இராக்கொக்கு (Black - Crowned Night Heron) என்பது நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினம். இவற்றின் பேரினப் பெயரான Nycticorax என்பதற்கு 'இரவின் காகம்' என பொருள். இவை இரவில் பெரும்பாலும் வேட்டையாடுதலாலும், இவற்றின் ஒலி காகம் கரைவதைப் போலிருப்பதாலும் இவ்வாறாகப் பெயரிட்டனர்.
இளம் பறவைகள் பழுப்பும்-இளஞ்சிவப்பும் கலந்த உருவையும், பல இடங்களில் வெளிரிப்போன புள்ளிகளையும் கொண்டுள்ளன. அடிப்பகுதிகள் வெளுத்துப் போயிருக்கும். கண்கள் இளஞ்சிவப்பு கண்களும் பச்சை-மஞ்சள் கால்களும் கொண்டுள்ளன. இவைகள் மிகவும் அதிகமாக ஒலியெழுப்பும் தன்மையோடு ‘குவாக், குவாக்’ அல்லது ‘வாக், வாக்’ என்று கூக்குரலிடுகின்றன.
வளர்ந்த பறவைகட்கு கருப்பு நிறத்தில் தொப்பியினைப் போன்ற அமைப்பு தலையின் மீது இருப்பது தவிர, வெள்ளையாகவோ, பழுப்பாகவோ உடல் உள்ளது. சிவந்த கண்களும், குட்டையான மஞ்சள் நிறக்கால்களும் இருக்கும். கருத்த நிறத்திலும் மஞ்சள் கலந்த நிறத்திலும் அலகு உண்டு. இளம்பழுப்பு நிறத்தில் சிறகுகளும், கழுத்தும் உடலின் அடிப்பகுதியும் வெளிரிப் போனது போல் இருக்கும்.
இனவிருத்திக் காலங்களில், இரண்டு அல்லது மூன்று இறகுகள் மட்டும் தலையின் பின்புறம் நீண்டிருப்பதுண்டு. இரு பாலினமும் ஒன்றாயிருப்பினும் ஆண்கள் பெரியதாக இருப்பதைக் காணலாம். இவை மற்ற நாரைகள் அல்லது கொக்குகள் போன்றில்லாமல் சற்றே தடித்த உடல் வாகுடனும் நீளம் குறைந்த அலகினையும் கால்களும், கழுத்தும் கொண்டுள்ளன.
கூனல் போட்டது போன்று அமர்ந்திருப்பது இதன் சிறப்பம்சம். இவை வேட்டையின் போது மட்டும் கழுத்தை நீட்டுவதால், இராக்கொக்கை நீரில் மேய்ந்துண்ணும் பறவைகளோடு (Wading Nirds) ஒப்பிட இயலும். மற்ற மீனுண்ணும் பறவைகள் பகலில் வேட்டையாட, இவை மட்டும் இரவுப் பறவையாயின.
இவை பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப் பொழுதுகளிலும் இரவிலும் கூட்டங்களாக வேட்டையாடக் கிளம்புகின்றன. இராக்கொக்குகள் நீரின் கரையருகே இரவிலும் அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளை பார்த்திருக்கும். தருணம் சரியாய் அமையும் வேளையில் இவை கொத்திப் பிடித்துண்ணுகின்றன. இவற்றின் முக்கிய உணவு சிறிய மீன்கள், தவளைகள், தேரைகள், பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சிறிய பாலூட்டிகளுமாகும். இவற்றின் உடல் நீளம் சுமார் 64 செ. மீட்டர் வரையும் எடை 800 கிராம் வரையும் இருக்கும்.