
விவசாயத்தில் ஏர் உழுதல் என்பது மிகவும் முக்கியமான நடைமுறை. ஏர் உழுது மண்ணை பண்படுத்தினால் தான் பயிர்கள் நன்றாக வேர்விட்டு வளரும். ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏர் கலப்பையின் பயன்பாடு இன்று வெகுவாக குறைந்து விட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைய காலத்தில் டிராக்டர்கள் தான் மண்ணை உழுவதற்கு பயன்படுகின்றன. இவ்வாறு ஏர் உழுதல் மூலமாக மண்ணில் 60 முதல் 70 செ.மீ ஆழத்திற்கு மட்டுமே மண் இலகுவாக இருக்கும். அதற்கும் அடியில் இருக்கும் அடி மண்ணாணது கெட்டியாக மாறி விடும்.
இந்த அடிமண்ணையும் நாம் இலகுவாக மாற்றினால், பயிர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அவ்வகையில் கடினமான அடி மண்ணை உழுவதற்கு பயன்படுவது தான் உளிக்கலப்பை.
இன்றைய நவீன உலகில் உளிக்கலப்பையின் பயன்பாடு குறைந்திருந்தாலும், இதன் அவசியத்தை உணர்ந்து ஒருசில விவசாயிகள் இன்னமும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் கடினமான அடி மண்ணை உடைத்து, தண்ணீர் உட்புகும் திறனை அதிகரிக்க உளிக்கலப்பை உதவுகிறது. உளிக்கலப்பை கொண்டு ஏர் உழுதால், ஆணி வேர் கொண்ட பயிர்களின் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரிக்கும்.
‘அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவது மேல்’ என்ற முன்னோர்களின் சொல்படி, விவசாய நிலத்தில் ஆழமாக உழுதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். உளிக்கலப்பை உழவானது நிலத்தின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்கப்பதோடு, நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளை பயிர்கள் உறிஞ்சுவதற்கும் ஏதுவாக இருக்கும். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு விவசாயம் செய்யப்படும் நிலத்தில், நாளடைவில் கடின மண் தட்டு உருவாகிறது. இந்த மண் தட்டுகள் மண்ணின் வகையைப் பொறுத்து வண்டல் மண் தட்டு மற்றும் களிமண் தட்டு என பல்வேறு வகையாக உருவாகின்றன. இவ்வகை மண் தட்டுகளினால் பயிர்களின் வேர் ஆழமாகச் செல்வது தடுக்கப்பட்டு, அகலமாக பரவத் தொடங்கும்.
இந்தப் பிரச்சினைக்குத் சிறந்த தீர்வை அளிக்கிறது உளிக்கலப்பை. இதன் மூலம் 0.5 மீட்டர் இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக நிலத்தை உழலாம். இதனைப் பயன்படுத்துவதால் அடி மண்ணை உடைத்து, இன்னும் ஆழமாகவும் உழ முடியும். உளிக்கலப்பை அதிக செயல்திறனையும், குறைந்த இழுவிசையையும் கொண்டுள்ளது. இதில் இரும்பால் ஆன சட்டம், கொழு மற்றும் கொழுதாங்கி ஆகிய 3 பாகங்கள் உள்ளன. நீள்சதுர இரும்புக் குழல்களால் ஆன சட்டம், நவீன யுக்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத அதிகப்படியான விசையால் உளிக்கலப்பை பாதிப்படையாமல் இருக்க பாதுகாப்பு அமைப்பும் இதில் உள்ளது. அதிக இழுவிசை திறன் கொண்ட டிராக்டர்களால் மட்டுமே உளிக்கலப்பையைப் பயன்படுத்த முடியும். இதுதவிர 35 முதல் 45 குதிரைத் திறன் கொண்ட டிராக்டரைக் கொண்டும் உளிக்கலப்பையை இயக்கலாம்.
மற்ற உழவுக் கருவிகளை போல் அல்லாமல் அடி மண்ணை மட்டுமே உளிக்கலப்பை ஆழமாக உழும். அடிமண்ணை உழும் போது மேற்பரப்பு மண்ணில் குறுகிய வெட்டுக்கள் உண்டாகிறது. உளிக்கலப்பையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தபட்சம் ஆண்டிற்கு ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும். தரிசு நிலங்களை எளிதாக உழுவதற்கும் இந்த உளிக்கலப்பையை சில விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.