
தோட்டம் அமைப்பது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயம். அதில் பச்சை பசேலென்று செடிகளும், பூக்களும் இருப்பதைத்தான் அனைவரும் விரும்புவோம். மனதுக்கு அமைதியையும், குளிர்ச்சியையும் தருபவை செடிகள். இத்தகைய செடிகளை வாங்கும் முன்பு சில விஷயங்களை கவனித்து செய்ய, தோட்டம் நம் மனதுக்கு சந்தோஷத்தைத் தரும்.
செடிகள் வாங்க நர்சரி போகும் முன்னரே இண்டோர் பிளாண்ட், அவுட்டோர் பிளாண்ட் என தரம் பிரித்து வாங்க முடிவு செய்யுங்கள். செடியை எங்கு வைக்கப்போகிறோம் எனவும் யோசித்து நல்ல வெயில் தேவையான செடிகள், வெயிலும், நிழலும் தேவைப்படுபவை என செடிகளைப் பார்த்து வாங்கி வைக்க வேண்டும். வாங்கும்போதே பெரிய, வளர்ந்த செடிகளாக வாங்காமல், சிறிய செடிகளாக வாங்கினால் பார்ப்பதற்கும், வளர்ப்பதற்கும் தோதாக இருக்கும்.
செடிகளுக்கான பராமரிப்பு மிகவும் முக்கியம். அதனால் அறிமுகமில்லாத செடிகளை தோட்டம் வைக்க ஆரம்பிக்கும்போதே வாங்குவதைத் தவிர்க்கலாம். மணி பிளாண்ட், ஸ்நேக் பிளாண்ட் போன்ற செடிகளை முதலில் வாங்கி வளர்க்கலாம். ஃபெர்ன், இங்கிலீஷ் ஐவி போன்ற செடிகள் அதிகம் ஈரப்பதம் தேவைப்படுபவை. குளிர்ச்சியான சூழலில் வளரக்கூடியவை. இவற்றை முதலிலேயே வாங்கி வளர்க்க, வாடி விட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
சீசன் செடிகளைப் பார்த்து வாங்க வேண்டும். சீசனில் பூக்கும், காய்க்கும் செடிகள் நர்சரியிலேயே பூத்து முடிந்திருக்கும். இலைகள் பழுத்து, வதங்கியிருந்தால் அவற்றை வாங்கக் கூடாது. நர்சரியில் குளிர்ச்சியான சூழலில் இருந்திருக்கும். சில செடிகள் வெப்பமான சூழ்நிலையில்தான் வளரும். இன்னும் சில செடிகள் வளராது. எனவே, சீசன் செடிகளை வாங்கும்போது மிகவும் கவனம் தேவை.
செடிகளை வாங்கும்போது அதற்கான மண்ணின் தன்மையை பார்த்து வாங்க வேண்டும். சில செடிகள் களிமண் போன்ற மண்ணில் வளர்ந்திருக்கும். இந்த வகை மண் தண்ணீரை அப்படியே வைத்திருக்கும். நாம் தினமும் தண்ணீர் ஊற்றி வர, அவை அழுகி விடும். மண்ணைக் கிளறினால் பொலபொலவென உதிர வேண்டும். தண்ணீர் தேங்காமல் ஊற்றும் நீர் வெளியேறினால்தான் செடிகள் நன்றாக வளரும்.
செடிகளை ஆன்லைனில் வாங்குவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். செடியின் தன்மை, வளர்ச்சி பற்றியும் அறியாமல் வாங்குவது வேண்டாம். அரசு தோட்டக்கலை துறை வழங்கும் வழிமுறைகளையும்,ஆலோசனைகளையும் பின்பற்றி செடிகளை வளர்த்திட நன்றாக செழித்து வளர்ந்து நல்ல பலன் தரும். அரசு தோட்டக்கலை துறையில் வளரும் செடிகளை வாங்க செலவும் குறைவாக வரும், வெரைட்டியாகவும் வாங்கலாம்.
பிடித்த மாதிரி தோட்டம் அமைத்து செடி, கொடிகளைப் பராமரிப்பது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. பசுமையான செடிகளை வளர்ப்போம். உடலும் மனமும் மேன்மை பெறுவோம்.