

விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய பழ வகைகளுள் கொய்யாவும் ஒன்று. ‘ஏழைகளின் ஆப்பிள்’ என அழைக்கப்படும் கொய்யா பழத்தில் ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்யலாம். ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் விவசாயிகள் கொய்யா சாகுபடியில் தடுமாறுகின்றனர். கொய்யாவில் அதிக விளைச்சலைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
சரியான பராமரிப்பும், விற்பனைத் திறனும் இருந்தால் கொய்யாவில் அதிக லாபத்தை விவசாயிகளால் ஈட்ட முடியும். இருப்பினும் மற்ற பயிர்களின் மீது கவனம் செலுத்துவதால், பலரும் கொய்யா சாகுபடி பக்கம் திரும்புவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், காய் பிடிக்கும் பருவத்தில் ஒரே ஒரு மழை பெய்தால் கூட கொய்யா பழத்தில் புழுக்கள் வந்து விடுவதுதான். இருப்பினும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கொய்யா சாகுபடியிலும் லாபத்தை அள்ள முடியும்.
வருடத்திற்கு ஒருமுறை கொய்யா மரங்களில் தேவையில்லாத கிளைகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும். கிளைகள் துளிர்த்து புதிதாக வளரும்போது அதிகமாகக் காய் பிடிக்கும். மேலும், மரத்தின் அனைத்துப் பாகங்களின் மீதும் சூரிய ஒளி பட வேண்டும். சூரிய ஒளி பட்டாலே கொய்யா பழங்களில் புழு, பூச்சி தாக்குதல் இருக்காது.
கோடைக் காலங்களில் கொய்யாவில் மாவுப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் கிளைகள் கறுப்பாக மாறி, காய்ந்து விடும். ஆகையால், மாவுப் பூச்சிகள் தாக்கியவுடனே தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பூச்சிகள் கீழே விழுந்து விடும். 1 லிட்டர் தண்ணீரில், 5மி.லி. மீன் சோப்புக் கரைசலைக் கலந்து தெளித்தாலும் மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
தேயிலை கொசு பாதிப்பு ஏற்பட்டால் பூங்குருத்து மற்றும் நுனிகுருத்து வெகுவாக பாதிக்கப்படும். மேலும் காய்களில் துளையிட்டு சாறை உறிஞ்சுவதால், மேல்பகுதி கடினமாகி கறுப்புப் புள்ளிகள் தோன்றும். இதனால் சந்தையில் கொய்யாவை பலரும் விலைக்கு வாங்க மாட்டார்கள். இதனைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது கருவாட்டு பொறியைக் கலந்து தெளிக்கலாம். கொய்யாவில் பழ ஈக்களைக் கட்டுக்குள் கொண்டு வர, 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. மாலத்தியானைக் கலந்து தெளிக்கலாம்.
காய்கள் அனைத்தும் சிறுத்து வெடிப்புற்றவாறு காணப்பட்டால், இதனைக் கட்டுக்குள் கொண்டு வர 1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் பேராக்ஸை நன்றாகக் கலந்து தெளிக்கலாம். பூக்கும் தருணம் மற்றும் காய்க்கும் தருணத்தில் இதனைச் செய்யலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் யூரியா மற்றும் 10 கிராம் துத்தநாக சல்பேட்டைக் கலந்து, இலை வழியாகத் தெளித்தால் அதிகளவில் பிஞ்சுகளும், காய்களும் உருவாக வாய்ப்புள்ளன. அதோடு, இந்தக் காய்கள் நல்ல ருசியுடனும் இருக்கும். இந்தக் கரைசலை ஆண்டிற்கு இரண்டு முறை என அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் தெளிப்பது நல்ல பலனைத் தரும்.
மேற்கண்ட வழிமுறைகளை கொய்யா விவசாயிகள் முறையாகப் பின்பற்றி வந்தால், ஒவ்வொரு மரத்திலும் 250 முதல் 300 வரை கொய்யா காய்கள் கிடைக்கும் என்பது உறுதி.