
இறைச்சி, பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் பண்ணை விவசாயத்தின் பரவலான நடைமுறை காரணமாக பண்ணை விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக உலக பண்ணை விலங்குகள் தினம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிரினங்கள் மீதும் காந்திஜி கொண்டிருந்த அக்கறை மற்றும் அஹிம்சை கொள்கையை ஆதரித்து, அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் 1983ம் ஆண்டு நிறுவப்பட்டது. தொழிற்சாலை பண்ணைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் வளர்க்கப்படும் பில்லியன் கணக்கான விலங்குகளின் துன்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனிதாபிமான உணர்வை மக்களிடையே வளர்க்கவும், பண்ணை விலங்குகளின் பாதுகாப்பிற்கான விதிமுறைகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் உதவுகிறது.
அகிம்சையின் சர்வதேச அடையாளம்: மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் கருணையின் சர்வதேச அடையாளமாகத் திகழ்கிறார். மேலும் காந்திஜி ஒரு நாட்டின் மகத்துவத்தையும் அதன் தார்மீக முன்னேற்றத்தையும் அந்நாட்டு விலங்குகள் நடத்தப்படும் விதத்தால் தீர்மானிக்க முடியும் என்று நம்பினார். இந்த நாள் சர்வதேச அகிம்சை தினத்துடனும் தொடர்புடையது. விலங்கு உரிமைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற விலங்கு விவசாய நடைமுறைகளுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டத்தை ஊக்குவிக்க அமைப்புகளும் ஆர்வலர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர்.
மகாத்மா காந்தி அனைத்து உயிரினங்களும் கருணையுடன் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளின் துன்பங்களை முன்னிலைப்படுத்தவும் அவற்றின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் உணவுக்காக வளர்க்கப்படும் பில்லியன் கணக்கான விலங்குகளை நினைவுகூர்ந்து, தேவையற்ற கொடுமைகளை தடுக்க ஒரு கூட்டு இயக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பண்ணை விலங்குகள் எதிர்கொள்ளும் சவால்கள்: பெரும்பாலான பண்ணை விலங்குகள் நெரிசலான கட்டுப்படுத்தப்பட்ட கூண்டுகள் அல்லது தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. அவை நடமாடுவதற்கு போதுமான இட வசதி தரப்படுவதில்லை. பெரும்பாலும் அவற்றிற்கு சூரிய ஒளி அல்லது நல்ல காற்று போன்றவை கிடைப்பதில்லை
கோழிகள் மற்றும் கர்ப்பிணிப் பன்றிகள் போன்ற விலங்குகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறிய கூண்டுகள் அல்லது பெட்டிகளில் கழிக்கின்றன. உணவு தேடுதல் அல்லது திரும்புதல் போன்ற இயற்கையான நடத்தைகளை அவை வெளிப்படுத்த முடியாமல் போகின்றன. சுகாதாரமற்ற நெரிசலான சூழ்நிலைகளில் அவை வாழும்போது நோய் தாக்கம், நாள்பட்ட மன அழுத்தம், உடல் காயங்கள், உடல் உறுப்புகள் பலகீனம் அடைதல், உறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
பண்ணையில் வைத்து வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பெரும்பாலும் அதிக அளவு நுண்ணுயிர் எதிர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவை எதிர்ப்பு பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இது ஒரு பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கிறது. கோழிகள் மிக விரைவில் வளர வேண்டும் என்பதற்காக அவற்றின் உடல் எடை அதிகரிக்க ஊசிகள் போடப்படுகின்றன. அதிக எடையைத் தாங்க முடியாததால் சில சமயங்களில் அவை மரணத்தை சந்திக்கின்றன. மனிதாபிமானமற்ற முறைகளில் வாலை நறுக்குதல், இறக்கைகளை வெட்டுதல், போன்றவையும் நடக்கின்றன.
பண்ணை விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் மனிதர்களுக்கும் பரவி அவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பண்ணை விவசாயம், பசுமை இல்ல வாயு வெளியேற்றம், மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பண்ணை விலங்குகள் நீண்ட தூரத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. வெப்பம் அல்லது குளிர் போன்ற அழுத்தமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதால் போக்குவரத்தின்போது பாதிக்கப்பட்டு இறப்பை சந்திக்கின்றன.
உலகின் பண்ணை விலங்குகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தொழிற்சாலை பண்ணைகளில் வாழ்கின்றன. பெரும்பாலான நாடுகளில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றன. விலங்கு நலனை மனதில் கொள்ளாமல் அதிக லாபத்தை முன்னிறுத்தி அவை வியாபாரிகளால் அதிகளவு துன்பத்தை அனுபவிக்கின்றன என்பது நிதர்சனம்.