ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் பிள்ளைகளின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருப்பார்கள். நம் பிள்ளைகள் எல்லா விஷயத்திலும் முன்னோடியாகவும், முதல் மாணவனாகவும், வீட்டில் பெற்றோர்களின் பேச்சைக் கேட்கும் பிள்ளைகளாகவும் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
கனவு காண்பது ஒன்றும் தவறல்ல. ஆனால், அந்த இலக்கை நோக்கி நம் குழந்தைகளை நாம் அழைத்துச் செல்கிறோமா என்பதுதான் கேள்வி. குழந்தைகளிடம் நம்முடைய எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. சில சமயம் அது ஏமாற்றத்தில் கொண்டு விடுகிறது. இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியது பெற்றோராகிய நாம்தான்.
ஆரோக்கியமான நடத்தைக்கு வித்திடுங்கள்: படிப்பில் ஆர்வம் இல்லையா? நாலு திட்டு திட்டிவிட்டு டியூஷனுக்கு அனுப்பி வைக்கிறோம். அவன் ஏன் ஆர்வமாக இல்லை என்பதை தெரிந்துகொள்ள முயல வேண்டும்.
டிவி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, சத்தில்லாத தின்பண்டங்களை சாப்பிடுவது, பிடிவாத குணத்துடன் இருப்பது, சின்ன விஷயத்திற்கும் மன தைரியம் இன்றி உடைந்து போவது என வளரும் குழந்தைகளை திட்டுவதும் கண்டிப்பதும் மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும். அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணும். அதற்கு பதில் அவர்களின் நல்ல நடத்தைகளை அடையாளம் கண்டு பாராட்டி ஊக்குவிக்க நேர்மறையான எண்ணங்கள் தோன்றி வேரூன்றி விடும்.
டாக்டர் அப்துல் கலாம், ‘உன் வருங்காலத்தை உன்னால் மாற்ற இயலாது. ஆனால், உன் பழக்கங்களை மாற்று. அது உன் வருங்காலத்தை மாற்றிவிடும்’ என்று கூறியுள்ளார். நாம் சிறிது முயற்சி செய்து அவர்களின் பழக்கங்களை மாற்றி விட வளர்ச்சி தானாகவே ஏற்படும்.
மனத்திறன் மற்றும் சமூகத் திறன்களை உருவாக்குதல்: மனித செயல்பாட்டின் ஆணிவேர் 'மூளை.' அதன் நலமே மனநலம். அதன் நலமே உடல் நலம். எனவே, முதலில் நம் பிள்ளைகளின் கவனக் குறைவையும், கவனமின்மையையும் மாற்றி படிக்கும் விஷயங்கள் அல்லது செய்யும் எந்த செயல்களையும் மனதில் பதிய வைக்க, பயிற்றுவிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு மனத்திறனை ஏற்படுத்த மனக்கட்டுப்பாடு அவசியம் என்பதை உணர்ந்து அந்தத் திறன்களை வளர்க்க உதவ வேண்டும்.
சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்: பிள்ளைகளுக்கு சுதந்திரமும், பொறுப்புணர்வும் முக்கியமான குணங்கள். அவற்றை வளர்க்க குழந்தைகளை அதிகம் பொத்தி வைக்காமல் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க அனுமதிப்பதுடன் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்கள் உங்களை அதிகம் சார்ந்தவர்களாக இருக்க விடாதீர்கள். உங்களை அதிகம் சார்ந்திருக்கும்படி வளர்த்தால் அவர்களுடைய செயல் திறன் குறையும் என்பதுடன் தோல்விகளை சந்திக்கும் மனநிலையுமின்றி வளர்வார்கள்.
மைக்ரோமேனேஜ் செய்யாதீர்கள்: பிள்ளைகள் சவால்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்ல உதவுங்கள். வழிகாட்டுங்கள். ஆனால், அவர்களை மைக்ரோமேனேஜ் செய்யாதீர்கள்.
நல்ல முன்மாதிரியாக இருத்தல்: பிள்ளைகளின் முதல் முன்மாதிரி பெற்றோர்கள் தான். அவர்கள் உங்களுடைய செயல்களைத்தான் பின்பற்றுகிறார்கள். பிள்ளைகள் எதிர்மறையான மற்றும் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க பெற்றோர்கள் சுயக் கட்டுப்பாடுடனும், தன்னலமற்ற நடத்தையுடனும் இருப்பதை உறுதி செய்து சிறந்த முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், பெற்றோர்களைப் பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றன. பிள்ளைகளுடன் போதுமான நேரத்தை செலவிட்டு அவர்களை சமூகத்தில் சிறந்த பிரஜையாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை.