
சுற்றுச்சூழலில் இருக்கின்ற ஒவ்வொரு விலங்குகளும், உயிரினங்களும் அதற்கென உள்ள தனித்துவமான தனிப் பண்புகளைக் கொண்டு இயங்குகின்றன. மண்புழுவில் ஆரம்பித்து, மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் வரையுள்ள ஒவ்வொரு உயிரினங்களின் செயல்பாடுகளும் நம்மை ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்துகிறது. இந்த சுற்றுச்சூழலில் மற்றொரு ஆச்சரியமாக ஒருசில உயிரினங்கள் கலப்பின உயிரினங்களாக மாறி உள்ளன. இந்த விலங்குகளின் பண்புகள், இரண்டு வெவ்வேறு பெற்றோர் விலங்குகளின் பண்புகளை ஒத்து காணப்படுகின்றன. இந்த கலப்பின உயிரினங்கள் மனிதர்களாலோ அல்லது இயற்கையாகவோ உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் மனிதர்களாலே கலப்பின உயிரினங்கள் உருவாக்கப்பட்டன. அப்படியுள்ள ஒருசில கலப்பின உயிரினங்களை நாம் இப்போது வரிசையாகப் பார்ப்போம்.
1. லைகர் (liger - சிங்கம் + புலி): ஆண் சிங்கங்களை, பெண் புலியுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தும்போது, ஆண் சிங்கத்தின் பண்புகளையும், பெண் புலியின் பண்புகளையும் ஒத்த லைகர் என்ற புதிய கலப்பின உயிரினம் உருவாகிறது. பார்ப்பதற்கு பிடரி முடியோடு உடம்பில் புலியைப் போன்ற வரிக்கோடுகளும் காணப்படுகின்றன.
2. டைகான் (tigon - புலி + சிங்கம்): ஆண் புலியை, பெண் சிங்கத்துடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும்போது மலட்டுத்தன்மையுடைய டைகான் உருவாகிறது. பிடரி முடி இல்லாமல், சற்று எடை அதிகமாகவும், உடம்பில் புலியைப் போன்ற லேசான வரியுடன் காணப்படுகின்றன.
3. ஹின்னி (sterile hinny - குதிரை + கழுதை): ஆண் குதிரையை பெண் கழுதையுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும்போது ஹின்னி என்ற கலப்பின உயிரினம் உருவாகிறது. இவை கழுத்தில் குதிரை போல் ரோமங்கள் அதிகமாகவும், குட்டையாகவும் கழுதை போல் காணப்படுகின்றன.
4. கோவேறு கழுதை (mule – கழுதை + குதிரை): ஆண் கழுதையை பெண் குதிரையுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும்போது கோவேறு கழுதை உருவாகிறது. பார்ப்பதற்கு குதிரை போன்றே சற்று உயரமாகக் காணப்படுகின்றன.
5. பிஸ்லி கரடி (துருவ கரடி + கிரிஸ்லி கரடி): ஆண் துருவ கரடியை பெண் கிரிஸ்லி கரடியுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும்போது அரிய வகையான பிஸ்லி கரடி உருவாகிறது.
6. ஜோர்ஸ் (Zorse – வரிக்குதிரை + குதிரை): ஆண் வரிக்குதிரையை, பெண் குதிரையோடு இனக்கலப்பில் ஈடுபடுத்தும்போது ஜோர்ஸ் என்ற கலப்பின உயிரினம் உருவாகிறது. பார்ப்பதற்கு குதிரை போலும் லேசாக உடம்பில் வரி வரியாகவும் காணப்படும்.
7. ஸெடங்க் (Zedonk – வரிக்குதிரை + கழுதை): ஆண் வரிக்குதிரையை பெண் கழுதையோடு இனக்கலப்பில் ஈடுபடுத்தும்போது ஸெடங்க் என்ற கலப்பின உயிரினம் உருவாகிறது. பார்ப்பதற்கு கழுதையின் தோற்றத்தைப் போன்றும் உடம்பில் வரிக்குதிரியை போல் வரி வரியாகவும் காணப்படும்.
மேலே கூறிய கலப்பின உயிரினங்கள் எல்லாம் மலட்டு வாரிசுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகையான கலப்பின உயிரினங்களை உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. மனிதனின் இந்தப் புது முயற்சிகள் எந்த அளவிற்கு சாத்தியத்தன்மை மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் பின்விளைவுகள் என்பதை மனிதன் மறந்து விடுகிறான். உயிரினங்கள் உயிரினங்களாக இருப்பதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. வெவ்வேறு இனங்களை ஒன்றாகக் கலக்கும்போது அது சாதகமான நன்மை பயக்கும் விலங்காக மாறுமா என்பது சந்தேகம்தான்!