ஒலி மாசுவினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!

Noise pollution
Noise pollutionhttps://urbanacres.in
Published on

சாதாரணமாக உரக்கப் பேசுவது, அதிக சத்தத்தோடு பாட்டு கேட்பது போன்ற ஒலி மாசுக்களை பெரிய விஷயமாக நாம் எடுத்துக்கொள்வதில்லை. அதை ஒரு மாசாகவும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஒரு குழந்தை தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழுவதை அந்த வீட்டில் உள்ளவர்கள் கவனித்தார்கள். கவனித்துப் பார்த்ததில் தினசரி அந்த நேரத்தில் அவர்கள் வாஷிங் மெஷின் போடுவது வழக்கமாக இருந்தது. அந்த சத்தம் கேட்டு குழந்தை அழுதது. இதுவும் ஒரு ஒலி மாசுதான். ஒலி மாசுவினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

டெசிபல் தெரிவிப்பது: நிலத்தில் விரும்பத்தகாத ஒலியை வெளியிடுவது ஒலி மாசு எனப்படுகிறது. இது நிலம், நீர், காற்று மாசுறுதல் போன்று தேங்காவிட்டாலும், அமைதிச் சூழலை கெடுப்பதால் சூழ்நிலையை மாசுபடுத்தலில் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. சிலருக்கு இனிமையாக இருக்கும் ஒலி, வேறு சிலருக்கு எரிச்சலாகத் தெரியும். எனவே, ஒலி அது வெளியேற்றும் உரத்தத் தன்மை, நேரம், ரிதம், தாள லயம் போன்றவை கேட்போரின் மனநிலையைப் பொறுத்து அது மாசுபடுத்துகிறதா, இல்லையா என்பதை அறிய முடிகிறது. ஒலியானது காற்றில் ஒரு அலை போன்று பரவுகிறது. ஒலியின் வலிமை டெசிபல்களால் அளக்கப்படுகிறது. ஒலியை அளக்க உதவும் கருவிக்கு சோனா மீட்டர் என்று பெயர். ஒலியின் அளவு 35 டிபி முதல் 60 டிபி வரை சாதாரணமாகத் தாங்கக்கூடியதாக இருக்கிறது. 80 டிபிக்கு மேல் உள்ளது காது கேளாமையை ஏற்படுத்தும்.140 டிபி வேதனையை தரக்கூடியது.

மூலங்கள்: தொழில் மயமாக்குதல், நகர் மயமாக்குதல் ஆகிய மனித மேம்பாட்டின் விளைவுகளே ஒலிச்சீர்கேடு. டேங்க், ஆர்ட்டிலெரி போன்ற ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இராணுவத்தினர் மேற்கொள்ளும் ராக்கெட் பறக்க விடுதல், வெடி மருந்துகள் வெடித்தல், துப்பாக்கி மற்றும் இதர ராணுவ ஆயுதங்களை இயக்கும் பயிற்சி ஆகியவற்றாலும் நூற்பாலைகள், பஞ்சாலைகள், அச்சாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவற்றாலும் போக்குவரத்து சாலைகளில் பயன்படுத்தும் இரு சக்கர மற்றும் நான்கு, ஆறு சக்கர வாகனங்களாலும் (65 டிபி முதல் 85 டிபி வரை), வானத்தில் பறக்கும் ஆகாய விமானங்கள் புறப்படும்போதும் இறங்கும் போதும் ஏற்படுத்தும் இரைச்சல், நம் வீட்டில் பயன்படுத்தும் கிரைண்டர், ஏர் கூலர், ஏர்கண்டிஷனர், வேக்கும் கிளீனர் ஆகியவற்றாலும் வானொலி, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களாலும், விழா காலங்களில் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும் ஒலி மாசுகள் ஏற்படுகின்றன.

ஒலி மாசுவால் ஏற்படும் பாதிப்புகள்: எதில் எல்லாம் அளவுக்கு மீறிய இரைச்சல் வருகிறதோ அது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் காது கேளாமையை ஏற்படுத்துவதுடன் தூக்கமின்மை காரணமாக பலவித நோய்கள் தோன்ற காரணமாக அமைகிறது. ஒலி மாசு விபத்துகள், இயங்கு தசைகள் பாதிக்கப்பட்டு மூளை, கண்கள் மற்றும் தலைப்பகுதியில் உள்ள தசைகளின் விரைப்புத் தன்மை அதிகரிக்கிறது. கை, கால் விரல்கள் மற்றும் செவிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. மூச்சு விடுதல், இதயத்துடிப்பு மற்றும் உடல் அசைவுகளில் மாற்றம் தோன்றுகிறது.

நரம்பு மற்றும் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு பால் செயல்கள் மற்றும் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. மனோதத்துவ ரீதியான பாதிப்பு, தலைவலி, மயக்கம், வாந்தி, எரிச்சல், கோபம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், இதய கோளாறுகள், சரும நிறம் மாறுதல், பெண்களுக்கு கருச்சிதைவு, அமைதியின்மை தோன்றுகிறது. பிறக்கும் குழந்தையின் பார்வை பாதிக்கப்படுதல், நமது கவனத்தை திசை திருப்பி மனநிலையை சீர்குலைத்தல், வீடு மற்றும் வன விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களைப் போலவே பாதிப்புகளை உண்டாக்குகிறது என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
புரூனில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Noise pollution

நாம் செய்ய வேண்டியது: அளவுக்கு அதிகமாக இரைச்சல் கேட்கும் இடத்தை விட்டு நகர்ந்து விடுவது நல்லது. வானொலி தொலைக்காட்சிகளை எப்பொழுதும் அலர விடாமல் குறைந்த ஒலியில் தேவையானபொழுது மட்டும் வைத்து கேட்பது நலம்.

திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது இப்பொழுது எல்லாம் பதில் மரியாதைக்கு மரம் கொடுக்கிறார்கள். அதை வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் சாலை ஓரங்களிலும் அதன் மையப் பகுதியிலும் வைத்து வளர்க்கலாம்.

விழா காலங்களில் அதிக பட்டாசு வெடிப்பதை குறைக்கலாம். அதேசமயம் நீண்ட நேரம் வெடிப்பதையும் குறைக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும் தொழிற்சாலைகள், ரயில்வே நிலையங்கள் போன்ற பக்கங்களில் குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com