கடலில் வாழும் கொடிய விஷமுள்ளது கல் மீன். தோற்றத்தில் இவை கல்லைப் போன்றே கரடு முரடான தோற்றத்தில் காணப்படுவதால் இது கல் மீன் என்று அழைக்கப்படுகின்றன. இம்மீன்கள் ‘சினான்சீடே’ குடும்பத்தைச் சேர்த்தவை. மீன் இனத்தில் அதிக விஷமுடைய மீனாகக் கருதப்படுவது இந்த கல் மீன்களாகும். கல் மீன்களின் இனத்தில் பொதுவாக ஐந்து வகைகள் காணப்படுகின்றன. கல் மீன்கள் சிவப்பு, சாம்பல், மஞ்சள், பச்சை, வெள்ளை, பழுப்பு வண்ணங்கள் என பல வகையான நிறங்களில் காணப்படுகின்றன.
கல் மீன்கள் பொதுவாக கடலில் வாழும் இயல்புடைவைகளாக இருந்தாலும் நன்னீர் மற்றும் முகத்துவாரங்களிலும் வாழ்கின்றன. ஆழ்கடல் பகுதிகளில் பாறைகளின் இடுக்கிலும் இவை காணப்படுகின்றன.
சுமார் பதினைந்து முதல் இருபது அங்குலம் நீளம் வரை வளரும் இந்த மீன்களின் எடை சுமார் மூன்று கிலோ வரை இருக்கும். இவை நீருக்கு வெளியே சுமார் ஒரு நாள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் உடையது.
கல் மீன்களின் உடலில் ஊசி போன்ற முள் துடுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் கீழ்ப்பகுதிகளில் விஷம் நிறைந்த பைகள் அமைந்துள்ளன. இந்த அமைப்பானது எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கும் தனது இரையைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. கல் மீன்களின் விஷமானது சைட்டோடாக்சின்கள் மற்றும் நியூரோடாக்சின்களால் ஆனது. பதிமூன்று முட்களால் ஆன கல் மீனின் முதுகுப்புறத் துடுப்பின் கீழ் பகுதியில் விஷத்தன்மை கொண்ட திரவப்பை உள்ளது.
ஆபத்து சமயங்களில் முதுகுப்புற துடுப்பில் உள்ள முட்கள் பெரிதாகி அதை மிதிப்பவர்களின் உடலில் விஷத் திரவம் இறங்கி ஆபத்தை உருவாக்கும். இந்த மீனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழக்கும் அபாயம் நேரிடலாம். கல் மீனின் விஷப்பையானது அது காலியான இரண்டு வாரங்களில் மீண்டும் உற்பத்தியாகி நிறைந்து விடும்.
மெதுவாக நீந்தும் வழக்கம் உள்ள கல் மீன்கள் சிறிய வகை மீன்களையும் இறால்களையும் தங்கள் உணவாக உட்கொள்ளுகின்றன. இவை வழக்கமாக இரவில் தனது இரையை வேட்டையாடுகின்றன. கல் மீன்கள் திமிங்கலங்கள் மற்றும் வெள்ளை சுறாக்களால் வேட்டையாடப்படுகின்றன. திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் ஐம்பது கல் மீன்களை சாப்பிட்டு விடும் இயல்புடையது.
ஒரு சமயத்தில் லட்சக்கணக்கான முட்டைகளை இட்டாலும் அதிலிருந்து சொற்ப அளவிலேயே குஞ்சுகள் பொரிக்கின்றன. கல் மீன்கள் ஐந்து ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
சீனா, ஜப்பான் முதலிய நாடுகளில் கல் மீன்களை உணவாகவும் எடுத்துக் கொள்ளுகிறார்கள். கல் மீனை வேக வைத்ததும் அவற்றின் உடலில் உள்ள விஷமானது நீங்கி விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த மீனை சாப்பிடுவோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.