

ராஜ நாகம் கட்டுவிரியன் கண்ணாடி விரியன் சுருட்டை விரியன் இந்த நான்கு பாம்புகள் தான் இந்தியாவின் பெரிய தலைகள் அதாவது பிக் பாஸ்கள் (Big Boss). பாம்புகள் வேண்டுமென்றே யாரையும் கொத்துவது கிடையாது. அதேபோல் மனிதர்களும் வேண்டுமென்றே பாம்புகளிடம் கடிபடுபவர்கள் கிடையாது. எல்லாமே அவரவரின் சர்வைவலை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றது.
இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் பாம்புக் கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புகளுக்கு இந்த நான்கு வகை பாம்புகளே காரணமாக இருக்கின்றன. சுருட்டை விரியன் என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் நச்சுப்பாம்பு குடும்பத்தை சேர்ந்தது.
செதில்கள் அதிக அளவில் கீலுடையதாகவும் கீலிணைப்புகளின் ஓரங்கள் ரம்பப் பற்களைப் போல இருப்பதாலும் இந்த பாம்பிற்கு 'ரம்ப செதில் விரியன்' என்ற பெயர் வந்தது. இது சலசலவென்றும் புஸ்ஸென்றும் ஒலிப்பதால் ஊது சுருட்டை, குறட்டைப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. அழகிய கம்பளம் போன்ற நிறமுடையதால் 'கம்பள விரியன்' என்றும் அழைக்கப்படுகிறது.
தடிமனான சிறிய உடலை உடைய இதன் தலை முக்கோண வடிவில் இருக்கும். அதில் அம்பு வடிவில் வெள்ளைக் குறி காணப்படும். தலை கழுத்தை விடவும் பெரியது. தலையின் மேற்பரப்பில் உள்ள செதில்கள் சிறியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் காணப்படும். வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் உள்ள இந்த பாம்பினுடைய கண்கள் பெரியதாகவும், கண்மணி செங்குத்தாகவும் காணப்படும்.
மரங்களில் நன்றாக ஏறும் தன்மை உடைய இவை பகலில் பாறைகளுக்கு அடியில், மரப் பட்டைகளுக்குப் பின்னால், முள்செடிகளின் அடி போன்ற இடங்களில் ஓய்வெடுக்கும். இவற்றை காய்ந்த வெளி, மணல் பாங்கான சமவெளி, மலைப்பாங்கான இடத்திலுள்ள பாறைப் பகுதிகளில் அதிகம் காணலாம்.
சுருட்டை விரியன் பாம்புகள் பெரும்பாலும் இரவில் நடமாடக் கூடியவை. அளவில் சிறியதாக இருந்தாலும் இதனுடைய நச்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது. வீரியமிக்கது. இவை பக்கவாட்டில் வளைந்து செல்லும் முறையில் (side-winding) வேகமாக இயங்கக் கூடியது.
இவை ஆபத்து வரும் பொழுது உடலை சுருட்டி (8 வடிவம்), செதில்களை உரசும் போது 'உஸ்' என்ற ஒலியை எழுப்பும். இதன் விஷம் ரத்தத்தில் பரவி திசுக்களை அழித்து, சிறுநீரக செயலிழப்பு, மரணம் வரை ஏற்படுத்தக் கூடியது. எனவே இது கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மிகவும் அவசியம்.
இவை எலிகள், ஓணான்கள், தவளை, பல்லி, தேள்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. ஒரே சமயத்தில் 4 முதல் 8 வரையில் குட்டிகளை ஈனும் தன்மை கொண்டவை. மழைக்காலங்களில் நீர் சூழ்ந்திருக்கும் பொழுது இவை தஞ்சம் தேடி வீடுகளுக்குள் நுழையக் கூடும். எனவே கவனம் தேவை.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 80% பாம்பு கடி நிகழ்வுகள் நடைபெறுவதாகவும், இதில் பெரும்பான்மையான நிகழ்வுகள் மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத கிராமங்களிலேயே நிகழ்கின்றன என்றும் கூறப்படுகிறது.