எத்தனால் பெட்ரோல் என்பது, கரும்புச்சக்கை, மக்காச்சோளம் கழிவு, அரிசி கழிவு மற்றும் உணவு தானியக் கழிவுகளை நொதிக்கச் செய்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகையில் வரும் ஈஸ்ட் மூலம் இந்தத் தயாரிப்பு நடைபெறுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. வாகனங்களுக்கு எத்தனால் பெட்ரோல் போடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நன்மைகள்: எத்தனால் பெட்ரோல் போடுவதால் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அசுத்தம் குறையும். கார்பன் தடயத்தை குறைத்து காற்றை சுத்தமாக்குகிறது. பெட்ரோலுடன் 20 சதவிகிதம் எத்தனால் கலக்கப்படுவதால், இந்த எரிபொருள் வாகனப் பயன்பாட்டிற்கு வருகிறது.
இதனால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி மிச்சப்படுகிறது. விவசாயிகளுக்கு 40 ஆயிரம் கோடி ஆண்டு ஒன்றுக்கு லாபம் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் 11 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்கள் 83 இடங்களிலும் இது செயல்பாட்டில் உள்ளது. எத்தனால் பெட்ரோல் புகை படியாத எரிபொருளாகும். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 30 முதல் 40 சதவிகிதம் வரை வெளியேறும் கார்பன் மோனாக்சைடு குறைகிறது. எத்தனால் பெட்ரோல் எளிதில் தீப்பிடிக்கக் கூடியதாகும். இதனைக் கையாள்வதும் சேமிப்பதும் சற்று ஆபத்தானது என்று கூறுகிறார்கள்.
கரும்பு, மக்காச்சோளம், அரிசி மற்றும் உணவு தானியக் கழிவுகள் மூலம் இது தயாரிக்கப்படுவதாக இருந்தாலும், உணவு தானியக் கட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சமும் ஒருபுறம் நிலவுகிறது. சிலர் இதைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறையும் என்றும் சொல்கிறார்கள். அது தவறு என மத்திய வாகன ஆராய்ச்சி நிறுவனம் மறுத்துள்ளது. 15 ஆண்டுகள் பயன்படுத்திய வாகனங்களுக்குத்தான் இந்த பாதிப்பு ஏற்படும். அதுவும் தேய்மானத்தால் என்று கூறப்படுகிறது.
2030க்குள் எத்தனால் பெட்ரோல் பயன்பாடு 20லிருந்து 30 சதவீதம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எத்தனால் பெட்ரோல் என்பதை இ20 என அழைக்கிறார்கள். இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறையும் என்பது உண்மைதான். ஆனால், எத்தனால் தயாரிக்கும்போது ஏற்படக்கூடிய ‘வினோஸ்’ என்ற கழிவு மிகவும் ஆபத்தானது.
இது அக்கம் பக்கத்தில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் உள்ளது. எது எப்படியோ இதனால் ஆண்டுக்கு நமக்கு 40,000 கோடி அந்நிய செலாவணி மிச்சப்படுகிறது. விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது. எத்தனால் பெட்ரோல் பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 245 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
இதன் மூலம் 2070க்குள் இந்தியாவை மாசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது.
736 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு குறைக்கப்படுகிறது. இது மண்ணில் 30 கோடி மரங்கள் நடுவதற்கு சமமாகும். பிரேசில் போன்ற பல நாடுகளில் 27 சதவிகிதம் எத்தனால் பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது. அங்கு வாகன உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் கூறப்படுகிறது.