உலக வரைபடத்தை எடுத்துக்கொண்டு மக்கள் அதிகம் வசிக்காத இடம் எது என்று தேடினால், அது பாலைவனமாகவோ அல்லது பனி படர்ந்த அண்டார்டிகாவாகவோ தான் இருக்கும் என்று நாம் நினைப்போம். ஆனால் இவை எல்லாவற்றையும் விடத் தனிமையான, மனித தடமே இல்லாத ஒரு இடம் பசிபிக் பெருங்கடலின் நடுவே உள்ளது. அந்த இடத்தின் பெயர் 'பாயிண்ட் நிமோ (Point Nemo)'.
இதை ஒரு சுற்றுலாத் தலம் என்று நினைத்துவிட வேண்டாம். இது ஒரு கற்பனைக்கு எட்டாத வெறுமை நிறைந்த பகுதி. இங்கு யாராவது மாட்டிக்கொண்டால், அவர்களுக்கு உதவி செய்ய வரப்போகும் மிக அருகாமையில் உள்ள மனிதர்கள் பூமியில் இருக்க மாட்டார்கள், அவர்கள் வானத்தில் இருப்பார்கள் என்பதுதான் இதன் விசித்திரமான உண்மை.
தெற்கு பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் புள்ளிதான் நிலப்பரப்பிலிருந்து மிகத் தொலைவில் உள்ள இடமாகும். இங்கிருந்து எந்தத் திசையில் திரும்பினாலும், சுமார் 2,600 கிலோமீட்டர் தூரத்திற்குத் தரையையே பார்க்க முடியாது. ஈஸ்டர் தீவு மற்றும் அண்டார்டிகா அருகில் உள்ள சில தீவுகள் தான் இதற்குச் சற்றுத் தொலைவில் உள்ள நிலப்பரப்புகள்.
கப்பல் போக்குவரத்துப் பாதைகள் கூட இந்தப் பகுதியைத் தவிர்த்தே செல்கின்றன. 1990களில் தான் இப்படி ஒரு இடம் இருப்பதே அதிகாரப்பூர்வமாகக் கண்டறியப்பட்டது. அதுவும் கப்பல் மூலமாக அல்ல, கணினி மென்பொருள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தியே இந்த இடத்தை விஞ்ஞானிகள் அடையாளப்படுத்தினர். 'நிமோ' என்ற வார்த்தைக்கு 'யாரும் இல்லை' என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றார்போலவே இது ஒரு சூனியப் பிரதேசம்.
இந்தப் பகுதியின் தனிமையை விளக்க ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு உள்ளது. பாயிண்ட் நிமோவில் ஒருவர் நீந்திக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு மிக அருகில் இருக்கும் மனிதர்கள், 2,600 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் தீவு வாசிகள் அல்ல. பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தான் இவருக்கு மிக அருகில் இருப்பவர்கள். பூமியில் உள்ளவர்களை விட, வானத்தில் இருப்பவர்களே இவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பது எவ்வளவு வினோதமான விஷயம்.
நாசாவின் குப்பைத்தொட்டி!
மனிதர்கள் செல்லத் தயங்கும் இந்த இடத்தை நாசா மற்றும் பிற விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஒரு குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றன. செயல் இழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட்டின் பாகங்கள் மற்றும் விண்வெளி நிலையங்களை எங்கே போடுவது என்று தெரியாதபோது, அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் இந்த பாயிண்ட் நிமோ தான்.
வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்து போகாத பெரிய விண்வெளிக் கலங்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். எனவே, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அவற்றை இந்த ஆள் அரவமற்ற கடற்பகுதிக்குத் திசைதிருப்பிக் கடலில் மூழ்கடிக்கின்றனர். ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் உட்படப் பல நூறு விண்வெளிக் கலங்கள் இங்கே தான் சமாதி ஆகியுள்ளன.
உயிரினங்கள் இல்லாத பாலைவனம்!
பொதுவாகக் கடல் என்றாலே மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் நிறைந்து இருக்கும் என்று நாம் நினைப்போம். ஆனால் பாயிண்ட் நிமோ விதிவிலக்கானது. இங்குள்ள கடல் நீரோட்டத்தின் தன்மை காரணமாக, ஆழ்கடலில் இருந்து ஊட்டச்சத்துக்கள் மேலே வருவது தடுக்கப்படுகிறது. உணவு இல்லாததால் இங்கே மீன்களோ அல்லது சுறாக்களோ அதிக அளவில் வசிப்பதில்லை. இது கிட்டத்தட்ட கடலுக்குள் இருக்கும் ஒரு பாலைவனம் போன்றது.
அறிவியல் ஆய்வாளர்கள் கூட இங்கே என்ன இருக்கிறது என்பதை விட, இங்கே என்ன இல்லை என்பதைப் பற்றியே அதிகம் பேசுகிறார்கள்.