
பொதுவாக, கடல் என்றால் அதில் மீன்கள், ஆமைகள், நட்சத்திர மீன்கள், பவளப்பாறைகள், திமிங்கலங்கள், சுறாக்கள், பல்வேறு கடல் தாவரங்கள் என்று பல உயிரினங்கள் வாழும். நீச்சல் தெரியாத மனிதர்கள் கடலில் இறங்கினால் மூழ்கிப் போவார்கள். ஆனால், சாக்கடலின் ஒரே ஒரு உயிரினம் கூட வாழ முடியாது. மேலும், இதில் மனிதர்கள் யாரும் மூழ்கி இறக்கவும் முடியாது.
சாக்கடல் என்பது மிகவும் உப்புத் தன்மை கொண்ட நீர் நிலையாகும். கடல் மட்டத்தை விட கீழே அமைந்துள்ள இந்தப் பகுதி உயிரினங்கள் உயிர் வாழ முடியாத அளவுக்கு உப்புத் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதில் மனிதர்கள் நீந்துவதும் மிகக் கடினம். இந்தக் கடலில் மிதக்க மட்டுமே முடியும்.
சாக்கடல் என்று ஏன் பெயர் வந்தது?
பிற கடல்கள் தாவரங்களும் கடல் வாழ் ஜீவராசிகளும் வாழும் வகையில் உணவும் நீரும் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், ஆங்கிலத்தில் ‘டெட் ஸீ’ என்று அழைக்கப்படும் சாக்கடலில், கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள் உயிர் வாழ முடியாத அளவுக்கு உப்புத் தன்மை நிறைந்ததாக இருப்பதால் இதற்கு சாக்கடல் என்று பெயர்.
சாக்கடல் எங்கே இருக்கிறது?
சாக்கடல் என்பது தனித்துவமான குறிப்பிடத்தக்க இயற்கை அதிசயமாகும். உண்மையில் சாக்கடல் என்பது கடல் அல்ல, ஒரு ஏரி. பூமியின் நிலப்பரப்பில் மிகக் குறைந்த இடத்தில் அமைந்துள்ளது. இது ஜோர்டான் பிரிவு பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு நிலத்தால் சூழப்பட்ட உப்பு ஏரியாகும். கிழக்கே ஜோர்டானையும் மேற்கே இஸ்ரேலையும் கரையாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 400 மீட்டர் கீழே அமைந்திருக்கிறது.
அதீத உப்புத்தன்மைக்குக் காரணம்: ஜோடான் நதி மற்றும் சிறிய ஓடைகளிலிருந்து தண்ணீர் இதில் பாய்கிறது. ஆனால், தண்ணீர் வெளியேறும் வழி இல்லை. வெப்பமான வறண்ட காலநிலையில் விரைவில் ஆவியாதல் மூலமே தண்ணீர் வெளியேறும். இதனால் இதில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்கள் செறிவூட்டப்பட்டு உப்புத் தன்மை அதிகமாகிறது.
பூமியில் உள்ள மிகவும் உப்புத்தன்மை கொண்ட நீர் நிலைகளில் இதுவும் ஒன்று. இதன் உப்பு தன்மை சுமார் 34.2 சதவிகிதம் ஆகும். சராசரி கடலை விட பத்து மடங்கு உப்புத் தன்மை கொண்டது. மெக்னீசியம், கால்சியம், குரோமைடு உள்ளிட்ட கரைந்த உப்புகள் மற்றும் தாதுக்களின் காரணமாக இது அதிகளவு உப்புத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது.
இதன் கரையோரங்களில் காணப்படும் இருண்ட தாதுக்கள் நிறைந்த சேறு சுகாதாரம் மற்றும் அழகு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. சரும பராமரிப்புப் பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. தடிப்பு சரும அழற்சி, மற்றும் அரிக்கும் சரும அழற்சி போன்ற சரும நிலைகளை குணப்படுத்துகிறது. தற்போது இந்தப் பகுதி சுகாதார ஸ்பாக்கள் மற்றும் ரிசார்ட்டுகளுக்கான மையமாக மாறி உள்ளது.
சாக்கடலின் தற்போதைய நிலை: ஜோர்டான் நதியிலிருந்து விவசாயம் மற்றும் தொழில்துறைக்காக நீர் திருப்பிவிடப்படுவதால், சமீபத்திய நாட்களில் சாக்கடலின் நீர் மட்டம் வியத்தகு முறையில் குறைந்து வருகிறது. இதனால் அதன் பரப்பளவு சுருங்கி, கடல் இப்போது இரண்டு தனித்தனி படுகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.