இருவாட்சிப் பறவை ஆங்கிலத்தில் Hornbill என அழைக்கப்படுகிறது. எங்கும் எப்போதும் ஆண், பெண் இருவாட்சிப் பறவைகள் இணைந்தே செல்லும் வழக்கமுடைய ஒரு அரிய பறவை இனமாகும். பெரிய அலகை உடைய இப்பறவைகள் பறக்கும்போது பெரும் சத்தத்தை எழுப்பும் ஆற்றலுடையவை.
இருவாட்சிப் பறவைகளின் அலகின் மேற்புறத்தில் ஒரு கொண்டை போன்ற அமைப்பு காணப்படும். இந்த அமைப்பு இப்பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது. இதனால் தமிழில் இப்பறவை ‘இருவாய்க் குருவி’ என்றும் ‘இருவாய்ச்சிப் பறவை’ என்றும் அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதிலும் ஐம்பத்தி நான்கு இருவாட்சிப் பறவை இனங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நார்கொண்டான் இருவாட்சி, வளையமுள்ள இருவாட்சி, ரூஃவெஸ்ட் நெக்டு இருவாட்சி, பழுப்பு இருவாட்சி, இந்திய பாத இருவாட்சி, பெரும்பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி, சாம்பல் நிற இருவாட்சி, மலபார் பாத இருவாட்சி என ஒன்பது வகையான இருவாட்சிப் பறவை இனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் பெரும் பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி, சாம்பல் நிற இருவாட்சி, மலபார் பாத இருவாட்சி முதலான வகைகள் தென்னிந்தியாவில் வாழ்கின்றன.
இருவாட்சிப் பறவை கேரள மாநிலம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாகும். அந்தமான் தீவுகளில் வாழும் நார்கொண்டான் இருவாட்சிப் பறவை மிகவும் அரிதான இருவாட்சிப் பறவையாகக் கருதப்படுகிறது.
இருவாட்சிப் பறவைகள் பழங்கள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகள் முதலியவற்றை உண்ணும் வழக்கமுடையவை. இவை பழங்களையே பொதுவாக முக்கிய உணவாக விரும்பி உண்ணும் இயல்புடையவை. எனவேதான் இவை அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன. மேலும், ஓணாண், சிறுபாம்புகள், சிறுபறவைகளையும் அவ்வப்போது உண்ணும் இயல்புடையன.
இருவாட்சிப் பறவைகள் எப்போதும் இணைந்தே வாழக்கூடியவை. தங்கள் இனப்பெருக்கக் காலத்தில் ஆண், பெண் என இரண்டு இருவாட்சிப் பறவைகளும் ஒன்றாகச் சேர்ந்து உயரமான மரங்களில் உள்ள பொந்துகளைத் தங்கள் கூடுகளாகத் தேர்வு செய்கின்றன.
பெண் பறவை பொந்துக்குள் சென்றதும் அந்த பொந்தை ஆண் பறவையானது ஈரமான மண்ணைக் கொண்டு ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிட்டு பாதுகாப்பிற்காக கூட்டை மூடிவிடும். இந்த சிறிய துவாரம் மூலமாக பெண் பறவைக்கு ஆண் பறவை உணவைக் கொடுக்கும்.
இந்த பொந்திற்குள் பெண் இருவாட்சிப் பறவை ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இட்டு சுமார் ஏழு வாரங்கள் அடைகாக்கின்றன. இதன் பின்னர் குஞ்சுகள் பொரிந்து வெளியே வரும். இப்போது பெண் பறவை தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கும். ஆண் பறவை பெண் பறவைக்கும் குஞ்சுகளுக்கு உணவை அளித்துக் காப்பாற்றும். மூன்று மாதங்களில் குஞ்சுகள் பறக்கும் ஆற்றலைப் பெறுகின்றன. இதன் பின்னரே பெண் இருவாட்சி பொந்தை விட்டு வெளியேறும். ஆண், பெண் மற்றும் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றாய் பறந்து சென்று வாழத் தொடங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை இவற்றின் இனப்பெருக்கக் காலமாகும்.
இருவாட்சிப் பறவைகள் பொதுவாக முப்பது முதல் நாற்பது வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.