புதுமணத் தம்பதிகள் எப்பொழுதும் அன்புடனும் ஒற்றுமையுடனும் இருப்பதற்கு வாழ்வில் ஐந்து வழிகள் அவசியமானது .அவை என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்.
குடும்பம்: திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் குடும்பத்தாருடன் பேசி ஒரு சமூகமான முடிவுக்கு வர வேண்டும். ஒரே குடும்பத்தில் இருப்பதா? அல்லது பிரிந்து இருப்பதா? என்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. சிலர் திருமணம் முடிந்தவுடன் தனியாக சென்று விடுகிறார்கள் அல்லது ஏதாவது ஒரு வீட்டு பக்கமே அதிக ஓட்டுதலோடு இருந்து விடுகிறார்கள் . இரண்டு வீட்டுப் பக்கமும் ஒரே மாதிரி அக்கறை காட்டுவதில்லை. இதனால் தான் குடும்பத்தில் சில நெருடல்கள் ஏற்படுகின்றன.
இதை தவிர்ப்பதற்கு இரண்டு குடும்பத்தாரும் ஒரே மாதிரி வந்து போவது, எல்லோருமாக சேர்த்து ஒரு கெட் டு கெதர் வைப்பது போன்றவற்றை அவ்வப்பொழுது செய்து வந்தால் குடும்பத்தில் பாசம் பொங்கும். அமைதி நிலவும். தம்பதியர்களும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். தனியாக இருக்கிறார்கள் என்றால் பெற்றோர்களும் அதற்கு சம்மதிக்க வேண்டும் .பக்கத்திலேயே இருந்து எப்பொழுதும் சுதந்திரக் குறைவாக இருப்பதை விட தூரத்திலிருந்து அவரவர் வாழ்க்கையை ரசித்துக்கொண்டு நீ நன்றாக இருக்கிறாயா நான் நன்றாக இருக்கிறேன் என்று கேட்டு பண்டிகை, விழா காலங்கள், முக்கியமான நேரங்களில் சந்தித்தால் யார் மனதும் புண்படாது. ஆதலால் கூடி பேசி முடிவை எடுத்து விட்டால் யார் மீதும் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட மாட்டாது.
உடல் நலம்: இரண்டு பேருக்கும் ஏதாவது உடல் நலப் பிரச்னைகள் இருந்தால் அதற்கு மருத்துவரிடம் சென்று நல்ல ஆலோசனை பெற்று, அதை தீர்ப்பதற்கான வழியைப் பின்பற்றுவது அவசியம். இதனால் மனக்கசப்பு ஏற்படாது. ஒருவரின் உடல் நிலையில் மற்றவர் அக்கறை காட்டுவதற்கும் நேர அவகாசம் கிடைக்கும். இதிலிருந்து நல்ல புரிந்துகொள்ளல் ஆரம்பிக்கும்.
வேலை: சில குடும்பங்களில் திருமணம் ஆனதும் பெண்களை வேலைக்கு அனுப்ப விரும்ப மாட்டார்கள். இன்னும் பலர் பெண்கள் குறைவாகப் படித்திருந்தால் மணமகன் வீட்டாரே உற்சாகப்படுத்தி அதிகமாகப் படிக்க வைத்து வேலைக்கு செல்ல அனுமதிப்பார்கள். ஆதலால் இருவரும் அதைப் பற்றி விவாதித்து நல்ல முடிவுக்கு வருவது திறமையை மேம்படுத்த உதவும். இதனால் குடும்பத்தில் மாமியார், மாமனார், பெற்றார், உறவினர் உட்பட அனைவரின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க முடியும். ஆதலால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருப்பதை புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற தம்மால் இயன்ற ஆதரவை வழங்கும்பொழுது இருவருக்கும் இடையேயான திருமண பந்தத்தில் வலிமை அதிகமாகும்.
பக்தி: இறை நம்பிக்கையில் சிலர் எதிரும் புதிருமாக இருப்பார்கள். ஆனால், ஒற்றுமையாக இருப்பார்கள். கணவர் பக்தியாக இருப்பார். மனைவி அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றாலும் விட்டுக்கொடுத்துப் போவார். இன்னும் சில வீடுகளில் மனைவியின் தெய்வப் பக்தியை மதித்து அவர் விளக்கேற்றினால் தனக்கு வியர்த்தாலும் ஃபேன் போட்டால் விளக்கு நின்று விடும் என்று மனைவிக்கு கணவன் மரியாதை கொடுப்பதும் உண்டு. சின்னதாக உள்ள வீட்டில் இதெல்லாம் நடப்பது சகஜம். அவர் மனைவிக்குக் கொடுக்கும் மரியாதையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இதுபோல் விட்டுக்கொடுத்துப் போகும்போது குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.
வரவு செலவு: நிதி அமைப்புப் பற்றி பேசி முடிவு எடுப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் குடும்பம் நடத்துவதற்கு எவ்வளவு தேவைப்படும், எவ்வளவு பணம் சேமிக்க முடியும். முதலீடு செய்ய முடியும். காப்பீடு செய்ய முடியும். ஏதாவது வீட்டில் விசேஷம் நடத்துவதென்றால் அதற்கு எவ்வளவு ஒதுக்கி வைக்க வேண்டும். குழந்தை பிறந்தால் அதற்கு எவ்வளவு தேவைப்படும் போன்றவற்றை கணக்கிட்டு அதற்குத் தக்கபடி நிதி நிர்வாகம் செய்வது அவசியம். இதனால் ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பாதுகாக்க முடியும். வரவு எட்டணா, செலவு பத்தணா என்று இல்லாமல், வரவு பத்தணா செலவு எட்டணா என்ற அளவில் குடும்பம் நடத்துவதற்கு இந்தத் துல்லியமான கணிப்பு அவசியம் தேவை.
இதுபோல் ஒவ்வொன்றையும் தீர்க்கமாக, தெளிவாகப் பேசி வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பித்தால் ஒற்றுமைக்குக் கேட்கவா வேண்டும். அதேபோல், குடும்ப உறவுகளையும், நட்பு வட்டத்தையும் இருவரும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களுடன் தொடர்பில் இருப்பது இன்னும் திருமண பந்தத்தை வலுவாக்கும்.