மாலை அணிந்து விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயன் குறித்த ஒரு மனதான நினைவோடு இருமுடி சுமந்து செல்ல வேண்டும் என்பது பொதுவான நியதி ஆகும். இருமுடிக்கட்டின் முன்புறம் அமையக்கூடிய பையின் கட்டினுள் தேங்காய், அரிசி, பருப்பு, வெற்றிலைப் பாக்கு, எலுமிச்சம்பழம், கற்கண்டு, ஏலக்காய், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், நெற்பொரி, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, திராட்சை இவற்றோடு மாளிகைபுரத்தம்மனுக்கு என ஒரு ரவிக்கை துண்டு ஆகியவை நிரப்பப்படும்.
இவை தவிர, பம்பை விநாயகருக்கென ஒன்றும் பதினெட்டு படிகளின் மீது ஏறுகையில் உடைப்பதற்கு ஒன்றும் மாளிகைபுரத்து மஞ்சள் மாதாவின் சன்னிதியில் உருட்ட என்று ஒன்றுமாக மூன்று தேங்காய்களும் வைக்கப்படும்.
பின்புறம் அமையக்கூடிய கட்டினுள் பக்தர்களின் வழிப்பயணத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வைக்கப்படும். இருமுடி கட்டானது குருசாமியினால் ஐயப்ப பக்தர்களின் தலைமீது ஏற்றப்பட்டவுடன் சபரிமலை யாத்திரை தொடங்கிவிடுகிறது. இரு முடிகட்டினுள் உள்ள பொருட்கள் வழிநெடுக பயன்படுத்தப்பட்டு ஐயப்பனின் சன்னிதியை நெருங்கும்போது சுமை குறைந்து லேசாகியிருக்கும்.
தலைக்கனம் எனும் ஆணவம் குறையக் குறைய இறைவனை நாம் நெருங்குகிறோம். அவனை தரிசித்ததும் நமது அகங்காரம், ஆணவம் முற்றிலுமாக நீங்கிவிடுவதாக ஐதீகம். இதுவே சபரிமலைப் பயண இருமுடிக்கட்டின் தத்துவமாகும்.
நெய் தேங்காயை என்பது, ‘பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்,.’ அது என்ன நெய் தேங்காய்? தேங்காய், நெய் ஆகிய இரண்டையும் தனித்தனியாக எடுத்துச் செல்லலாமே? ஏன் ஒன்றுக்குள் ஒன்றை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும்? இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்.
அரியும் ஹரனும் ஒருவருள் ஒருவர் ஐக்கியம் என்பதைக் காட்டுவதே நெய் தேங்காயின் தத்துவம். தென்னை மரம் பரமேஸ்வரனின் அம்சமாக போற்றப்படுகிறது. பசுவோ மகாலக்ஷ்மி தாயார் வாசம் செய்யும் புனிதம் உடையது. மகாலஷ்மி தாயார் எங்கு வசிக்கிறாள்? திருமாலின் திருமார்பில்தானே? அப்படியானால் பசு மகாவிஷ்ணுவின் அம்சமாகிறது அல்லவா? சிவனின் அம்சமான தேங்காயினுள் மகாவிஷ்ணுவின் அம்சமான பசுவினுடைய பாலின் சாரமான வெண்ணையில் இருந்து கிடைக்கும் நெய் நிரப்பப்படுகிறது. எனவேதான் நெய் தேங்காய் சிவா, விஷ்ணுவின் ஐக்கியத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.