
உலகெங்கிலுமுள்ள பறவையினம் பல விதம். அவை கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும் பல விதம். அவற்றுள், இனப்பெருக்க நேரங்களில் தனது துணையைக் கவர அவை புரியும் கோர்ட்ஷிப் நடனம் வித்தியாசமானது. இந்த நடனத்தின் மூலம் அவை தமது வலிமை, ஆரோக்கியம் மற்றும் ஒத்திசைந்து செல்லும் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புவது புரியும். தனியாக, ஜோடியுடன் அல்லது குழுவாகவும் ஆடுவதை இவை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஏனோதானோ என்று ஆடாமல், பாரம்பரியமாக பயிற்சி பெற்று ஒவ்வொரு அசைவும் ஓர் செய்தியை தெரிவிக்கும் வகையில் இந்த நடனம் அமையும். அதுபோன்ற பறவைகளின் மிகக் கவர்ச்சிகரமான நடனங்கள் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. சூப்பர்ப் பேர்ட் ஆஃப் பாரடைஸ் (Superb bird-of-paradise): நியூ கினியாவின் அடர்ந்த காடுகளில், இந்த இனத்தின் ஆண் பறவை தனது கருமை நிற இறகுகளை தட்டையான வட்ட வடிவில் உரு மாற்றம் செய்து, அதன் உச்சியில் அடர் நீல நிற வளைவுகளை உண்டு பண்ணிக்கொள்ளும். பெண் பறவையைக் கவர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை மனதில் நிறுத்தி, துல்லியமான அசைவுகளுடன் அது துள்ளிக் குதித்து ஆடுவது பார்ப்போர் மனதை அள்ளிச் செல்லும்.
2. ரெட் கேப்ட் மனாகின் (Red-capped Manakin): சென்ட்ரல் மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் சிறிய பறவை இது. ஆண் பறவை பெண்ணைக் கவர, மரங்களின் கிளைகளில் அமர்ந்து கொண்டு, சறுக்கி விளையாடுவது போல் இங்கும் அங்கும் வேகமாகப் பறந்து கொண்டிருக்கும். இச்செயலே அதன் தனித்துவத்தைக் காட்டும்.
3. மக்னிஃபிசென்ட் ரைஃபிள் பேர்ட் (Magnificent Rifle bird): நியூ கினியாவின் பப்புவா (Papua) காடுகளிலிருக்கும் ஆண் மக்னிஃபிசென்ட் ரைஃபிள் பேர்ட், தனது சிறகுகளை விரித்து, வளைந்த வடிவில் உருமாற்றி மெதுவாக அசைந்து ஆட ஆரம்பிக்கும். சரியான கோணத்தில் நின்று கொண்டு, அதன் அடர் நிற இறகுகள் இயற்கை வெளிச்சத்தை பிரதிபலிக்குமாறு செய்து அமைதியாக, மனதை மயக்கும் விதத்தில் ஆடிக் கொண்டிருக்கும்.
4. ப்ளூ ஃபூடெட் பூபி (Blue-footed Booby): களப்பாகோஸ் தீவு மற்றும் பசிஃபிக் கடலின் கரையோரம் காணப்படும், இந்த இனத்தின் ஆண் பறவை, தனது கண்கவர் நீல நிறத்திலான கால்களை, ஒன்று மாற்றி ஒன்றை மெதுவாக உயர்த்தி ஆடும் அழகு அலாதியானது.
5. வெஸ்டர்ன் கிரெப் (Western Grebe): இரண்டு வெஸ்டர்ன் கிரெப் பறவைகள் ஒன்றாக தண்ணீரில் நிமிர்ந்து நின்ற நிலையில் பந்தயத்தில் ஓடுவது போல சென்றுகொண்டிருக்கும். நீரின் மீது தன்னை சமநிலையில் நிறுத்தி, குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்பிக்கையோடு ஓடும். இந்த அவசர ஓட்டம்தான் அது தனது ஜோடியுடன் சேர்வதற்கான முதற்படி.
6. விக்டோரியாஸ் ரைஃபிள் பேர்ட் (Victoria's Rifle bird): ஆஸ்திரேலியாவின் மழைக் காடுகளில், குறைந்த வெளிச்சமுள்ள, நிழற்பாங்கான இடங்களில் தனது நடனத்தை ஆரம்பிக்கும் இந்தப் பறவை. ஆண் பறவை தனது சிறகை விரித்து, நிமிர்த்தி, மெதுவாக இரண்டு மூன்று முறை குதித்துவிட்டு தலையை கம்பீரமாகத் திருப்பிப் பார்க்கும். சரியானதொரு கோணத்தில் நின்று வெளிச்சம் இறகுகளின் மீது பட்டு மின்னச் செய்வதே அது ஆடும் ஆட்டத்தின் சிறப்பு.
7. சாண்ட்ஹில் கிரேன் (Sandhill Crane): சில பறவைகள் தங்கள் துணையை கண்டுபிடித்து சேர்ந்ததும் டான்ஸ் ஆடுவதை நிறுத்திவிடும். ஆனால், சாண்ட்ஹில் கிரேன் அப்படியல்ல. அதன் பின்னும் உடலை வளைத்து, நீட்டி, தலையை குனிந்து ஒன்றையொன்று பார்த்தபடி நிற்கும். இதெல்லால் அவற்றுக்கிடையேயான பந்தம் நீண்ட காலம் வலுவாக நிலைத்திருக்கச் செய்யும் சடங்குகள் எனலாம்.
8. ஆன்டென் ஃபிளமிங்கோ (Andean Flamingo): தென் அமெரிக்காவின் உயரமான இடங்களில் உள்ள ஏரிகளில், இனப்பெருக்க சீசனில், நூற்றுக்கணக்கான ஆன்டென் ஃபிளமிங்கோ பறவைகள் கூடுவதுண்டு. பின், அவை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து திரும்பிப் பார்த்தபடி நடந்து செல்லும். குழுவாக இப்படி நடப்பது, தன் ரிதம் மற்றும் சக்திக்கும் பொருந்தி வரக்கூடிய துணையைத் தேர்ந்தெடுக்க உதவும்.
9. ஜாக்சன்ஸ் விடோ பேர்ட் (Jackson's Widow Bird): கிழக்கு ஆப்பிரிக்காவின் புல்வெளிப் பகுதியில் வசிக்கும் பறவை. ஆண் ஜாக்சன்ஸ் விடோ பறவை தனது இருப்பிடத்தில் இருந்து இறங்கி வந்து புற்களின் மீது நிமிர்ந்து நின்றுகொண்டு தனது நீண்ட வால் பகுதியை காற்றில் பறக்க விடும். எவ்வளவு உயரத்தில் நின்று வாலை ஆட்டுகிறதோ, அவ்வளவு ஆர்வமுடன் பெண் பறவை அதைத் தேடி வரும்.
பறவைகள் உலகில் வாய் வார்த்தையின்றி தனது இச்சையை வெளிப்படுத்த உதவுகிறது நடனம். தனியாகவோ, ஜோடியாகவோ, குழுவாகவோ ஆடும் நடனம் துணையை கவர்ந்திழுக்கச் செய்யும் கலைப் பொக்கிஷமாகத் திகழ்கிறது.