
மிளா மான், கடமான், sambar deer என்ற பெயர்களில் அழைக்கப்பட்டாலும், கடமான் என்ற சொல்லிலேயே பரவலாக மக்களிடையே அழைக்கப்படுகிறது. இவை இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேசிய தீவு தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. தென்னிந்தியாவில், பெரும்பாலும் இதை வால்பாறை, மஞ்சோலை மற்றும் கோதையார் போன்ற பகுதிகளிலும், மிக உயரமான மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் காணப்படும் ஒரு வகை மான் இனமாகும்.
தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கும் மான் மிளா. நம்முடைய வனப் பகுதியில் வாழும் மான்களிலேயே அதிக உயரமும் பருமனும் கொண்ட மான்கள் மிளா மான்கள் தான். இவை சுமார் 225 முதல் 320 கிலோ வரை எடையும், உயரம் 100 முதல் 160 செ. மீ வரையிலும் இருக்கும். புள்ளி மான்களை போன்று பெரிய குழுக்காளாக இவை வாழ்வதில்லை.
ஆண் மிளா மான்களுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெரியகொம்புகள் உண்டு. ஆனால் பெண் மிளாவிற்கு கொம்புகள் கிடையாது. ஆணின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும். மிளா மான் மிக அழுத்தமான கரும்பழுப்பு நிறமாக (கபிலநிறம்) இருக்கும். இவை மிகுந்த செவிக்கூர்மையும், நுகர் திறனும் கொண்டவை. மிளா பெரும்பாலும் ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது.
வனப்பகுதிகளில் தண்ணீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் இவற்றை பார்க்க முடியும். இவை மிகவும் குறிப்பிட்ட உணவு வகைகள் என்று இல்லாமல் கிடைக்கும் பெரும்பாலான தாவரங்களை உண்டு வாழ்பவை. இந்தியாவில் இவை காட்டு மரங்களின் இலைகள், பட்டை, புல், பூண்டு மற்றும் சில காய்களையும் உண்கிறது.
திறந்த புல்வெளிகளுக்கு மாலை, இரவு, விடியற்காலை பொழுதுகளில் மட்டும் மேய்ச்சலுக செல்லும். காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்றவர்களின் பல்வேறு செயல்கள் மிளா மான்களின் வாழ்க்கையைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன. மேலும் இவை வாழும் இடம் சீர் கெட்டமையால் அவை தங்கள் அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் விளை நிலங்களில் உணவுக்காக வருவதால் உழவர்களும் மிளா மான்களைக் கொல்கின்றனர். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அழியும் வாய்ப்புள்ள இனம் என்று அறிவித்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசியா, போர்னியோ மற்றும் சுமத்ரா முழுவதும் மிளா மான்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வலையமைப்பிற்குள் அவற்றின் எண்ணிக்கை மிகவும் நிலையானதாக உள்ளது. ஆனால் பூங்காக்களுக்கு வெளியேயும் அவற்றின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பெரும்பாலான தேசிய பூங்காக்களில் இவை காணப்படுகின்றன. மான்களை போல் இவற்றால் வேகமாக ஓட முடியாது என்பதால் அதிகளவில் இவை புலிகளால் வேட்டையாடப்படுகின்றன. புலிகள் இவற்றை மறைந்திருந்தே தாக்குகின்றன. இவற்றின் கொம்புகள் புலியை பதம் பார்த்துவிடக் கூடும். எனவே மற்ற மான்களை துரத்துவது போல இவற்றை துரத்தி தாக்குவதை விடவும் மறைந்திருந்தே கொல்கின்றன.
இரவில் அவற்றின் கண்களில் டார்ச் லைட் அடித்தால் அவை நகராமல் அப்படியே நிற்கும். ஓடுவதற்கு முன்பு நம்மை நன்கு உற்று பார்த்துவிட்டுத் தான் ஓடத் தொடங்கும். மிளா மான்களின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 26 ஆண்டுகள் வரை இருக்கும், ஆனால் இந்த எண்ணிக்கை அவற்றின் வாழும் சூழலைப் பொறுத்து பெரிதும் மாறுபடும்.