
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல், மரம் இன்றி அமையாது வீடு என்று கூறினால் மிகையாகாது. நாம் உயிர் வாழ்வதற்கு உரிய ஆக்சிஜனை தருவதில் இருந்து உணவு, இருப்பிடம், உடை என்று அனைத்தையும் தருவது மரங்கள்தான். அவற்றின் பயன்பாட்டை பற்றி இப்பதிவில் காண்போம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மரங்கள் காற்றை சுத்தப்படுத்தி பிராண வாயுவின் அளவை அதிகரிக்கிறது. வானிலையை சீர் செய்கிறது. நீருக்கும் மூலமாக உள்ளது. மண் வளத்தை பேணிக் காத்து, வன விலங்குகளுக்கு அரனாக, கோடை காலங்களில் மரத்தின் இலைகள் சூரிய வெப்பத்தை ஈர்த்து குளிர்ச்சி தருகின்றன. கண்ணாடி பசுமை குடில் விளைவால் ஏற்படும் பாதிப்பையும் தடுக்கின்றது. மரம் தனது நீளமான மற்றும் அகலமான வேர்களின் மூலம் மண் அரிப்பை தடுத்துக் காக்கிறது. ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் மரங்கள் மூலமாக ஆறுடன் கரியமில வாயு உறியப்பட்டு நான்கு டன் பிராண வாயு வெளிப்படுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரங்கள் பேருதவி புரிகின்றன.
தீக்குச்சி பயன்பாடு: அடுப்பு எரிப்பதற்கு தீக்குச்சி மிகவும் அவசியம். அதற்கு பல்வேறு வகையான மரங்கள் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க மரம் வெள்ளமட்டி, மஞ்சள்மட்டி, வாகை, பாப்புலர், இலவம் பஞ்சு, கல்யாண முருங்கை போன்ற மரங்கள். உலகின் மொத்த தீக்குச்சி உற்பத்தியில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆதலால் மேற்கூறிய மரங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
பிளைவுட்: இப்பொழுது தடி மரங்கள் அதிகமாகக் கிடைக்காததால் ஒட்டு பலகை அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் ஒட்டு பலகை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விளையாட்டுச் சாதனங்கள்: கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டு சாதனங்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் மரத்திலிருந்து பெறப்படுகின்றன.
மின் உற்பத்தி: சமீப காலமாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருளாக மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அதற்கு வேலி கருவேல், தைலம், சவுக்கு, சிசு, சுபா புல் வகை, ரப்பர் போன்ற மரங்களை பயன்படுத்துகின்றனர். இந்த மரங்களின் மூலம் மின் உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு தூய்மையான எரிசக்தி உற்பத்தி செய்ய ஏதுவாகிறது. ஒரு மெகா வாட்டு மின் உற்பத்திக்கு சுமார் 1.5 டன் மரங்கள் தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.
பிசின் பயன்பாடு: வேல மரம், முருங்கை மரம் போன்ற மரங்களில் இருந்து பிசின்கள் உற்பத்தி செய்யப்பட்டு மருந்து தயாரிக்க, பெயிண்ட் உற்பத்தி செய்ய , வாசனை திரவியங்கள் உற்பத்திக்கும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காகித உற்பத்தி மற்றும் பயன்பாடு: மரங்களிலிருந்து பல்வேறு வகையான காகிதங்கள், குறிப்பாக நோட்டுப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுகள், புகைப்படங்கள் எடுக்கப் பயன்படும் காகிதங்கள், பத்திரிக்கை பேப்பர் மட்டும் சிசு பேப்பர் முதலியவை தயாரிக்கப்படுகின்றன.
வெளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்: விவசாயத்திற்கான உழவுப் பொருட்கள் தயாரிக்க, அடுப்பு எரிக்க, வீடு கட்டுவதற்குத் தேவையான மரச் சாமான்கள் செய்வது, பர்னிச்சர் செய்வது, தொழிற்சாலை கட்டுவது போன்ற பல்வேறு விதமான கட்டுமான பணிகளுக்கு மரங்கள் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. ஆகையால், கட்டுமான தொழிலுக்கான மரங்களின் தேவை சுமால் 28.8 மில்லியன் கன மீட்டர் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிரி எரிபொருள் பயன்பாடு: உயிரி எரிபொருள் உற்பத்திக்கு பல்வேறு வகையான மர விதைகள் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக எண்ணெய் வித்து மரங்களான காட்டாமணக்கு, புங்கன், வேம்பு, இலுப்பை, புன்னை போன்ற மரங்கள் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதால் வருங்காலங்களில் இம்மரங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தீவனம்: வாகை, பூவரசு, வேம்பு, மலை வேம்பு, கிளைரி சிடியா, ஆல், அத்தி கொடுக்காய்ப் புளி, சுபா புல், வெள்ளக்கடம்பு, வேல மரங்கள் என பல்வேறு வகையான மரங்களின் இலைகள் நேரடி தீவனமாகவும் மேம்படுத்தப்பட்ட தீவனப் பொருளாகவும் கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூகப் பயன்பாடு: சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் மனதிற்கு அமைதியும், பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியான இனிய காட்சிகளும் கிடைக்கின்றன. அதிகரித்து வரும் நகர மயமாக்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் மரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
மண் வள மேம்பாடு: பல்வேறு மரங்களின் வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணியிரிகள் ஆகாயத்தில் உள்ள தழைச்சத்தை வேர் பகுதியில் நிலைநிறுத்தி மண் வளத்தை மேம்படுத்த உதவுகின்றன.
நீரின் ஆதாரம்: மரமே நீரின் மூலமாக உள்ளது. மலைப் பகுதியில் சூழ்ந்துள்ள வனங்களில் இருக்கும் மரங்களும், புல்வெளிகளும் மழை நீரை தக்க வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக வெளியேற்றுகின்றன. எனவேதான் வனங்கள் பல்வேறு ஆறுகளின் பிறப்பிடமாக உள்ளது. மேலும், மழை பொழியும் நாட்களை அதிகரிப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் நமக்கு நீரை அளித்து நன்மை செய்கிறது.
வழிபாட்டு மரங்கள்: வேம்பு, ஆல், அரசு என்று பல்வேறு வகையான மரங்கள் வழிபாட்டுக்கு உகந்தவையாக உள்ளன. ஹோமம், யாகம் வளர்ப்பதற்கு தேவையான குச்சி போன்றவற்றை குறிப்பிட்ட மரங்கள்தான் கொடுக்கின்றன. அதேபோல் குங்கிலியம் மரமும் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வாசனை திரவியங்கள் தயாரிக்க, மருத்துவப் பயன்பாட்டிற்கு என்று எல்லாவற்றிற்குமே மரங்களை சார்ந்துதான் மனிதன் வாழ வேண்டி இருக்கிறது.
ஆதலால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இருந்து, மனிதன் உயிர் மூச்சு விடுவது வரை அனைத்திற்கும் அவசியம் தேவைப்படுவது மரங்களே என்பதால் அவற்றின் புனிதத்தைப் போற்றிப் பாதுகாப்போம். வீட்டிலும் பொது இடத்திலும் முடிந்த வரை மரம் வளர்க்க துணிந்து செயல்படுவோம்.