‘ஸ்லாத்’ (Sloth) என்றால் தமிழில் சோம்பல் என்று பொருள். பெயருக்கு ஏற்றாற்போல் ஸ்லாத் என அழைக்கப்படும் சோம்பல் விலங்குகள் மெதுவாக இயங்கும். அவை தரையில் இருக்கும்போது மணிக்கு 0.24 கிலோ மீட்டர்கள் (மணிக்கு 0.15 மைல்கள்) மட்டுமே நகரும். இவை பற்றிய வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சில தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உருவ அமைப்பு: சோம்பல் விலங்குகளில் இரண்டு முக்கிய வகை உண்டு. இரண்டு கால் ஸ்லாத் மற்றும் மூன்று கால் ஸ்லாத் ஆகியவை. இவற்றின் உடலில் மாறுபாடுகள் இருந்தாலும் இவை இரண்டும் ஒரே மாதிரியான வாழ்விட மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளன.
பாசி முடி: இவற்றின் ரோமங்களில் பெரும்பாலும் பூஞ்சைகள் படர்ந்து இருக்கின்றது. அதனால் இவற்றின் உடல் பச்சை நிறத்தில் தோற்றம் அளிக்கிறது. இதைக்கொண்டு மரங்களில் தங்களை மறைத்துக் கொள்ளும். இதை பயன்படுத்திக் கொண்டு சில பூச்சிகள் இவற்றின் உடலில் ஒட்டிக் கொள்கின்றன.
உணவுப் பழக்கம்: இவை மிகக் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை உண்கின்றன. இலைகள், பழங்கள் போன்றவை இவர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளது. அதனால்தான் எப்போதும் சோம்பலாக இவை இருக்கின்றன. மரங்களில் ஏறுவதற்கு வலுவான வளைந்த நகங்களை இவை உபயோகப்படுத்துகின்றன.
ஒட்டுண்ணிகள்: மிக மெதுவாக இயங்குவதால் இவற்றின் உடலில் பல பூச்சிகள் ஒட்டுண்ணிகளாக சேர்ந்து அடர்ந்த ரோமங்களில் மறைந்து கொள்கின்றன. அதோடு, இவற்றின் ஊட்டச்சத்தை அந்த ஒட்டுண்ணிகள் உறிஞ்சிக் கொள்கின்றன.
சோம்பல் குழந்தைகள்: இவற்றின் குட்டிகள் பொதுவாக ஒரு வருடம் வரை தங்கள் தாயுடன் தங்கும். அந்த நேரத்தில் அவை அத்தியாவசியமான உயிர் வாழும் திறன்களை கற்றுக்கொள்ளும். பிறந்த சில வாரங்கள் வரை தங்களின் தாயின் வயிற்றில் ஒட்டிக் கொள்கின்றன. தனித்துவமான குரல் ஒலி மூலம் தாய் தங்கள் குட்டிகளுடன் தொடர்பு கொள்கின்றன.
தலைகீழ் வாழ்க்கை: இவை மரங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றின் உடல் அமைப்பு அந்த நிலைக்குப் பொருத்தமாக உள்ளது. இவற்றின் உடலில் ஒரு சிறப்பான காலர் எலும்பு உள்ளது. அது மரத்தில் சிரமம் இல்லாமல் தொங்குவதற்கு உதவுகின்றன.
நீண்ட உறக்கமும், செரிமான செயல்முறையும்: ஒரு நாளின் 20 மணி நேரத்தை இவை தூங்கியே கழிக்கின்றன. அப்போதுதான் அவற்றுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. மேலும், இந்த விலங்குகளின் வளர்சிதை மாற்றத்திற்கு தூக்கம் உதவுகிறது. உண்ணும் உணவுகள் மிகவும் குறைவு. அவற்றையே ஜீரணிக்க இந்த விலங்குகளுக்கு ஒரு மாதம் வரை ஆகும்.
நீச்சல் திறன்: சோம்பேறி விலங்குகளாக இருந்தாலும் இவை நன்றாக நீந்தக் கூடியவை. நீந்தும்போது 40 நிமிடங்கள் வரை இவற்றால் தங்கள் மூச்சை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள முடியும். நிலத்தில் மட்டும்தான் மிக மெதுவாக நகரும் இயல்புடையவை. ஆனால், தண்ணீரில் மூன்று மடங்கு வேகமாக நகர்கின்றன.
குறைவான இதயத்துடிப்பு: இந்த விலங்குகள் ஓய்வெடுக்கும்போது இவற்றின் இதயம் நிமிடத்திற்கு 27 முதல் 30 முறை மட்டுமே துடிக்கிறது. இந்த மெதுவான இதயத் துடிப்பு அவற்றின் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதத்தை கொண்டிருப்பதன் காரணமாக அமைகிறது. காடுகளில் 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. அவற்றின் மெதுவான நடை மற்றும் வாழ்க்கை முறை நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கின்றன.
கண் பார்வை: இவற்றிற்கு சிறந்த கண் பார்வை இல்லை. பெரும்பாலும் வாசனை மற்றும் செவிப்புலன் தொடர்புகளை நம்பியே இவை வாழ்கின்றன அதை வைத்து தம் வன வாழ்விடங்களுக்குச் செல்கின்றன.