

“அடடா! இவ்வளவு இருட்டிலும் இந்த வெளவால் எப்படி இப்படி வேகமாகப் பறக்கிறது?”
இரவில் வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்தக் கேள்வி நிச்சயம் வந்திருக்கும். மரம், கிளை, சுவர், பூச்சி என எதிலும் மோதாமல் வெளவால்கள் அப்படியே பறந்து செல்கின்றன. மனிதர்களாகிய நமக்குத் தெரியாத ஏதோ ஒரு ரகசியம் அவற்றுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.. இல்லையா? அது என்ன? அந்த ரகசியத்தைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
மீயொலியைப் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க!
“ஹலோ… யாராவது இருக்கிறீர்களா?”
வெளவால் பறக்கும்போது ஒரு விதமான ஒலியை எழுப்புகிறது. அந்த ஒலி நம்முடைய காதுகளுக்குப் பெரும்பாலும் கேட்காது. இதை மீயொலி என்று அழைக்கிறோம்.
“அப்புறம் அந்த ஒலியால் என்ன பயன்?” என்று கேட்கிறீர்களா?
வெளவால் அனுப்பும் ஒலி, முன்னால் இருக்கும் பொருளின் மீது மோதுகிறது. பிறகு, அது எதிரொலியாக வெளவாலிடம் திரும்பி வருகிறது.
அந்த எதிரொலியைக் கவனமாகக் கேட்டு, “ஓஹோ! முன்னால் ஏதோ இருக்கிறது!” என்று வெளவால் தெரிந்துகொள்கிறது.
இருட்டில் ஒரு சின்ன ரேடார்!
வெளவாலின் இந்தத் திறனுக்கு எக்கோலொகேஷன் என்று பெயர்.
இதை ஒரு சின்ன ரேடார் போல நினைத்துக்கொள்ளலாம்.
நாம் இருட்டான அறைக்குள் சென்றால், “சுவர் எங்கே இருக்கிறது?” என்று கையால் தடவிப் பார்ப்போம். ஆனால் வெளவாலுக்கு அப்படி எதையும் தடவிப் பார்க்க வேண்டியதில்லை!
அது ஒலியை அனுப்பும். ஒலி திரும்பி வரும் நேரத்தையும் விதத்தையும் வைத்து, அருகில் இருக்கும் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்.
“பூச்சியைக் கண்டுபிடிக்கும் சுவாரஸ்யம்?”
சரி… மரம், சுவர் எல்லாம் பரவாயில்லை. பறந்து கொண்டிருக்கும் ஒரு சின்னப் பூச்சியை எப்படி கண்டுபிடிக்கிறது? தெரியுமா உங்களுக்கு?
அதுதான் இன்னும் சுவாரஸ்யம்!
வெளவால் தொடர்ந்து ஒலிகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். பூச்சியிலிருந்து திரும்பி வரும் எதிரொலியை வைத்து, அது எங்கே இருக்கிறது, எந்தத் திசையில் நகர்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறது. உடனே வெளவால் தனது பறக்கும் திசையை மாற்றி… “லபக்!” என்று பூச்சியைப் பிடித்துவிடுகிறது!
வெளவால்களுக்குள் இருக்கும் சூப்பர் திறமை!
வெளவால்கள் எல்லாமே இருட்டில்தான் பறக்கும் என்று நினைக்க வேண்டாம். பகலிலும் அவற்றைப் பார்க்கலாம்.
ஆனால், பல வெளவால்கள் இரவு நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது அவற்றுக்கு உணவு தேடுவதற்கும், எதிரிகளிடமிருந்து தப்புவதற்கும் எக்கோலொகேஷன் உதவுகிறது.
வெளவால் ஒரு குட்டி விஞ்ஞானி
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா? வெளவால்கள் வெளியிடும் ஒலியின் அதிர்வெண், அவை எந்தப் பொருளைத் தேடுகின்றன என்பதைப் பொறுத்து மாறக்கூடும். பூச்சி அருகில் இருக்கும்போது, அவற்றின் ஒலி வெளியிடும் வேகமும் அதிகரிக்கலாம். அதனால் இருட்டான இரவிலும் வெளவால் தன் இரவு வேட்டையைத் துல்லியமாகத் தொடர முடிகிறது.
இப்படிப் பார்த்தால், வெளவால் ஒரு குட்டி விஞ்ஞானியைப் போலத்தானே..!
வெளவாலுக்குக் கண்களே இல்லையா? அதன் காதுகள்தான் சூப்பர் ஹீரோ!
“வெளவாலுக்குக் கண்களே இல்லையா?” என்று யோசிக்கிறீர்களா?
வெளவால்களுக்கு கண்கள் உண்டு. அவை பார்க்கவும் முடியும். ஆனால், இருட்டில் வழி கண்டுபிடிக்க பல வெளவால்களுக்கு எக்கோலொகேஷன் மிக முக்கியமான உதவியாக இருக்கிறது. அதன் காதுகள்தான் சூப்பர் ஹீரோ!
இப்போது அடுத்த முறை இரவில் வெளவால் பறப்பதைப் பார்த்தால், “இது வெறுமனே பறக்கவில்லை… ஒலியை அனுப்பி, அதன் எதிரொலியைக் கேட்டு வழி கண்டுபிடிக்கிறது!” என்று நினைவில் வைத்ததுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு உயிரிடமும் ஒரு அதிசயம்!
இயற்கை நமக்குத் தெரியாத எத்தனை அற்புதங்களை ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டிருக்கிறது, இல்லையா?
இயற்கை படைப்பின் வியக்கத்தக்க உயிரியல் உண்மைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு அறிவியல் மீதுள்ள ஆர்வமும் தேடலும் பன்மடங்கு அதிகரிக்கிறது.