
உலகின் விசித்திரமான விலங்கான ‘அய் அய்’, ஆப்பிரிக்க கண்டத்தின் மடகாஸ்கர் தீவில் உள்ள காடுகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறது. இது லெமூர் என்ற விலங்கினத்தின் மிகச்சிறிய பாலூட்டியாகும். லெமூர் என்றால் லத்தீன் மொழியில் ‘இரவு ஆவி’ என்று பொருள். இவை இரவு நேரங்களில் மட்டும் உணவை தேடி வருவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கின்றன. இருள் சூழ்ந்தவுடன், மரத்தின் உச்சிகளில் உணவு தேடும் உயிரினங்கள் இவைகள்.
உள்ளூர் கதைகளின்படி, இந்த விலங்கை கண்டால் துரதிர்ஷ்டம் அல்லது மரணம் கூட ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதனால் இதை கண்டவுடன் கொன்று விடுகின்றனர். மடகாஸ்கரின் காடுகளை கண்மூடித்தனமாக வெட்டுவதால், அய்-அய் விலங்குகள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. அதனால் அரசாங்கம் இந்த விலங்குகளை பாதுகாத்து வருகிறது. தற்போது குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் விலங்குகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
அய் அய், வவ்வால் போன்ற காதுகள், மிகப்பெரிய கண்கள், நீண்ட எலும்பு கூடு போன்ற விரல்களை கொண்டுள்ளது. அய்-அய் விலங்கின் கைகளில் உள்ள நடு விரல் மற்ற விரல்களை விட மிக நீளமானது. மரத்தில் ஓட்டை போடவும், மரப்பட்டைகளை கிழித்து பூச்சிகளை உண்ணவும் இது பயன்படுகிறது. இதன் முக்கிய உணவான புழு மற்றும் பூச்சிகள் கிடைக்காத போது, காளான்கள், பழங்கள் மற்றும் கொட்டைகளை உணவாகக் கொள்கிறது.
அய் அய் விலங்கின் வௌவால் போன்ற காதுகள் உணவை கண்டுபிடிக்க உதவுகின்றன. மரங்களில் உள்ள வெற்று பகுதிகளை விலங்கு தட்டும்போது ஏற்படும் எதிரொலிகள் மூலம் இந்த உணர்திறன் உறுப்புகள் கண்டறிய முடியும். இது பெர்குசிவ் ஃபார்ஜிங் என்று அழைக்கப்படுகிறது.
பெரிய, வட்டமான கண்கள் இரவு நேரத்தில் விலங்குகளை பார்க்க உதவுகின்றன. இவற்றின் பற்கள் cinder block-கை மெல்லும் அளவுக்கு வலிமையானவை.
நன்கு வளர்ந்த அய் அய் விலங்கு 36-43 செ.மீ. நீளம் வரை உடல் பாகமும், 56-61 செ.மீ. நீளம் கொண்ட வாலும், 1.8 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும். காடுகளில் இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் எனக்கூறப்படுகிறது.
அதன் விசித்திரமான தோற்றம் மற்றும் விசித்திரமான நடத்தையுடன், அய் அய் விலங்கு பல்வேறு விசித்திரமான தன்மைகளைக் கொண்ட ஒரு உயிரினமாக கருதப்படுகிறது.
அவ்வப்போது தரையில் இறங்கி மனித பகுதிகளை ஆராய்கிறது. பகலில், அய் அய் இலைகள் மற்றும் கிளைகளால் ஆன விரிவான, கூடுகளில் தூங்குகிறது.
அச்சுறுத்தப்படும்போது அல்லது உற்சாகமாக இருக்கும்போது, அய் அய் அதன் பாதுகாப்புக்காக முடிகளை உயர்த்தி, இருமடங்காக பெரிய விலங்கு போல் காட்சி தரும்.