
இயற்கையின் அரிய மற்றும் நேர்த்தியான பொக்கிஷங்களில் ஒன்றாகவும், ஆடம்பரம் மற்றும் சமையல் சுவையின் சின்னமாகவும், மோர்செல்லா எஸ்குலெண்டா என்று அறிவியல் ரீதியாக அழைக்கப் படும் விலை உயர்ந்த காளானாகவும், இந்திய பிரதமரின் மனம் கவர்ந்த விருப்ப உணவாகவும் இருக்கும் குச்சி காளான் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்
குச்சி காளான் என்பது அஸ்கோமைகோட்டாவின் மோர்செல்லேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூஞ்சை இனமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் தொப்பியின் மேற்பரப்பில் பெரிய குழிகள் மற்றும் முகடுகளுடன், ஒரு பெரிய வெள்ளை தண்டில் எழுப்பப்படுகின்றன.
இந்த குச்சி காளான்கள் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாமிரம் போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன அதிலும் பி மற்றும் டி வைட்டமின்களின் வளமான மூலமாக இந்த காளான்கள் அறியப்படுகின்றன.
குச்சி காளான் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களை நீக்குகின்றன. இதனால் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு மற்றும் உடல்நல பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கின்றன.
சாதாரணமாக வளர்க்கக்கூடிய காளான்களைபோல் அல்லாமல் குச்சி காளான்கள் இயற்கையாகவே வளர்கின்றன. இந்த அரிதான தன்மை இதனை தேடுவதற்கான உழைப்பு காரணமாக மிகவும் விலை உயர்ந்த காளான்களில் ஒன்றாக உள்ளது ஒரு கிலோவிற்கு 30,000 முதல் 40,000 வரை விலை நிர்ணயம் செய்யப் படுகின்றன.
தேன்கூடு போன்ற அமைப்பையும் காட்டு பூஞ்சை வகையை சேர்ந்த இந்த குச்சி காளான் ஊட்டச்சத்து நிறைந்த ஈரமான மண்ணில் செழிப்பாக வளரும். பனி உருகிய பின்னரே இக்காளான்கள் முளைக்கும் என்பதால் பிரத்தியேக பருவகால சுவை, தீவிர மண் மற்றும் கொட்டை சுவையை உடையது.
ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் இமாச்சலப் பிரதேசம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பூட்டானின் சில பகுதிகளில் மட்டுமே இவற்றைக் காணமுடியும்.
குச்சி காளான்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்க முடியாது. மேலும் இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே தோன்றும். அதாவது மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் உள்ளூர் கிராமவாசிகள் அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு சென்று இக்காளானைத் தேடுகின்றனர்.
இக்காளான்கள் வலுவான நறுமணத்தையும் சிறந்த சுவையையும் கொண்டுள்ளதால் புலாவ்கள், பிரியாணிகள், கறிகள், கிரீமி சாஸ்கள் பாஸ்தாக்கள் மற்றும் பல உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய சிறப்புமிக்க குச்சி காளான் சைவ பிரியரான நமது இந்திய பிரதமருக்கு பிடித்த உணவாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.