சுற்றுச்சூழல் காக்கவும் உயிர் காக்கும் மற்றும் உணவு, மருந்தாகவும் பயன்படும் தாவரங்கள் சில வேளைகளில் சில உயிர்களை எடுக்கும் நஞ்சாகவும் மாறிவிடுகின்றன. அப்படி ஒரு தாவரம்தான் நெய்வேலி காட்டாமணக்கு அல்லது காட்டாமணி (Ipomoea carenea) என்னும் நச்சுத் தாவரம். இதைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பசுந்தாள் உரச்செடிக்காக (Green Manure Plant) 1965 வாக்கில் இந்தியாவில் பரவலாக்கம் பெற்றதுதான் இந்த நெய்வேலி காட்டாமணக்கு. வட்டாரத்துக்குத் தகுந்தபடி பெயர் மருவி ஓணாஞ்செடி, ரேடியோ பூ செடி, எக்காளச் செடி என்றும் இது அழைக்கப்படுகிறது.
பெரிய ஊதா நிறம் கலந்த வெள்ளைப் பூக்களுடனும், பெரிய இலைகளுடனும் காணப்படும் இதன் பச்சை குச்சிகள் மற்றும் இலைகளை துண்டுகளாக நறுக்கி சணல் பையில் கட்டி தண்ணீர் பாயும் வாமடையில் போட்டு விட்டு தொடர்ந்து நீர் கட்டி வந்தால் பயிர்கள் பொலிவோடு கூடிய திரட்சியுடன் கரும்பச்சை கட்டி நிற்கும் என்கின்றனர் விவசாயிகள்.
அழகுக்கென்றும், பசுந்தாள் உரத்திற்கு என்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செடி தற்போது கவலை தரும் ஒரு விஷயமாகி விட்டது. வாய்க்கால்களைப் பெரும் அளவில் மூடி நீரோட்டத்தைத் தடுப்பதுடன், இந்தத் தாவரத்தை அறியாமல் மேயும் ஆடுகளுக்கும் பிரச்னைகளை உண்டாக்குகிறது. காரணம் இத்தழையில் கழிச்சலை உண்டாக்கும் நச்சுப்பொருளும் இரத்த அணுக்களை அழிக்கும் நச்சுப் பொருளும், நரம்புகளைத் தாக்கும் நச்சுப் பொருளும் உள்ளன.
இதனால் இத்தழையை உணவுக்காக அதிகமாக மேயும் வெள்ளாடுகள் இறந்து விடுகின்றன. சிறிய அளவில் இதை உண்ணும் ஆடுகளுக்குச் சிகிச்சை அளித்துக் குணமாக்கலாம். குறிப்பாக, வெள்ளாடுகளைப் பொருத்தமட்டில் கவனம் கூடுதலாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஏரி, குளங்களில் இந்தச் செடியின் ஒரு அடி கொடி விழுந்தால்கூட போதும், சுமார் ஐந்து வருடத்தில் ஆடு, மாடுகள் கால்களின் மிதிபட்டு உடைந்து நீர்நிலை முழுவதும் பரவி ஏரி, குளங்களை பெரிய அளவில் ஆக்கிரமித்து விடும். ஏரியின் நீர் கொள்ளளவு படுமோசமாக குறைந்து விடும். ஆகாயத் தாமரையைப் போலவே இதுவும் பெரும் இழப்பையும் பயிர்களை பாதிக்கக்கூடியதாக மாறும். களையான இவற்றைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் செடி நீர்ப்பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் நீரின் சீரான போக்கைத் தடுக்கிறது. இச்செடியின் வளர்ச்சியினால் குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் பிராண வாயு சேர்க்கை தடுக்கப்பட்டு மீன் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், இது நீர்நிலைகளின் தண்ணீரை தேய்க்கும் சக்தி வாய்ந்தது. இதன் காரணமாக காவிரி உடைப்பு கரைகளில் இந்தச் செடியை நட்டு வைத்ததால் மோசமான விளைவுகளையும் விவசாயிகள் சந்திக்கும் சூழலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் பசுந்தாள் உரச்செடியாகவும் மற்றும் பல வகைகளில் பயன்படும் காட்டாமணக்கு வெள்ளாடுகளுக்கு பாதிப்பு தரும் விஷமாகவும் மாறுவதால் இதை வளர்ப்பதில் அரசும் விவசாயிகளும் கவனம் கொள்ள வேண்டும்.