ரஷ்யாவின் ரகசிய பொக்கிஷங்கள்: யூரல் மலைத்தொடரின் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள்!

Mysteries of the Ural Mountains
Ural Mountains
Published on

யூரல் மலைத்தொடர் என்பது ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாடுகளின் எல்லையில் பரவியுள்ள ஒரு பிரம்மாண்டமான மலைத்தொடராகும். இது ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களைப் பிரிக்கும் இயற்கை எல்லையாகக் கருதப்படுகிறது.

ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள கரா கடல் (Kara Sea) அருகே உள்ள நோவாயா ஜெம்ல்யா தீவுகளிலிருந்து தொடங்கி கஜகஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள யூரல் நதிக்கரைகள் வரை இதன் பரப்பளவு உள்ளது. இதன் நீளம் சுமார் 2,500 கிலோ மீட்டர், அகலம் 40 முதல் 150 கி.மீ. வரை மாறுபடும். யூரல் மலைத்தொடர் பொதுவாக நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அடர்ந்த காடுகளும் பனி மூடிய உச்சிகளும் உள்ள பகுதி வடக்கு யூரல் (Northern Urals) எனப்படுகிறது. உயரம் குறைவாக, மனித குடியேற்றங்கள் மற்றும் சுரங்கப் பகுதிகள் நிறைந்தது மத்திய யூரல் (Central Urals) ஆகும். பசுமை மலைப்பாங்கும், பல ஆறுகளும், கனிம வளமும் கொண்டது தெற்கு யூரல் (Southern Urals) பகுதியாகும். கடும் குளிரும் பனி மூடிய நிலப்பரப்பும் கொண்ட துருவப் பகுதி போலர் யூரல் (Polar Urals) எனப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டைனோசர் காலத்திற்கு முன்பிருந்தே இன்றும் வாழும் 5 விசித்திர கடல் உயிரினங்கள்!
Mysteries of the Ural Mountains

நரோத்னயா மலை (Mount Narodnaya) இதன் உயரமான சிகரமாகும். இதன் உயரம் 1,895 மீட்டர். இதுவே யூரல் மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம். யூரல் மலை 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது (பாலியோசோயிக் காலம்). இவை பழைமையான மலைகள் என்பதால் மிகுந்த அரிப்பால் (erosion) தாழ்ந்துள்ளன. யூரல் மலை உலகப் புகழ் பெற்ற கனிமச் செல்வக் களஞ்சியமாகும்.

கனிம வளங்கள்:

இரும்புத் தாது: ரஷ்யாவின் எஃகு மற்றும் இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு முக்கிய ஆதாரமாக இம்மலை உள்ளது.

செம்பு: மின் சாதனங்கள், கட்டடக் கட்டுமானங்கள், கம்பிகள் தயாரிப்பில் இது பயன்படும்.

பொன்: நகைத் துறைக்கும் நாணய உற்பத்திக்கும் பெரிதும் பயன்படுகிறது.

பிளாட்டினம்: நகைத் துறையில், மருத்துவ உபகரணங்களில், தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

டைமண்ட்: ரஷ்யா உலகின் முக்கிய வைர உற்பத்தியாளர்.

பாக்சைட்: அலுமினியம் உற்பத்திக்கு பயன்படுகிறது.

அஸ்பெஸ்டாஸ்: வெப்பநிலை மற்றும் தீ எதிர்ப்புப் பொருட்கள் தயாரிக்க உதவுகிறது.

அரிய ரத்தினக் கற்கள்: இம்மலையில் கிடைக்கும் எமரால்ட் (Emerald) பச்சை நிற ரத்தினம் உலகின் சிறந்த தரம் என மதிக்கப்படுகிறது.

டோபாஸ் (Topaz) : பல நிறங்களில் கிடைக்கும் இது, நகைத் துறையில் பிரபலமானது.

அமேதிஸ்ட் (Amethyst): ஊதா நிற ரத்தினம், அலங்கார நகைகளில் பயன்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
மிதக்கும் மரங்களும், மர்மங்களும் நிறைந்த அதிசய சதுப்புநிலம்: ஒகேபெனோகி ஸ்வாம்ப்!
Mysteries of the Ural Mountains

இயற்கை மற்றும் விலங்குகள்: வடக்கில் டுண்ட்ரா (Tundra) மற்றும் டைகா (Taiga) காடுகள், கரடி, ஓநாய், மான், லின்க்ஸ் போன்ற விலங்குகள், பல பறவை இனங்கள் மற்றும் மீன்களின் வசிப்பிடமாக உள்ளது.

பண்பாட்டு முக்கியத்துவம்: யூரல் மலைப்பகுதி ரஷ்யாவின் வரலாற்றிலும் கலாசாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பழங்குடியினர் (Bashkirs, Komi, Udmurts) இங்கு வாழ்ந்து வந்தனர். தொழில்துறை புரட்சிக் காலத்தில் யூரல் பகுதியின் கனிமச் செல்வம் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அடித்தளமாயிற்று.

யூரல் மலைப்பகுதியில் உள்ள சுரங்கங்கள் ரஷ்யாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்துள்ளன. 18ம் நூற்றாண்டு முதல் இங்குள்ள கனிமச் செல்வம் காரணமாக பல நகரங்கள் தொழிற்துறை மையங்களாக உருவானது.

யூரல் மலைத்தொடர் தனது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான பாறைகளில் புதைந்து கிடக்கும் கனிமங்களால், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உலகின் கனிம வள வரலாறுக்கும் ஒரு அழியாத அடையாளமாகத் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com