

மழைக்காலம் வந்து விட்டாலே மலைப் பகுதிகளில் நிலச்சரிவு என்பது சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது. அதனால், நிலச்சரிவைத் தடுக்க இயற்கையான வழிமுறைகளைக் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறோம். அந்த வகையில் நிலச்சரிவுகளைத் தடுக்கும் மரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
மலைப்பகுதிகளில் ஏற்படும் ஓர் இயற்கைப் பேரிடர்தான் நிலச்சரிவு. மண் அரிப்புதான் இதற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலே போதும், நிலச்சரிவை தடுத்து விடலாம். பொதுவாக, மழைக்காலங்களில்தான் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இயற்கைப் பேரிடரான நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.
நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், இந்த மலைப்பகுதிகளில் பாரம்பரியம் மிக்க சோலைக் காடுகள் உள்ளன. இவை மிகவும் ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால், மண் அடுக்குகளில் திடமான பிடிப்புத் தன்மை ஏற்படும். இதனால் மண் அரிப்பு ஏற்படாது. மண் அரிப்பு ஏற்படவில்லை என்றால், நிலச்சரிவுக்கும் வாய்ப்பிருக்காது. ஆகையால், நீண்ட ஆழத்திற்கு வேர் விடும் மரங்கள் இருந்தால் நிலச்சரிவைத் தடுக்க முடியும்.
தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் யூகலிப்டஸ் மற்றும் சவுக்கு போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் என்பதால், மண் வளம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், இம்மரங்கள் குறைந்த அளவு வேர்களையே கொண்டிருப்பதால், மிக எளிதில் மண் அரிப்பு ஏற்படும். கட்டுமான வேலை மற்றும் விறகு பயன்பாடு போன்ற சில காரணங்களுக்காக முன்பு இம்மரங்கள் வளர்க்கப்பட்டன. ஆனால், இம்மரங்களால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை விட, தீமைகள்தான் அதிகமாக உள்ளன.
அதிக ஆழம் மட்டுமின்றி, அதிக பரப்பளவிலும் வேர் விடும் மரங்கள்தான் மலைப்பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரங்கள். இதன் வேர்கள் மண்ணின் பிடிப்புத் தன்மைக்கு உதவுகின்றன. இம்மரங்கள் மட்டுமின்றி, பாரம்பரிய புற்களை வளர்ப்பதும் மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. இதனை சோதனை செய்யும் முறையில், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் சோலை மரங்கள் மற்றும் பாரம்பரிய புற்கள் வளர்க்கப்பட்டன.
இதன் மூலம் இந்த இடத்தின் உயிர் சூழல் மேம்பட்டது மட்டுமின்றி, வன விலங்குகளின் வருகையையும் அதிகரித்துள்ளது. காடுகளை அழியாமல் பாதுகாப்பதில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைப் பாதுகாப்பதன் மூலமும் நிலச்சரிவைத் தடுக்க முடியும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.