
இரவு நேரங்களில் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வதைப் பார்க்கையில் மிகவும் அழகாக இருக்கும். மின்மினிப் பூச்சிகள் எப்படி இருட்டில் ஒளியை பரவச் செய்கின்றன? மின்மினிப் பூச்சிகள் நாம் நினைப்பது போன்று பூச்சி இனத்தைச் சார்ந்தது அல்ல, அவை வண்டு இனத்தைச் சார்ந்தவை.
மின்மினிப் பூச்சிகள் அதன் உருவத்தினுள் ஒரு ரசாயனக் கூட்டத்தையே வைத்திருக்கின்றன. இதன் வயிற்றினுள் ஐந்து விதமான கெமிக்கலை வைத்திருக்கிறது. அதிலுள்ள முக்கியமான ரசாயனத்தின் பெயர், ‘லூயிசிப் பெரின்’ (Lucipherin). இதனுள் எப்பொழுது ஆக்ஸிஜன் நுழைகிறதோ அப்போது ஒரு தூண்டுதல் சக்தி அதனுள் ஏற்படுகிறது. அந்தத் தூண்டுதல் சக்தி அதன் வயிற்றினுள் இருக்கும் அந்த ஐந்து ரசாயனங்களை ஒன்று சேர்க்கிறது. அதனாலேயே இவற்றுக்கு ஒளிரும் தன்மை ஏற்படுகிறது. சிறிது நேரம் சென்றதும் மற்றொரு தூண்டுதல் சக்தி ஏற்பட்டு ஒளிரும் தன்மையை அணைத்து விடுகிறது. பின்னர் மீண்டும் ஒளிரும் நிகழ்வு நடைபெறுகிறது. இதுதான் மின்மினிப் பூச்சிகள் ஒளி உமிழும் ரகசியம்.
மின்சார பல்புகள் ஒளிரும்போது அதிக அளவில் வெப்பம் வெளிப்படுகிறது. ஆனால், மின்மினிப் பூச்சியின் ஒளியானது குளிர்ந்த ஒளியாகும். இதன் ஒளியில் இருந்து வெப்ப வடிவில் ஆற்றல் வீணாவதில்லை. மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வதற்கு காரணம், அது தனது துணையை ஈர்ப்பதற்காகத்தான். ஒரே இனத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தொடர்புகொள்ளும் ஒரு வழியாக முன்னும் பின்னுமாக சிக்னல்களை ஒளிரச் செய்யும். ஒவ்வொரு மின்மினிப் பூச்சி இனத்திற்கும் அதன் சொந்த குறிப்பிட்ட ஒளிரும் அமைப்பு உள்ளது. மின்மினிப் பூச்சிகள் தங்கள் இணையை ஈர்ப்பதற்காகவே ஒளியைப் பரப்புகின்றன.
ஒரு ஆண் மின்மினிப் பூச்சி ஒளியை உமிழும் அதன் வெளிச்சம் 3 அடி தூரத்தில் உள்ள பெண் மின்மினிப் பூச்சியை கவரும். பதிலுக்கு அதுவும் ஒளியை உமிழும். இப்படித்தான் அவை ஒன்று சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும். ஆனால், தற்போது உள்ள மின்சார விளக்குகள் குறிப்பாக, எல்.இ.டி பல்புகளின் ஒளி வெள்ளத்தில் ஆண் மின்மினிப் பூச்சி உமிழும் ஒளி வெளியே தெரியாமல் போய் விடுகிறது. இதன் காரணமாக அவை ஜோடி சேர்ந்து இனப் பெருக்கம் செய்ய முடியாமல் அதன் இனப்பெருக்கம் குறைந்து, அழியும் நிலையில் உள்ளது என்று கூறுகிறார்கள், இது பற்றி ஐந்து வருடங்களாக ஆய்வு மேற்கொண்ட டேராடூன் எரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல்கள் கிடையாது. அவை, உடலின் வெளிப் பகுதியில் இருந்து உட்புறச் செல்களுக்கு ‘ட்ராக்கியோல்கள்’ எனப்படும் ஒருவிதமான தொடர் குழாய்கள் மூலம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கின்றன.
உலகில் 2200 வகையான மின்மினிப் பூச்சிகள் உள்ளன. அதில் 50 மட்டுமே இந்தியாவில் இனம் கண்டறியப்பட்டுள்ளது. பெண் பூச்சிகளைக் காட்டிலும் ஆண் பூச்சிகளே அதிகமாக ஒளியை வெளியிடும். மின்மினிப் பூச்சிகளால் வேகமாக பறக்க முடியாது. மின்மினிப் பூச்சிகளின் ஆயுட்காலம் 2 மாதங்கள் ஆகும்.
பழங்காலத்தில் காடுகளில் இரவு நேரங்களில் இந்த மின்மினிப் பூச்சிகளை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு அதை லாந்தர் விளக்கு போல கைகளில் எடுத்துச் செல்வார்களாம். கியூபா நாட்டு பெண்கள் இப்பூச்சியை சட்டையில் குத்திச் செல்வார்கள். வேறு சிலர் இதை இரவில் நெக்லஸ் போல அணிந்து கொள்வார்களாம்.
கோடைக்காலம் வந்துவிட்டது என்பதை மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதை வைத்து அறிந்துகொள்ள முடியும். ஆனால், தற்போதைய காலத்தில் இரவில் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வதைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1 முதல் 2 சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது.
மின்மினிப் பூச்சிகள் குறைந்து வருவது நம்மைதான் பாதிக்கும். காரணம், மின்மினிப் பூச்சிகள் புழுக்களையும் சில வகை நத்தைகளையும் உணவாக உட்கொள்ளும். வளர்ந்த பூச்சிகள், மகரந்தத் துகள்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன. இதன் மூலம் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.