
ஓடிக்கொண்டேயிருப்பதுதான் ஒரு நதியின் இயல்பு. ஆனால் அது சும்மா ஓடிக்கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. தான் உற்பத்தியாகும் இடத்திலிருந்து ஓடும் வழியெல்லாம் வளத்தை அள்ளிக்கொடுத்துக் கொண்டேதான் செல்கிறது. பாசனம் முதல் போக்குவரத்துவரை பல நன்மைகளை மனித சமுதாயத்துக்கு அது வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதன் புனித நோக்கத்தைப் புண்படுத்தும் வகையில், அதனிடமிருந்து பயன்பெற்றவர்களே அதற்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான உண்மை.
வேறெந்த நாட்டிலும் இப்படி நதியை அவமதிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் நதியை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் அதனைச் சீரழித்து, அந்த நதி ஓடிய தடமே இல்லாமல் செய்து விடுவதிலும் நாம் முழுமுனைப்போடு இறங்கியிருக்கிறோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
உதாரணமாக தமிழகத்தில் ஓடும் பாலாற்றை எடுத்துக்கொள்வோம். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு, கர்நாடகத்தில் 93 கிமீ., ஆந்திர பிரதேசத்தில் 33 கி.மீ., பிறகு தமிழகத்தில் 222 கி.மீ பாய்ந்து, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், பழைய சீவரம், திருக்கழுக்குன்றம், வாயலூர் முதலான பல கிராமங்கள் இதனால் வளம் பெறுகின்றன, இல்லை இல்லை, ‘பெற்றன‘ என்றுதான் சொல்லவேண்டும். ஆமாம், அந்த நன்மைகள் இப்போது இல்லைதான். பாலாறு, தன்னோடு வெங்குடி கிராமம் அருகே வேகவதி ஆற்றினையும், திருமுக்கூடல் கிராமம் அருகே செய்யாற்றினையும் சேர்த்துக்கொண்டு மக்களுக்குக் கூடுதல் பலன் அளிக்க முயற்சிக்கிறது.
மழை பொய்த்ததாலும், தன் உற்பத்தி ஸ்தானத்திலேயே வறட்சி ஏற்பட்டதாலும் பாலாறு தன் உருவிழந்து மணற்பரப்பாகவே மாறிப்போனது. ஆனால் அதுநாள்வரை தன்னால் அநேகப் பயன்களை அனுபவித்தவர்கள் தன்னை, அடுத்த பெருமழையோ, நீர்வரத்தோ வரும்வரை அப்படியே வற்றிய மணல் பரப்பாகவாவது விட்டு விடுவார்கள் என்றுதான் அப்பாவியாக அந்த ஆறு நினைத்திருந்தது.
ஆனால், மீண்டும் பாலாற்றில் தண்ணீரே வராது அல்லது வரக்கூடாது என்ற சுயநல வேட்கையில் அந்த ஆற்றங்கரையோரமாக ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் முளைத்தன, முளைத்ததோடு அவை நிரந்தரமாக நிலைத்து நின்றுவிட்டதும் பெரிய கொடுமை. ஒரு வருடம் இல்லாவிட்டால் அடுத்த வருடம் அந்த ஆறு நீரைக் கொண்டுவரதா? அவ்வளவு அவநம்பிக்கையா இயற்கையின் மீது? இதை அவநம்பிக்கை என்பதைவிட, ஆற்றில் தண்ணீரே வராமலிருக்கக்கூடாதா என்ற பேராசை என்றுதான் சொல்லவேண்டும். ஆமாம், ஊருக்கெல்லாம் வளம்தரும் ஆற்றை அழித்து, அதனை ஆக்கிரமித்துத் தான் மட்டும் லாபம் அடைய வேண்டும் என்ற சிலரது பேராசை.
இந்தப் பாலாற்றில் ஆக்கிரமிப்பைவிட மணல் திருட்டுதான் மிகவும் கொடுமையானது. ஆற்றின் குறுக்கே வரிசையாக ஒரு வேலிபோல பனைமரங்கள் வளர்த்து ஆதாயம் கண்டிருக்கிறார்கள், சிலர். அதேபோல சவுக்கு மரங்களை வளர்த்து லாபம் பார்க்கிறார்கள் வேறு சிலர். இறைச்சிக் கழிவுகளைக் கொட்டித் தம் பொறுப்பற்ற தன்மையை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சிலர். இவ்வளவு ஏன், சிலர் ஆற்றங்கரையோரமாகக் கொட்டகைகள் அமைத்து வசிக்கவும் செய்கிறார்கள்! இன்னும் சிலர் நிரந்தர கட்டடங்களையே நிர்மாணித்திருக்கிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை, ஆற்றை மலடியாக்கிவிட்டு, அதுவும் பொறுக்காமல் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரையும் சிலர் உறிஞ்சுகிறார்கள். செங்கல் சூளை அமைத்தும் சிலர் ஆக்கிரமிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
தரிசு நிலத்துக்கும், புறம்போக்கு நிலத்துக்கும் எப்படி சிலர் சட்டத்தை மீறி, சமுதாய நலனைப் புறக்கணித்து உரிமை கோருகிறார்களோ, அதேபோல ஆற்று வழியையும் ஆக்கிரமித்து சிலர் அநியாயம் செய்கிறார்கள்.
சரி, இனி, பெருமழை பொழிந்து, பாலாற்றில் வெள்ளம் வந்தால் அந்த நீர் எங்கே பாயும்? அதற்கென இன்னொரு வழி இருக்கிறதா என்ன?