
மனிதர்களிடம் மட்டுமே நாம் பரோபகாரம், பச்சாதாபம் போன்ற நற்பண்புகளைக் காண்பதுண்டு. அப்படிப்பட்ட குணமுடையோர்கள் தாம் வளர்த்து வரும் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளிடமும் சக மனிதர்களிடமும் அன்பாயிருப்பார்கள். விலங்குகள் இனத்திலும் சில அவ்வாறான நற்பண்புகள் கொண்டு வாழ்ந்து வருகின்றன என்பது நம்ப முடியாததாக உள்ளது. அப்படிப்பட்ட 10 வகை விலங்குகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. டால்பின் (Dolphin): மிக புத்திசாலியான, சமூக அக்கறை கொண்டது டால்பின். காயம் பட்ட தன் இனத்து மீன்களை நீரின் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும். தனிமையில் ஒதுக்கப்பட்டு திசை தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் திமிங்கலத்தை பத்திரமாக கடலின் ஆழப் பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு வரும். சுறா மீன் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளுக்கு நீந்தச் செல்லும் நீச்சல் வீரர்களைக் காப்பாற்றவும் உதவி புரியும்.
2. போனோபோ (Bonobo): இது மற்ற விலங்குகளுக்குள் பிரச்னை ஏற்படும்போது, ஆக்ரோஷப்படாமல், அன்போடு பேசி நிலைமையை சீராக்கும். அமைதிக்குப் பாதகம் வராமல், இணக்கமுடன் ஒத்துழைப்பும் தரக்கூடிய சமூகத்தை உருவாக்கப் பாடுபடும்.
3. ஹம்ப்பேக் திமிங்கலம் (Humpback Whale): இந்த மிகப் பெரிய உருவமுடையை திமிங்கலம் மென்மையான குணம் கொண்டது. மற்ற கடல்வாழ் உயிரினங்களை எதிரிகள் தாக்க வரும்போது, அவற்றைக் காப்பாற்றவும், எதிரிகளுக்கு பரோபகாரம் பற்றி உணர்த்தவும் செய்யும்.
4. யானை (Elephant): பிறரிடம் பச்சாதாபம் காட்டுவதில் முன்னணியில் நிற்பது யானை. மன உளைச்சலில் இருக்கும் மற்ற யானைகளை ஆறுதல் டுத்தவும், இறந்துபோன யானைக்காக வருத்தப்படவும் செய்யும். நட்புடன் பழகிய ஒரு யானை ஓரிடத்தில் விழுந்து இறந்து விட்டால், அந்த இடத்தை ஞாபகம் வைத்து அவ்வப்போது அங்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வரும்.
5. மனாட்டி (Manate): 'கடல் பசு' என்ற பெயராலும் அழைக்கப் படும் இந்த விலங்கு அதிகளவு ஆர்வமும் மென்மையான குணமும் கொண்டது. மனிதர்கள் இருக்கும் இடம் வரை பயமின்றி நீந்திச் செல்லும். வெது வெதுப்பான நீருள்ள சூழ்நிலையில் அவர்களுடன் பழகி மகிழும்.
6. பெங்குயின் (Penguin): பெங்குயின்கள் அன்பான பெற்றோர். முட்டைகளை மாற்றி மாற்றி அடைகாக்கும். சமூகக் குழுவில் உறுப்பினராயிருக்கும். கூட்டங்களில் பங்கேற்கும். குழுத் தலைமை குழந்தைகளுக்கு நேர்மறையான, ஆதரவான சூழலில், உணர்ச்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்ச்சியடைய உதவும்.
7. கடல் ஆட்டர் (Sea Otter): தாடி வைத்திருக்கும் இந்த கடல் விலங்குகள் எப்பவும் ஜோடியாக அல்லது குழுவாக கைகளைப் பற்றிக்கொண்டு பாதுகாப்பாக நீரில் மிதந்து செல்லும். அம்மா ஆட்டர் தனது குட்டியை கையில் ஏந்தி, பாதுகாப்பாக உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அரிச்சுவடி பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
8. கினிப் பிக் (Guinea Pig): கினிப் பிக் எப்பவும் கூட்டாளிகளுடன் இருப்பதையே விரும்பும். தனது இனத்தைச் சேர்ந்த பிற பிக் மற்றும் மனிதர்களுடன் உணர்ச்சிபூர்வமாகவும், சோஷியலாகவும், மிக மென்மையான குரலில் பேசிப் பழகும்.
9. கேப்பைபாரா (Capybara): மிகவும் அமைதியாகவும் நட்புடனும் பழகக்கூடிய கொரித்துண்ணி இது. மற்ற விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றுடன் சமூக ரீதியாக அன்போடு கலந்துரையாடுவதில் ஆர்வம் கொண்டது.
10. முயல் (Rabbit): செல்லப் பிராணியாக வளர விரும்பும். அன்போடும் நட்புணர்வோடும் வளர்த்து வந்தால், நம்பிக்கையோடு உறவை வளர்த்துக் கொள்ளும்.