
ஆப்பிரிக்காவில் ஒரு பறவையின் மீது மக்கள் சவாரி செய்கின்றனர். அதை வைத்து ஓட்டப்பந்தயங்களும் நடைபெறுகின்றன. அந்த வியத்தகு பிரம்மாண்டமான பறவைகள்தான் நெருப்புக் கோழிகள். அவற்றினைப் பற்றிய வியப்பான செய்திகளை இப்பதிவில் காண்போம்.
பறக்க இயலாத பறவை இனத்தைச் சேர்ந்த நெருப்புக்கோழிகள் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை. நீண்ட கழுத்துடனும், நீண்ட கால்களுடனும் தோற்றமளிக்கும் இவை இடும் முட்டைகளும் மற்ற அனைத்து பறவைகளின் முட்டைகளை விட உருவில் பெரியவை.
இவற்றின் நீளமான கழுத்தும் கால்களும் அதன் உயரத்திற்கு முக்கியமான காரணிகளாக அமைகின்றன. பொதுவாக இவற்றின் உயரம் தரையில் இருந்து 1.8 மீட்டர் முதல் 2.75 மீட்டர் வரை இருக்கும். பெடைக் கோழிகள் என்றால் அதிகபட்சம் 2 மீட்டர் உயரத்துடன் காணப்படும்.
நிலம் வாழ் முதுகெலும்பு உடைய அனைத்து உயிரினங்களிலும் இவற்றின் கண்களே மிகப்பெரியவை. கண்களின் குறுக்களவு 50 மில்லி மீட்டர் இருப்பதால் எதிரிகளை மிகத் தொலைவில் இருந்தே இவற்றால் கண்டுகொள்ள முடியும். மேலிருந்து சூரிய ஒளி கண்களில் நேரடியாக விழுவதை மறைக்கும் விதத்தில் கண்கள் அம்மையப் பெற்றிருப்பதால் இவை தெளிவான பார்வையைப் பெறுகின்றன.
நெருப்புக் கோழிக்கு இரண்டு விரல்களே உள்ளதால் இவற்றால் மிக விரைவாக ஓட முடிகிறது. நகம் மிருகங்களின் குளம்பைப் போல் காட்சியளிக்கிறது. இவற்றின் சிறகுகள் சுமார் இரண்டு மீட்டர் நீளமுடன் இருப்பதால், தனது இணையை கவர்வதற்கு களி நடனம் ஆடவும், குஞ்சுகளுக்கு நிழலாகவும் பயன்படுகிறது.
நெருப்புக் கோழிகளுக்கு தீனிப்பை, பித்தப்பை கிடையாது. ஆனால், மூன்று வயிறுகளும் 71 சென்டி மீட்டர் நீளமுள்ள குடற்பையும் இருக்கிறது. பிற பறவைகளைப் போல் அன்றி நெருப்புக்கோழிகளுக்கு தனியாக சிறுநீர் சுரக்கிறது.
இனப்பெருக்கக் காலத்திலும் மழையே இல்லாத வறட்சியான காலங்களிலும் ஐந்து முதல் 50 வரை ஒரு கூட்டமாக நிலையற்ற ஓர் இடம் விட்டு வேறு இடம் நகர்ந்து சென்று கொண்டிருக்கும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் பறவையே தலைமை தாங்குகிறது. அவை பெரும்பாலும் புல் மேயும் மிருகங்களான வரிக்குதிரைகள் மற்றும் மறிமான்களோடு சேர்ந்து பயணிக்கின்றன. நெருப்புக்கோழிகள் பகல் நேர பறவைகளாக இருப்பினும் நிலவு வெளிச்சம் இருக்கும் இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. எதிரியால் துரத்தப்படும்போது அதிகபட்சமாக 70 கிலோ மீட்டருக்கும் அதிக வேகத்தில் ஓடும் நெருப்புக்கோழிகளால் தொடர்ந்து நிலையாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும். இது உலகிலேயே மிக அதிக வேகத்தில் ஓடும் இரண்டு கால் உயிரினமாக விளங்குகிறது.
நெருப்புக்கோழிகள் முக்கியமாக விதைகள், புல் வகைகள், புற்றுச்செடிகள், பழங்கள் மற்றும் பூக்கள் இவற்றையே உணவாகக் கொள்கின்றன.சில சமயம் அபூர்வமாக வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளையும் பிடித்து உண்ணும். இவற்றிற்கு பற்கள் கிடையாது. ஆகையால், அவற்றின் அரவைப் பையில் உணவைக் கூழாக்க அரவை கற்களாக உதவும்படி சிறு கூழாங்கற்களையும் விழுங்குகின்றன. வளர்ச்சி அடைந்த ஆண் பறவை கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள கற்களை தனது வயிற்றில் சுமக்கிறது. உண்ணும்போதும் முதலில் தொண்டையை உணவால் நிறைத்துக் கொள்ளும். பிறகு அவை உணவு குழாயின் வழியே பந்து போன்று உருண்டு உருண்டையாக கீழே இறங்குகின்றன. இவற்றிற்கு தீனி பையும் இல்லாமல் இருப்பதால் தொண்டை வழியே கடந்து செல்லும் உணவு நேராக அரவை பைக்கு சென்று விடுகிறது. அங்கு அவை கூழாங்கற்களின் உதவியுடன் அரைக்கப்பட்டு கூழாக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் இதன் அரவை பையில் 1300 கிராம் எடையுள்ள உணவை அரைக்க முடியும்.
நெருப்புக்கோழிகள் பல நாட்கள் நீரே அருந்தாமல் பயணம் செய்கின்றன. உட்கொண்ட உணவில் உள்ள ஈரப்பதத்தை கிரகித்து அதை ஈடுகட்டுகின்றன. ஆயினும், நீர்நிலைகளைக் கண்டால் அவை ஆனந்தமாக நீர் அருந்துவதோடு அடிக்கடி குளித்து மகிழவும் செய்யும்.
விளையாட்டுகளில் பயன்படுத்தவும், மாமிசத்திற்காகவும் நெருப்புக்கோழிகள் பெரிதும் விரும்பப்பட்டன. இறகுகளுக்காக பல்வேறு காலப்பகுதியிலும் இவை வேட்டையாடப்பட்டன. ஆடைகளை அலங்கரிப்பதில் இவற்றின் இறகுகள் தனியிடம் பெறுகின்றன. 19ம் நூற்றாண்டில் அலங்கார தொப்பிகளை தயாரிப்போர் இதை வேட்டையாடி அழித்தனர். இவற்றின் தோலும் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்ததால் அந்த இனமே அழியும் வகையில் வேட்டையாடப்பட்டன. முதல் உலக யுத்தத்திற்கு பின்னரே இந்த இறகு வியாபாரம் வீழ்ச்சியடைந்தது. ஆயினும், 1970களில் மீண்டும் இவற்றின் இறகு மற்றும் தோல் வியாபாரம் பரவலாக சூடுபிடித்து உலக சந்தையில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நெருப்புக்கோழிகளின் மாமிசம் குறைந்த கொழுப்பையும், அதிக புரதம், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தையும் கொண்டிருப்பதால் பலராலும் அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது. காடுகளில் நெருப்புக்கோழிகளின் எண்ணிக்கை கடந்த இருநூறு வருடங்களில் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. வியாபார பண்ணைகளிலும், பூங்காக்களிலும் மட்டுமே இவை அதிக அளவில் வாழ்கின்றன. இந்த அரிய பறவை இனம் அழிவை நோக்கிச் செல்வது மனித சுயநலத்தின் மற்றொரு அவல முகமாகும்.