள். இவைகள் பெயரில் பெர்ரி என்று வந்தாலும் உண்மையில் இவை பெர்ரி அல்ல. பெர்ரி என்றால் ஒரு கருப்பை கொண்ட பூவிலிருந்து உருவாகும் பல விதைகளைக் கொண்ட, சதைப்பற்று உள்ள பழங்களைக் குறிக்கும்.
தாவரவியல்படி அவுரிநெல்லி மட்டுமே உண்மையான பெர்ரி ஆகும். உண்மையான பெர்ரிகளாக இருக்கும் பிற பழங்கள் திராட்சை, வாழைப்பழம், தர்பூசணி மற்றும் பெர்ரி வகை காய்கறிகளில் பூசணி, கத்திரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவையும் அடங்கும்.
எப்போதும் பெர்ரிகளின் தோல் மெல்லியதாக இருக்கும். அதன் நடுப்பகுதி சதைப்பற்று மிகுந்து காணப்படும். சதைப்பற்று மிகுந்த நடுப்புற பகுதிக்கு நடுவில் உட்புற அடுக்கு இருக்கும். இது எண்டோகார்ப் என்று அழைக்கப்படும் இதனுள் விதைகள் இருக்கும். பெர்ரி வகைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரிகள் உண்மையில் ரோசேசி என்னும் ரோஜா மலர் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த குடும்பத்தில் பீச், பிளம்ஸ், பேரிக்காய், ஆப்ரிகாட் மற்றும் ஆப்பிள் போன்றவையும் உள்ளன. இதன் பளபளப்பான கவர்ந்து இழுக்கும் நிறம், அழகான தோற்றம், புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையால் ஐஸ்கிரீம், ஜாம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விதை கொண்ட பழமாக இருப்பதால் பெர்ரியாக கருத முடியாது.
அமெரிக்காவின் காட்டு ஸ்ட்ராபெர்ரியான ஃப்ராகேரியா வர்ஜீனியானா மற்றும் சிலியின் ஃப்ராகேரியா சிலோயென்சிஸ் ஆகியவற்றின் கலப்பினம் மூலம் தற்போது உள்ள ஸ்ட்ராபெர்ரியை உருவாக்கியுள்ளனர். ஆனால். அதற்கு முன்பே இயற்கையான ஸ்ட்ராபெர்ரிகளைப் பற்றி ஐரோப்பிய இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஸ்ட்ராபெரி பூக்கள் தாவரத்தின் நுனியில் கொத்தாக ஒரு முனைய மஞ்சரியாக உருவாகும். மஞ்சரியின் மையத்தில் உள்ளதே முதன்மையான மலராகும். இதுவே முதலில் மலர்ந்து பெரிய பழமாக வளரும். மீதமுள்ள பூக்கள் மலர்ந்து சிறிய பழங்களை உருவாக்கும்.
தாவரவியல்படி ஸ்ட்ராபெர்ரிகள் தவறான பழங்கள் அல்லது துணைப் பழங்கள் என்றுதான் வகைப்படுத்தப்படுகின்றன. வழக்கமாக பூவின் கருப்பைதான் பழமாக மாறும். இங்கு பழமாக உட்கொள்ளும் சதைப்பகுதி, பூவுக்கு அடியில் உள்ள தண்டு பகுதியாகும்.
அப்படி என்றால் உண்மையான பழத்தின் பகுதி எங்கு உள்ளது என்றுதானே யோசிக்கிறீர்கள். உண்மையான ஸ்ட்ராபெர்ரி பழம் என்பது அதன் தோலின் மேல் சிறிய விதை போன்ற அமைப்பில் உள்ளவைதான். அந்த சிறிய விதை போன்ற பழத்தின் உள்ளே ஒரு விதை இருக்கும். இந்த ஆய்வின்படி பார்த்தாலும் ஒரு விதை உள்ளவை பெர்ரி ஆகமுடியாது.