

மழையே மண்ணின் மகரந்தம்!
மழைதான் மண்ணின் மகரந்தம்
மனிதன் மகிழ்வாய் வாழ்ந்திடவே
அதுதான் என்றும் ஆதாரம்
அதற்குள் இருக்குது உயிர்மூச்சு!
காற்றும் மாரியும் கைகோர்த்தே
கார்த்திகை ஐப்பசி மாதங்களில்
ஊரைச் சுற்றக் கிளம்பிடுமே
உயரிய பசுமையைப் பெருக்கிடவே!
சென்னை நகரின் மழைநாட்கள்
செழிப்பாய் தொண்ணூறு தினங்களாகும்!
ஆண்டின் கால்பகுதி நாட்களில்தான்
அடர்ந்தே மழையும் பெய்திடுமாம்!
அதனையும் ஏற்க மறுத்திட்டால்
அடுத்த ஆண்டு முழுவதுமே
குடிநீர் கேட்டு குடத்துடனே
கூனிக்குறுகி நிற்க வேண்டும்!
மழையை நாமும் வரவேற்போம்
மகிழ்ந்தே அதனையும் போற்றிடுவோம்!
காற்றும் மழையும் நம்தோழர்
கனிவை வழங்கிடும் நல்நண்பர்!
முக்கால் பகுதி ஆண்டினிலே
முழுதாய் அடிக்கும் வெயிலிலே
சருகாய்க் கிடந்து காய்கையிலே
சங்கடமொன்றே மன நிழலாடும்!
அதனைப் போக்கும் அருமருந்து
அடித்து வெளுக்கும் மழையொன்றே!
மாற்றாந் தாயின் மனநிலையில்
மாநகரை அதுவும் மறந்திட்டே!
‘தித்வா’தானும் இரக்கங்கொண்டே
திரிகோணமலை சென்ற அதனை
மெல்ல மெல்ல நகர்த்திவந்து
மென்மை சென்னையில் விட்டதுவே!
மழையை என்றும் நேசிப்போம்!
மகிழ்ந்தே அதனையும் சுவாசிப்போம்!
உலகி்ல் நிகழும் அற்புதங்களை
ஒன்றாய் நிகழ்த்துவது மழையன்றோ!
நம்மை நாமே தயார்படுத்தி
நல்ல மழையை வரவேற்போம்!
அடாவடியாய் அதை எதிர்க்கும்
அவலத்தை இனிமேல் அரங்கேற்றோம்!