லாரல் மற்றும் ஹார்டி 1930கள் முதல் 1950கள் வரை நகைச்சுவை நடிகர்களாக ஹாலிவுட் திரைப்படங்களில் கொடிகட்டி பறந்தவர்கள். நம் இந்தியத் திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களுக்கு இவர்கள்தான் முன்னோடி.
ஸ்டான் லாரல், இவரின் உண்மையான பெயர் ஆர்தர் ஸ்டான்லி ஜெபர்சன். 1890ல் இங்கிலாந்தின் லங்காஷயரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு தியேட்டர் மேலாளராக இருந்தார். இது அவரை இளம் வயதிலேயே தியேட்டரில் வேலை செய்ய அனுமதித்தது. 1910ம் ஆண்டில், சார்லி சாப்ளினின் நகைச்சுவைக் குழுவில் இணைந்து பணியாற்றச் சென்றபோது, அவர் ஒரு உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்ட பெயரை (ஸ்டான் ஜெபர்சன்) துரதிர்ஷ்டம் என்று அவர் நம்பியதால், 1913ம் ஆண்டில் அவர் தனது கடைசிப் பெயரை ஜெபர்சனில் இருந்து லாரல் என்று மாற்றினார்.
1920களில், லாரல் ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார். ஆரம்பகால குறும்படங்களில் பணியாற்றினார். 1925ம் ஆண்டில், லாரல் ஹால் ரோச் ஸ்டுடியோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அங்கு அவர் இயக்குநராக பணியாற்றினார்.
1892ல் அமெரிக்காவில் பிறந்த ஆலிவர் ஹார்டி (குண்டு உடம்புக்காரர்) அமெரிக்க ஜார்ஜியா யுனிவர்சிட்டியில் சட்டம் படித்தவர். தனது 17 வயதில் சட்டம் படிக்கும்போது சட்டப் படிப்பு வளமான வாழ்வை தராது என்று நினைத்து தனது பெயரில் ஒரு தியேட்டரை திறந்தார். அதன் பின் தனது நடிப்பு ஆர்வம் காரணமாக அந்த தியேட்டர் வேலையை விட்டுவிட்டு புளோரிடாவில் உள்ள லூபின் திரைப்படக் கம்பெனியில் சேர்ந்து பணியாற்றினார். அங்கு அவருக்கு சின்னச்சின்ன வேடங்களே கிடைத்தன. பெரும்பாலும் வில்லன் வேடங்கள். இது 5 வருடங்கள் தொடர்ந்தது. சூட்டிங் முடிந்த பின்னர் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 1913ம் ஆண்டு கதாநாயகன் ரேஞ்ச்க்கு வந்தார். அப்படி அவர் நடித்த முதல் திரைப்படம்தான் ‘அவுட் லிட்டில் டாட்.’
1926ம் ஆண்டு ஹால் ரோசி ஸ்டியோவில்தான் முதல் முறையாக லாரலைச் சந்தித்தார் ஹார்டி. அங்கே லாரல் ஒரு இங்கிலீஷ் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத வந்தார். இந்த சந்திப்பு காரணமாக இருவரும் இணைந்து முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடித்தனர். அதுதான் ‘சிலிப்பிங ஒய்ஃப்ஸ்.’ அது இமாலய வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 24 திரைப்படங்களில் தொடர்ந்து .நடித்தனர். ஒரே தயாரிப்பாளர் கான்ட்ராக்டில் 12 வருடங்கள் தொடர்ந்து நடித்தனர்.1952ம் ஆண்டு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் ‘ராபின்சன் குரூசோ லாண்டு’ எனும் திரைப்படம்.
ஆரம்ப காலங்களில் 1930களில் முழுநீளத் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பு வரை குறும்படங்களில் மட்டுமே நடித்தனர். சன்ஸ் ஆஃப் தி டிசெர்ட் (1933), தி மியூசிக் பாக்ஸ் (1932), பேப்ஸ் இன் டாய்லேன்ட் (1934) மற்றும் வே அவுட் வெஸ்ட் (1937) ஆகியன மிகப்பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டின. 26 வருடங்கள் இணைந்தே 100 படங்களுக்கு மேல் நடித்தது ஒரு சாதனைதான். முதல்முறையாக சிறந்த நகைச்சுவை படத்திற்கான விருதை வென்றது லாரல் - ஹார்டி ஜோடி நடித்த ‘தி மியூசிக் பாக்ஸ்’ என்ற திரைப்படம்தான். 1932ம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.
லாரல் - ஹார்டி நகைச்சுவை ஜோடியில் ஒல்லியானவர் லாரல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். குண்டானவர் ஹார்டி அமெரிக்காவைச் சேர்ந்தவர். 1957 வரை இருவரும் இணைந்து நகைச்சுவை திரைப்படங்களை வழங்கி வந்த நேரத்தில் 1957ம் ஆண்டு ஹார்டி 65 வயதில் பக்கவாத நோயால் திடீரென இறந்தார். ஆலிவர் ஹார்டிக்கு குழந்தைகள் இல்லை. அவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஸ்டான் லாரல் எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அந்தளவுக்கு அவர் நட்பிற்கு மரியாதை கொடுத்து வந்தார். அதற்கு பிறகு 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் லாரல். சில காலங்களுக்குப் பிறகு ஸ்டான் லாரல் மாரடைப்பால் இறந்தார். அப்போது அவருக்கு 74 வயது.