
அனைத்துண்ணிப் பறவையான கோழி, காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும், கோழிப்பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. கோழிகள் பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்குப் பெயர் பெற்றது. உலகெங்கிலும் கோழிகளில் ஆயிரக்கணக்கான இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பண்புகளையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன. இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.
உலகில் உள்ள எல்லா கோழி இனங்களும் இந்தியாவை தாயகமாகக் கொண்ட சிவப்புக் காட்டு கோழியில் இருந்துதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆண் கோழிகளை 'சேவல்' என்றும், பெண் கோழிகளை 'கோழி' என்றும், பெட்டைக்கோழி என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது.
கோழிகள் நீண்ட தூரம் பறக்க முடியாதவை. ஆனால், ஆபத்து என்று வரும்பொழுது கோழிகள் பொதுவாக பறக்கும் தன்மையுடையவை. கோழிகள் நிலத்தைக் கிளறி விதைகள், சிறு தாவரங்கள், பூச்சிகள் மற்றும் சற்று பெரிய உயிரினங்களான பல்லி, எலி போன்றவற்றையும் உண்ணும்.
கோழிகள் சமூக உயிரினங்கள். இவை குழுக்களாக வாழ விரும்புகின்றன. இவை பலவிதமான ஒலிகளை எழுப்புவதன் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. சேவல்களின் கூக்குரல்கள் அருகில் உள்ள மற்ற சேவல்களுக்கு பிராந்திய சமிக்ஞைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை எதிர்பாராத இடையூறுகளின்போதும், ஆபத்து சமயங்களிலும் ஒன்றுக்கொன்று எச்சரிக்கை ஒலிகளை ஏற்படுத்தி தொடர்பு கொள்கின்றன. கோழிகள் முட்டையில் இருக்கும்பொழுதே தங்கள் குஞ்சுகளுக்கு ஒலிகளை கற்றுக் கொடுக்கின்றன.
கோழிகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு. இவை தங்கள் இனத்தின் 100க்கும் மேற்பட்ட முகங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டவை. அவை மனிதர்களையும் அடையாளம் காணும். கோழிகள் தூங்கும்போது REM (Rapid Eye Movement) உணர்வை வெளிப்படுத்துகின்றன. அதாவது மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் கனவு காணும் திறன் உள்ளது.
கோழிகளால் உப்பை ருசிக்க முடியும். ஆனால், இனிப்பு சுவையை உணர முடியாது. அத்துடன் இவை நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டவை. ஒரு நாட்டுக்கோழி ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 120 முட்டைகள் வரை இடும். இது கோழியின் இனம், உணவு, வளர்ப்பு முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல காரணங்களைப் பொறுத்தது. சில கோழிகள் வருடத்திற்கு 300 முட்டைகள் வரை கூட இடும்.
இந்தியாவில் வளர்க்கப்படும் பல பாரம்பரிய கோழியினங்கள் நாட்டுக்கோழிகள் எனப்படும். அசில், கடக்நாத், நியூ ஹாம்ப்டன், லெகார்ன், கிளி மூக்கு கோழி போன்ற இனங்கள் வளர்க்கப்படுகின்றன. கினிக் கோழி, வான்கோழி போன்ற இனங்களும் உலக அளவில் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்காவில் வாழ்ந்த 'peanut' என்ற கோழி 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, உலகின் மிக வயதான கோழியாக கின்னஸ் சாதனை படைத்தது. தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய ரெட் ஜங்கிள் ஃபௌல் என்ற காட்டுக்கோழி நாட்டுக் கோழிகளின் மூதாதையராகக் கருதப்படுகிறது.
ரெட் ஸ்டார் (Red Star) எனும் கோழி இனங்கள் சிறந்த முட்டையிடும் இனங்களில் ஒன்று. குறிப்பாக, அதிக முட்டை விளைச்சலுக்காக அறியப்படுகிறது. கோழிகளில் அதிக முட்டை இடும் திறன் கொண்ட கோழிகள், அதிக இறைச்சி உற்பத்தி செய்யும் வகையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் மற்றும் இரட்டை நோக்கம் கொண்ட (dual purpose) அதாவது, முட்டை மற்றும் இறைச்சி இரண்டிற்காகவும் வளர்க்கப்படும் இனங்கள் என உள்ளன.
கோழிகள் சமூகப் பறவையாக இருப்பதுடன், உரம் தயாரிக்க உதவும் தன்மையும் கொண்டுள்ளது. கோழி கழிவுகளை உரமாக்கி தோட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும். கோழிகள் தாவரங்கள், விதைகள், பூச்சிகள் போன்ற பல்வேறு உணவுகளை உட்கொள்ளும் தன்மை கொண்டவை. இவை பூச்சிகளையும், புழுக்களையும் உண்பதால், இயற்கையாகவே பூச்சி கட்டுப்பாடு சுற்றுச்சூழலுக்கு உதவுகின்றன.