பிளாஸ்டிக் ரெசின் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? மஞ்சப்பையை கையில் எடுக்க என்ன தயக்கம்?

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், டப்பா, குவளை, பால் பாக்கெட்டுகள் போன்ற இன்னும் ஏராளமான பொருள்களில் ரெசின் குறியீடுகள் உள்ளன.
plastic bags vs cloth bags!
plastic bags vs cloth bags!
Published on

பிளாஸ்டிக் நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது..! எங்கு சென்றாலும் நமது பயன்பாட்டிற்கு நெகிழிப்பைகள் தான் முதன்மை பங்கு வகிக்கின்றன. நெகிழிகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழல் கேடுகளை தவிர்ப்பதற்காகவும், நெகிழிகளை மறுசுழற்சி செய்வதற்காகவும் அதனை முறையாக கையாண்டு பிரித்தெடுப்பதற்காகவும், அதேசமயம் நெகிழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலக்கூறுகளின் தீங்கு தன்மைகளை பற்றி உணரவும், இதனையெல்லாம் கருத்தில் கொண்டு, 1988-ம் ஆண்டு நெகிழிப் பொருள்களுக்கு ரெசின் குறியீடு வழங்கும் ஏற்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், டப்பா, குவளை, பால் பாக்கெட்டுகள் போன்ற இன்னும் ஏராளமான பொருள்களில் இந்த ரெசின் குறியீடுகளை நாம் காண முடிகிறது.

ரெசின் குறியீடானது மூன்று அம்புக்குறிகளைக் கொண்டு, ஒன்றை ஒன்று தொடாமல் முக்கோண வடிவில் அதற்குள் 1 முதல் 7 வரையிலான எந்த ஒரு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

• ரெசின் குறியீடு 1 (PETE அல்லது PET):

இவ்வகை நெகிழியோடு பாலிஎதிலீன் டெரெப்தாலேட் என்ற வேதி மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் இவ்வகை ரெசின் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்கள் ஜாக்கிரதை! 
plastic bags vs cloth bags!

•ரெசின் குறியீடு 2 (HDPE):

இவ்வகை நெகிழியோடு உயர் அடர்த்தி பாலிஎதிலீன் என்ற வேதி மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. பால் குப்பிகள், ஷாம்பு பாட்டில்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பைகளில் பயன்படுத்தப்படுகிறது.

• ரெசின் குறியீடு 3 (PVC):

இவ்வகை நெகிழியோடு பாலிவினைல் குளோரைடு என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. குழாய்கள், ஜன்னல் பிரேம்கள் மற்றும் சில உணவு பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது.

• ரெசின் குறியீடு 4 (LDPE):

இவ்வகை நெகிழியோடு குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள், உணவு உறைகள், பால் பாக்கெட்கள் மற்றும் சில பாட்டில்களில் பயன்படுத்தப்படுகிறது.

• ரெசின் குறியீடு 5 (PP):

இவ்வகை நெகிழியோடு பாலிப்ரோப்பிலீன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. தயிர் கப், மைக்ரோவேவ்-பாதுகாப்பான உணவு கொள்கலன்கள் மற்றும் சில பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

• ரெசின் குறியீடு 6 (PS):

இவ்வகை நெகிழியோடு பாலிஸ்டிரீன், ஸ்டைரீன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. கப், உணவு பெட்டிகள் மற்றும் சில பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது.

• ரெசின் குறியீடு 7 (OTHER):

இது மேற்கண்ட ஆறு வகை பிளாஸ்டிக் வகைகளில் வராத பிற வகை பிளாஸ்டிக் அல்லது கலவை பிளாஸ்டிக் பொருட்களை குறிக்கிறது.

இதிலிருந்து தயாரிக்கப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினமாக இருக்கலாம். இதனை வாங்கும் போது கவனமாக இருக்கவும்.

முக்கியக் குறிப்பு: ஒரு சில நெகிழிப் பொருள்களில் ரெசின் குறியீடுகள் காணப்படுவதில்லை. அந்த நெகிழிகளை தயாரிக்கும் நிறுவனமானது விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருக்கும். இவ்வகை குறியீடு இல்லாத நெகிழிப் பொருள்களை வாங்கும் போது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

நெகிழியின் தீங்குகள்:

• உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 20 லட்சம் நெகிழிப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன. 97% பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. நெகிழி தட்டுக்களிலும், பைகளிலும் உணவுகள் ஒட்டி இருப்பதாலும், மீதம் இருப்பதாலும் இதனை விலங்குகள் உட்கொள்கின்றன. (சமீபத்தில் ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 70 கிலோவிற்கும் அதிக எடையுள்ள நெகிழிக் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.)

• நெகிழிகள் சிதைவுறுவதற்கு கிட்டத்தட்ட 100 முதல் 10 லட்சம் ஆண்டுகளாகும்.

• நெகிழிப்பைகளில் சூடான உணவுப் பொருட்களை போடும்போது நெகிழியிலுள்ள பல தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உணவில் கலக்கின்றன. இதனால் மனிதனுக்கு பல நோய்களும், உடல் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்போம்; துணிப்பைகளை ஏற்போம்!
plastic bags vs cloth bags!

நெகிழிகளின் பயன்பாட்டை தவிர்த்துக் கொள்வோம். மஞ்சப்பையை எடுப்பதினால் நமக்கு ஒன்றும் மானம் போவதில்லை..! எதற்கு இந்த தயக்கம்..! நம் பூமி தாயின் கருப்பையை மக்காமல் போகும் நெகிழிகள் ஆக்கிரமித்தால் அது நியாயமா..? மக்கும் மஞ்சப்பையை கையில் எடுப்போம்.. மீண்டும் மஞ்சப்பை..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com