பொதுவாகவே, குளிர்காலத்தில் நாம் உண்ணும் உணவு சூடாகவும் காரமாகவும் இருந்தால் அது ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் நன்மை சேர்க்கும்.
சூடான மற்றும் காரமான உணவுகள் உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்:
உடலை வெப்பமாக்குதல்: காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை உயர்த்த உதவும். குளிர்காலத்தில் உடல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், ஈரமான மற்றும் குளிர்ச்சியான காலநிலையில் சூடான மற்றும் காரமான உணவு மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவு, வியர்வையை தூண்டுவதால் அது குளிரை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை நீக்குகிறது.
வளர்சிதை மாற்றம் அதிகரித்தல்: மசாலாக்களில் உள்ள சேர்மானங்கள் இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் பொதுவாகவே உடல் எடை அதிகரிக்கும். மசாலா கலந்த சூடான உணவுகளை உண்ணும்போது அது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. ஏனென்றால், இது செரிமானத்தைத் தூண்டுகிறது. கலோரிகளை மிகவும் திறமையாக எரிக்க உதவுகிறது.
சுவாச ஆரோக்கியம் மேம்படுதல்: காரமான மசாலா உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடலில் இருந்து காற்று மற்றும் குளிர்கால நோய்க்கிருமி காரணிகளை வெளியேற்ற உதவும். மசாலா பொருட்கள் உடலை வெப்பமாக்கி சிறந்த சுழற்சியை ஊக்குவிக்கிறது. நுரையீரலில் இருந்து சளியை அகற்ற உதவுகிறது. சளி மற்றும் சுவாச பிரச்னைகளுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்: பல மசாலா பொருட்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. உதாரணமாக பூண்டு மற்றும் இஞ்சி போன்ற பொருட்கள் உணவில் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவும். இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
செரிமான மேம்பாடு: சூடான, காரமான உணவுகள் செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத் திறனை அதிகரிக்கும். பொதுவாக குளிர்காலத்தில் உடலின் செரிமானத் திறன் மிகவும் மெதுவாக நடக்கும். எனவே, உடல் ஆரோக்கியத்திற்கு காரமான மசாலா சேர்ந்த உணவுகள் மிகவும் முக்கியமானது.
நீரேற்றம் அதிகரித்தல்: காரமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் வெளியேறும் வியர்வை நீரேற்ற அளவை பராமரிக்க உதவுகிறது. ஏனென்றால், இது வெப்ப உணர்வை சமன் செய்ய திரவ உட்கொள்ளலை ஊக்குவிக்கிறது. வியர்க்கும்போது நாம் அதிகமாக நீர் குடிப்போம். இது குளிர் கால தொடர்பு கால நிலையுடன் தொடர்புடைய வறட்சியைத் தடுக்க உதவுகிறது.
குளிர்கால நோய்களிலிருந்து விரைவில் மீண்டு வருதல்: காரமான மசாலாக்களில் உள்ள கேப்சைஸின் என்கிற பொருள் சளியை இளக்கி சுவாசக் குழாயிலிருந்து வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது. இது நெஞ்செரிச்சலை குறைக்க வழி வகுக்கிறது மற்றும் சுவாசத்தை எளிதாக்குகிறது.
பக்கவிளைவுகள்: காரமான உணவுகளை உண்ணுவது ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் சில நபர்களுக்கு பக்க விளைவுகளையும் உண்டாக்கும். காரமான உணவுகள் இரைப்பைக் குழாயை எரிச்சல் அடையச் செய்து நெஞ்செரிச்சல், அமில ரிப்ஃலெக்ஸ் அல்லது அஜீரணம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். காரமான உணவுகளை அதிகப்படியாக உட்கொள்வது அதிகப்படியான வியர்வைக்கு வழிவகுக்கும்.
சில நபர்களுக்கு மசாலா அல்லது மிளகுத்தூள் ஒவ்வாமை இருக்கலாம். இதனால் படை, அரிப்பு போன்ற சரும நோய் ஏற்படலாம். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு காரமான உணர்வுகள் சங்கடங்களைத் தரலாம். எனவே குளிர்காலத்தில் சூடான காரமான மசாலா சேர்த்த உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.